Cinema
“நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்...” - யாரை சொல்கிறார் சிவகார்த்திகேயன்?
இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் 'கொட்டுக்காளி'. சூரி, மலையாள நடிகை அன்னா பென் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK Productions தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை பெற்று வரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
'கொட்டுக்காளி' திரைப்படம் வரும் 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சூரி, பி.எஸ்.வினோத்ராஜ், நடிகர் சிவகார்த்திகேயன் என படக்குழு மட்டுமின்றி இயக்குநர் மிஸ்கின் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது இந்த படம் குறித்து மேடையில், நடிகரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் பேசியதாவது, "வினோத் இயக்கிய ‘கூழாங்கல்’ படம் பார்த்தேன். அதனை புரிந்துகொள்ள சிரமப்பட்டேன். நான் உலக சினிமாக்களை அதிகம் பார்த்ததில்லை. தமிழ் சினிமாவை பார்த்து வளர்ந்தவன் நான். தமிழில் வித்தியாசமாக வந்த படங்கள் தான் என்னுடைய புரிதல். பிறகு ‘கூழாங்கல்’ படத்தைப் பற்றி பேசி பேசி புரிந்து கொண்டேன்.
இயக்குநர் வினோத், இந்தப் படத்துக்காக ரோட்டர்டாம் விருது பெற்றிருப்பதாக சொன்னார்கள். இந்த விருது அறிமுக இயக்குநர்களுக்கு வழங்கப்படும் விருது. இதனை முன்னதாக கிறிஸ்டோஃபர் நோலன் பெற்றிருக்கிறார் என்று சொன்னார்கள். நான் திகைத்து விட்டேன். மதுரையிலிருந்து சென்று சர்வதேச விருது பெற்றிருக்கிறார் வினோத் ராஜ். அப்போதே வினோத்தின் அடுத்த படத்தை நான் தயாரிக்கிறேன் என உறுதியளித்தேன். அவரைக் கொண்டாட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கமாக இருந்தது. அதனால் தான் இந்தப் படத்தை தயாரித்தேன்.
இந்தப் படத்தில் நான் முதலீடு செய்ததை தாண்டி லாபம் வந்தால் அதிலிருந்து உங்களுக்கு (வினோத்) அடுத்த படத்துக்கு நான் அட்வான்ஸ் கொடுப்பேன். உங்களுக்கு என்ன படம் இயக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதனை எடுங்கள். அதையும் தாண்டி கூடுதல் லாபம் கிட்டினால், வினோத் ராஜ் போல வேறு யாராவது இருக்கிறார்களா என தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு திருப்பி அளிக்கும் முயற்சியாக நான் இதனை பார்க்கிறேன்.
இந்த படத்தை நீங்கள் வெற்றியடையவைத்தால், கொட்டுக்காளி மாதிரி இன்னும் பல திரைப்படங்கள் SK Productions மூலம் வெளிவரும். இதேபோல் பல இயக்குநர்களை அடையாளம் கண்டு வாய்ப்பளிக்க பயனுள்ளதாக இருக்கும். சூரி ஒரு சிறந்த நடிகர். ஊரில் அவர் பயங்கரமான நபர் என்று அவருடைய கதைகளை கேட்டால் தெரியும்.
நடிகராக ‘விடுதலை’ படத்தை விட, இப்படத்தில் சூரி கூடுதல் மார்க்கை வாங்குவார் என சொன்னேன். இந்தப் படத்தில் சூரிக்கு தேசிய விருது கிடைக்கும் என நம்புகிறேன். என்னைவிட சிறப்பாக நடிக்க கூடியவர் சூரி. அவர் இயக்குநர் மிஷ்கின், பாலாஜி சக்திவேல் போன்றவர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசை. சூரி என்னுடைய அண்ணன். அவர் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றதாக அர்த்தம்.
இயக்குநர் வினோத்ராஜ் தமிழ் சினிமாவின் பெருமை. எஸ்கே புரொடக்ஷனிலிருந்து இதுபோன்ற படங்கள் வரும். நான் யாரையும் கண்டுபிடித்து நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி, நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்லி சொல்லி பழக்கிட்டார்கள். அந்த மாதிரி ஆள் நான் இல்லை. இது வெற்றியடைந்தால் இது போன்ற முயற்சிகள் தொடரும்" என்றார்.
இந்த சூழலில் சிவகார்த்திகேயன் பேசிய "நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்லி சொல்லி என்னை பழக்கிட்டார்கள். அந்த மாதிரி ஆள் நான் இல்லை" என்ற பேச்சு தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனெனில் நடிகர் தனுஷின் '3' படத்தின் மூலமே தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார் சிவா.
இவர்களுக்குள் இருந்த ஒரு ஆழமான நட்பில் நாளடைவில் விரிசல் விழவே, தனுஷ் ரசிகர்கள் சிவாவை வசைபாடினர். அறிமுகப்படுத்தியவரை உதாசீன படுத்துவதாக ரசிகர்கள் திட்டித்தீர்த்தனர். அதே போல், தனியார் சேனல் ஒன்றும், சிவகார்த்திகேயனை தங்கள் வீட்டுப்பிள்ளை என்று கொண்டாடி வருகிறது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் யாரை கூறினார் என்று தற்போது இணையத்தி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
எனினும், சிவகார்த்திகேயன் இதனை சாதாரணமாக கூறியதாகவும், இதனை பெரிதாக்க வேண்டாம் என்றும் சிவாவின் ரசிகர்களும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!