Cinema

இந்திய திரையுலகை உலுக்கும் மலையாள சினிமா பாலியல் விவகாரம் : மௌனம் கலைத்த முக்கிய நடிகர்கள் !

மலையாள திரையுலகேயே தற்போது உலுக்கி வரும் நடிகைகள் மீதான திரை பிரபலங்களின் பாலியல் அத்துமீறல் விவகாரம் இந்திய திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஹேமா கமிட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையின் மூலம், நடிகைகள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும், மலையாளத் திரையுலகம் மாஃபியா பிடியில் சிக்கி உள்ளதும் தெரியவந்தது.

இந்த விவகாரத்தை தொடர்ந்து நடிகைகள் சிலர் வெளிப்படையாக புகார்கள் வைத்து வருகின்றனர். இந்த புகார்களின் அடிப்படையில் மலையாள நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூரியா, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் மோகன்லால், மலையாள திரை நடிகர்கள் சங்கத்தில் இருந்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததுடன், அவருடன் சேர்ந்து 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மலையாள சினிமாவின் முக்கிய நடிகர்கள் வாய் திறக்காமல் இருந்த நிலையில், நேற்று நடிகர் மோகன்லால் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தான் ஓடி ஒளியவில்லை என்றும், பவர் குரூப் பற்றி தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார். மேலும் ஹேமா கமிட்டி ரிப்போர்ட் குறித்து பதில் கூறவேண்டியது `அம்மா' அமைப்பு மட்டும் அல்ல என்றும், சினிமாத்துறை முழுவதும் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதோடு மலையாள சினிமா தொழில் தகர்ந்துபோகும் நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், மலையாள சினிமாவை குறிவைத்து இந்த துறையை மொத்தமாக தகர்த்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் இது போன்ற புகார்கள் இனி ஏற்படாதவகையிலான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நடிகர் மோகன்லால் செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து, நடிகர் மம்முட்டி தற்போது இதுகுறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளார். இதுகுறித்தும் அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "இதுபோன்ற பிரச்னைகளில் நடிகர்கள் அமைப்பே முதலில் பதிலளிப்பது முறை. அந்த வகையில், முறையான பதில்களுக்குப் பிறகு ஒரு உறுப்பினராகக் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று நம்பியதால் இவ்வளவு நாள் காத்திருந்தேன்.

சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. சமூகத்திலுள்ள நல்லது கேட்டது அனைத்தும் திரைத்துறையில் இருக்கிறது. திரையுலகம் என்பது சமூகம் உன்னிப்பாகக் கவனிக்கும் ஒன்று. அதனால், இந்தத் துறையில் தவறானவை ஏதும் நடக்காத வண்ணம் திரைத்துறையினர் கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும். அப்படியிருக்க, இதில் நடக்கக் கூடாத ஒன்று நடந்ததையடுத்து, அதன் மீதான நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகளைப் பரிந்துரைக்க, திரைத்துறையை ஆய்வுசெய்ய அரசால் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை முழு மனதுடன் ஆதரித்து வரவேற்கிறேன். அவற்றை நடைமுறைப்படுத்த திரைத்துறையிலுள்ள அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. இந்த விவகாரத்தில் இப்போது எழுப்பப்பட்டிருக்கும் புகார்களை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஹேமா அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சட்டத் தடைகள் இருந்தால் தேவையான சட்டம் இயற்ற வேண்டும். ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, போலீஸார் நேர்மையாக இதனை விசாரிக்கட்டும். நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்யட்டும்.

சினிமாவில் 'பவர்ஹவுஸ்' என்று எதுவும் கிடையாது. சினிமா என்பது இதுபோன்ற விஷயங்கள் இருக்கக்கூடிய களமும் அல்ல. சினிமா உயிர்ப்போடு இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மலையாள திரையுலகை உலுக்கும் இந்த விவகாரத்தை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த அறிக்கையும் தெலங்கானா அரசு வெளியிட வேண்டும் என்று நடிகை சமந்தா உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Also Read: அடுத்தடுத்து வெளியாகும் பாலியல் புகார்கள் : தெலங்கானா அரசுக்கு நடிகை சமந்தா கோரிக்கை !