Cinema
“இதுபோன்ற அரசிடம் கோரிக்கை வைக்கக்கூடாது” - விவசாயிகளுக்கு காலா பட நடிகர் நானா படேகர் அறிவுரை !
ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை. அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை.
இதனால் நாடு முழுவதுமுள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போராட்டம் அறிவித்ததையடுத்து, அண்மையில் போராட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது பாஜக அரசு.
ஹரியானா - ஷாம்பு எல்லையில் போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் மீது பாஜக ஆளும் ஹரியானா மாநில போலிஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில், இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒன்றிய அரசு நடத்திய தாக்குதலில் இதுவரை 5-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். எனினும் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்து செல்கின்றனர். உலகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் கவனம் ஈர்த்துள்ள நிலையில், பலரும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காலா பட நடிகர் நானா படேகர், இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது இவர் பேசியதாவது, “தங்கம் விலை ஏறுகிறது. ஆனால் அரிசியின் விலை ஏன் ஏறவில்லை? விவசாயிகள் நாட்டுக்கே உணவளிக்கின்றனர். ஆனால் அவர்களது பிரச்னைகளை தீர்த்து வைக்க அரசுக்கு நேரமில்லை.
இது போன்ற அரசிடம் விவசாயிகள் கோரிக்கைகள் வைக்கக்கூடது. நல்ல காலம் வரும் என்று காத்திருக்க கூடாது. நீங்களே நல்ல காலத்தை உருவாக்க வேண்டும். எந்த கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது." என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட பிரபல நடிகர் கிஷோர், விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளை பரப்பும் மோடிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!