Cinema
“இப்படிப்பட்டவர்கள் மத்தியில்தான் வேலை பார்த்தோமா... பயமா இருக்கு... " - நடிகை ஊர்வசி விளாசல் !
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மலையாள திரையுலகில் நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் அறிக்கை சில காரணமாக வெளியிடாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் வெளியானது. சுமார் 233 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும், மலையாளத் திரையுலகம் மாஃபியா பிடியில் சிக்கி உள்ளதும் தெரியவந்தது. பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ளுமாறு பெண்களை வற்புறுத்துவதாகவும், ஒத்துழைப்பவர்கள், ஒத்துழைக்காதவர்கள் என்று முத்திரை குத்தி படவாய்ப்புகள் வழங்கப்படுவதாகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாலியல் துன்புறுத்தல் குறித்து அந்த பெண் வாய் திறந்தால், அவர் பிரச்னைக்குரியவராக கருதப்பட்டு, அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகலாம் என்பதால் அவர்கள் மவுனம் காக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கை கேரள சினிமா துறையை தாண்டி இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல மாநிலங்களில் இதுபோல் குழு அமைத்து விசாரிக்க நடிகைகள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்த சூழலில் பிரபல நடிகை ரேவதி சம்பத், தான் தனது 16 வயதில் பழம்பெரும் நடிகர் சித்திக்கால் பாலியல் ரீதியான தொல்லை சந்தித்ததாகவும், இதனால் உடலளவிலும் மன அளவிலும் மிகுந்த பாதிப்பை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவரது இந்த பரபரப்பான புகாரையடுத்து, கடும் எதிர்ப்புகள் கிளம்பவே, நடிகர் சங்க பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக் ராஜினாமா செய்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து கேரளா திரைப்பட அகாடமியின் தலைவரான இயக்குனர் ரஞ்சித் மீதும் வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா வெளிப்படையாக பாலியல் புகாரை முன்வைத்தார். இதனால் இவரும் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரங்கள் இந்திய திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று நடிகை ஊர்வசி கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பிரபல நடிகை ஊர்வசி பேசியதாவது, "ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. என்னைப் போன்ற பல நடிகைகள் சினிமாவை நம்பித்தான் வாழ்ந்து வருகிறோம். இப்படிப்பட்ட ஆண்கள் மத்தியில்தான் வேலை செய்தோம், வேலை செய்யப்போகிறோம் என்பதை நினைக்கையில் மிகவும் பயமாக இருக்கிறது.
நான் முன்னணி நடிகையாக இருந்ததாலோ, வசதியான பின்னணியிலிருந்து வந்ததாலோ என்னை இதுபோன்று யாரும் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் என்னை போல் அல்லாமல், பெரிய பின்னணி, வசதி என்று எதுவும் இல்லாமல் வளர்ந்து வரும் பெண்கள் இதுபோன்ற பாலியல் தொல்லைகளை சந்தித்து வரும் செய்தி மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மலையாளத் திரையுலகில் மட்டுமல்ல, அனைத்து திரைத்துறையிலும் நடந்து கொண்டு இருக்கிறது. ஹேமா கமிட்டி அறிக்கை மீது உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். நடிகைகளுக்கு மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தவர்கள், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நடிகைகளுக்கு மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) ஆதவராக இருக்க வேண்டும். இங்கு ஆண் - பெண் இருவரும் சேர்ந்துதான் இங்கு பணியாற்ற வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் திரைத்துறையில் இனிமேலும் நடக்கக்கூடாது. அரசு இதில் முழுமையாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான எந்தவொரு குற்றத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது.
இது போன்ற குற்றவாளிகளை சங்கம் அடையாளம் கண்டு அவர்களை நடிகர் சங்கத்தில் (AMMA) இருந்து வெளியேற்ற வேண்டும். தவறு செய்த யாருடனும் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவரும் இதுகுறித்து அச்சமின்றி, வெளிப்படையாகப் பேசவேண்டும். நான் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நிற்பேன்." என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!