Cinema

நயன் vs தனுஷ் மோதல்... “இதுதான் பா அந்த ரூ.10 கோடி கிளிப்..” - வீடியோவை வெளியிட்டு விக்னேஷ் சிவன் பதிலடி!

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் 'நானும் ரௌடி தான்'. இந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், அதனை அவர்களும் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து 2022, ஜூன் மாதம் திரைபிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். தற்போது இவர்களுக்கு உயிர், உலோக் என்ற பெயரில் இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில், இவர்களது திருமண வாழ்க்கை குறித்த ஆவணப்பட வீடியோ வெளியீட்டுக்காக தயாராகி கொண்டிருந்தது.

'Nayanthara: Beyond the Fairytale' என்ற பெயரில் உருவான இந்த ஆவணப்படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கினார். தொடர்ந்து இது வெளியீட்டுக்கு தயாராகி கொண்டிருந்த நிலையில், காரணம் எதுவும் வெளியே தெரியாமல் தள்ளிப்போனது. இந்த சூழலில் வரும் நவ.18-ம் தேதி நயன்தாரா பிறந்தநாளன்று Netflix ஓடிடி தளத்தில் இந்த ஆவணப்படம் வெளியாகவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

மேலும் இதன் டிரைலரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் தற்போது இந்த ஆவணப்படத்தில் இவர்களது காதல் உருவான படமான 'நானும் ரௌடி தான்' படத்தின் காட்சிகள், ஷூட்டிங் எடுத்தபோது இருந்த காட்சிகள் உள்ளிட்டவையை பயன்படுத்தியதற்காக தற்போது நடிகரும், நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ், ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து இதுகுறித்து நடிகை நயன்தாரா நீண்ட கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகர் தனுஷுக்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, இவை அனைத்தும் பழி வாங்கும் நடவடிக்கை என்றும், தன் மீதான பகைக்காகவே இதுபோன்ற விஷயங்களை செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இந்த காட்சிகளை பயன்படுத்துவதற்காக தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக தாங்கள் காத்திருந்ததாகவும், ஆனால் தனிப்பட்ட பகைக் காரணமாக NOC மறுக்கப்பட்டதாகவும், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதோடு சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு ரூ.10,00,00,000 (பத்து கோடி) நஷ்ட ஈடு கேட்டு Legal Notice அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், அதுவும் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு இப்படி நடந்து கொள்வது கீழ்தரமான செயல் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அப்பாவி ரசிகர்கள் மத்தியில் எல்லா மேடைகளிலும் நீங்கள் சொல்லும் "spread Love” என்பதை, வெற்று வார்த்தைகளாய் மட்டுமின்றி, ஒரே ஒரு முறையாவது வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் எனவும் நடிகர் தனுஷுக்கு எதிராக தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

நடிகை நயன்தாராவின் இந்த வெளிப்படையான குற்றச்சாட்டு தற்போது தென்னிந்தியா மட்டுமின்றி, இந்திய திரையுலகிலும் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறியிருக்கும் நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகர் தனுஷுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது, “எங்கள் ஆவணப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டு, நெட்ஃபிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் இந்த காட்சிதான் அந்த ரூ.10 கோடி மதிப்பிலான கிளிப்... இங்கே இலவசமாக பாருங்கள்” என்று குறிப்பிட்டு, அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். மேலும் அதில் #SpreadLove என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், “இந்த காட்சி எங்கள் இதயத்தில் எப்போதும் வாடகை இல்லாமல் குடியிருக்கும்...” என்றும் பதிவிட்டுள்ளார். நயன்தாராவை தொடர்ந்து விக்னேஷ் சிவனும் நடிகர் தனுஷுக்கு பதிலடி கொடுத்துள்ளது திரையுலகில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”இது கீழ்தரமான செயல்.. இழிவான, போலியான முகமூடியை அணிந்தவர்” - தனுஷை விமர்சித்து நயன்தாரா அறிக்கை !