Cinema

‘சினேகம் அறக்கட்டளை’ விவகாரம் : பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி அதிரடி கைது ! - பின்னணி என்ன ?

தமிழ் திரைப்பட பிரபல பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் 'சினேகம் அறக்கட்டளை' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையானது 23.12.2015 துவங்கப்பட்டது. ஒன்றிய அரசின் வருமான வரித்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை பெயரை பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி தவறாக பயன்படுத்தி வந்துள்ளார்.

மேலும் இந்த 'சினேகம் அறக்கட்டளை' என்ற பெயரை பயன்படுத்தி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சம்பவம் குறித்து சினேகன், பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி மீது புகார் அளித்திருந்தார்.

தொடர்ந்து சினேகன் மீது ஜெயலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சினேகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று திருமங்கலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரமாக வீட்டில் நடைபெற்ற சோதனைகளுக்கு பிறகு பல்வேறு முக்கிய ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து பாஜக நிர்வாகி ஜெயலட்சுமியை திருமங்கலம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.

Also Read: அண்ணாமலை பரப்பிய பொய் பிரச்சாரம் : உண்மையை உடைத்த தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு !