Cinema

தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு : டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்கு - நடந்தது என்ன?

கடந்த மாதம் கேரளாவின் மலையாள திரையுலகை உலுக்கிய ஹேமா கமிட்டியின் அறிக்கையானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சினிமா வாய்ப்புக்காக திரை நடிகைகள் பாலியல் ரீதியாக பல்வேறு தொல்லைகள் அனுபவிப்பதாக ஹேமா கமிட்டி

கடந்த மாதம் கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையானது, மலையாள திரையுலகில் நடிகைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துன்புறுத்தல் குறித்தான விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. இந்த அறிக்கை மூலம் தொடர்ந்து நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக புகார் அளித்து வருகின்றனர்.

இந்த புகாரின் பேரில், நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூரியா, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த விவகாரத்தை தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழ் நடிகைகள் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் Youtube சேனலுக்கு பேட்டியளித்த டாக்டர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 9 நாட்களுக்கு முன்னர் தனியார் யூடியூப் சேனலில் ‘சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் நடிகைகள் பட்டியல் வெளியிட்ட டாக்டர் காந்தராஜ்’ என்ற தலைப்பில் வெளியான வீடியோவில் சினிமா விமர்சகர் என்று கூறப்படும் டாக்டர் காந்தராஜ் என்பவர் நடிகைகள் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசியிருந்தார். இந்த வீடியோவை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் முக்தார், காந்தராஜிடம் அவதூறான கேள்விகள் கேட்க கேட்க, காந்தராஜும் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருந்தார்.

இதில் மறைந்த நடிகைகள் உள்பட, உயிருடன் இருக்கும் பழம்பெரும் நடிகைகள், இப்போதுள்ள நடிகைகள் என சினிமாத்துறை சார்ந்த அனைத்து நடிகைகள் குறித்தும் ஆபாசமாக பேசியிருந்தார். மேலும் அனைத்து நடிகைகளும் சினிமாத்துறை சார்ந்தவர்களிடம் ‘அட்ஜஸ்மென்ட்’ செய்வதாகவும் ஆதாரமின்றி அருவருக்கத்தக்க வகையில் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இவரது பேச்சு இணையத்தில் பல்வேறு கண்டனங்களை எழுப்பிய நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டி தலைவரான நடிகை ரோகிணி கடந்த வாரம் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டாக்டர் காந்தராஜ் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி டாக்டர் காந்தராஜ் மீது BNS 296, 75(1)(4), 352, ஐடி உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் காந்தராஜை கைது செய்யும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். டாக்டர் காந்தராஜ், எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்த ராஜாராம் மோகன் ராமின் சகோதரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பிரபல நடனக் கலைஞர் ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் நடனக் கலைஞர் பாலியல் புகார் !