Cinema

HipHop Tamizha-வின் இசை நிகழ்ச்சி: பார்வையாளர்கள் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்... முழு விவரம் என்ன?

நந்தனம் YMCA மைதானத்தில் 19.10.2024 அன்று ஹிப்ஹாப் தமிழாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு செல்ல பார்வையாளர்கள் மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்யலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நந்தனம் மெட்ரோ நிலையத்திற்கு மிக அருகில் உள்ள YMCA மைதானத்தில் 19.10.2024 அன்று நடைபெறவுள்ள "HipHop Tamizha Return of the Dragon Machi! நிகழ்விற்கு செல்லும் பயணிகளுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், "M/s GSS Torque Entertainment LLP" உடன் இணைந்து ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணத்தை பயணிகளுக்கு வழங்குகிறது.

"Paytm Insider" மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணம் வழங்கப்படும். இந்த முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும்.

நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட் உடன் வழங்கப்பட்டுள்ள Metro Pass-யை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகையை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.

நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு, நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் 00:15 மணிக்கும், விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி இரயில் 00:30 மணிக்கும் புறப்படும். பயணிகள் கடைசி இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பச்சை வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் வழித்தட மாற்றம் செய்து கொள்ளலாம்"என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Also Read: ”எந்த மழை வந்தாலும் அதை சந்திக்க அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!