Cinema

Fact Check: மத மோதலாக உருவாகும் பூனம் பாண்டே இறப்பு விவகாரம் ? - பின்னணி என்ன ?

பாலிவுட்டில் பிரபல மாடல் அழகியாக வலம் வந்தவர்தான் பூனம் பாண்டே (32). மாடலை தொடர்ந்து நடிப்பதிலும் ஆர்வம் கொண்டதால் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். 2013-ம் ஆண்டு திரைக்கு அறிமுகமான இவர், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, போஜ்புரி உள்ளிட்ட மொழிகளில் 7 -8 படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.

வெள்ளித்திரையில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் போனதால், ஹிந்தியில் ஒளிபரப்பான ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். இதனிடையே 2013-ம் ஆண்டு இந்து - இஸ்லாமிய மக்களிடையே வெறுப்புணர்வை பரப்பும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டார். தொடர்ந்து இதுபோன்று பல்வேறு சர்ச்சைகளில் ஈடுபட்டு இவருக்கு எதிராக பலரும் கண்டனங்கள் எழுப்பினர்.

மேலும் அவ்வப்போது தனது அந்தரங்க புகைப்படங்களையும் பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்கி வந்துள்ளார். இந்த சூழலில் நேற்றைய முன்தினம் (02.02.2024) அவர் இறந்து விட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இறந்து விட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து அவரது இறப்புக்கு இந்திய திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். அன்று முழுவதும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து சமூக ஊடகங்களால் தீவிர விவாதமும் நடைபெற்றது. இந்த நிலையில், தான் இறக்கவில்லை என்றும், கர்ப்பப்பைப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு பொய் செய்தி வெளியிட்டதாகவும் அவரே தெரிவித்துள்ளார்.

தான் இறந்துவிட்டதாக பூனம் பாண்டே அறிவித்த நிலையில், அவருக்கு ஒரு தரப்பினர் ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தாலும், மற்றொரு தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இவரது இறப்பு குறித்த செய்திகளில், அவரது முன்னாள் கணவர் குறித்தும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

பூனம் பாண்டேவுக்கும், பிரபல இயக்குநர் சாம் அகமது பாம்பேவுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணமானது. அதன்பிறகு சில முரண்பாடுகள் ஏற்பட்டு இருவரும் கடந்த 2021-ம் ஆண்டே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில் பூனம் பங்கேற்ற 'லாக் அப்' என்ற ஷோவில், தான் தனது முன்னாள் கணவரால் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் அவர் தினமும் தன்னை தாக்கியதாகவும், இதனால் தனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், தன்னை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். தொடர்ந்து இந்த விவகாரம் அப்போதே பேசுபொருளான நிலையில், தற்போது பூனம் இறந்ததாக வெளியான செய்தியையடுத்து இந்த பேச்சு மேலும் சூடு பிடித்துள்ளது.

சாம் அகமது பாம்பே, ஒரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைப்பதாக பலரும் குற்றம்சாட்டும் நிலையில், அவர் இறந்ததாக வெளியான செய்திக்கு, "நான் தினமும் பூனமை நினைத்து கொண்டு தான் இருக்கிறேன். அவர் இன்னும் இறக்கவில்லை, என்னுடன் தான் இருக்கிறார்" என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அவர் இறக்கவில்லை என்று வெளியான செய்திக்கு, "அவர் உயிருடன் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவின் மிகச்சிறந்த தைரியமான பெண்" என்று பூனம் பாண்டேவை புகழ்ந்து பதிவிட்டிருந்தார். எனினும் அவரது கணவர் குறித்து பல்வேறு செய்திகள் பலவகையாக ஊடகங்களில் உலாவி வருகிறது.

இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி பிரபல ஊடகவியலாளர் முகமது ஜுபைர், தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், "வலதுசாரி பிரசார இணையதளம் : பூனம் பாண்டே இறந்துவிட்டார். இப்போது அவரது முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த முன்னாள் கணவரைப் பற்றி குறிப்பிடுவதன் மூலம் அவரது மரணத்திற்கு இந்து-முஸ்லிம் ஒரு கோணத்தை கொடுக்க முயற்சிப்போம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: ராமர் கோவில் விழாவுக்கு எதிர்ப்பு: கைது செய்யப்பட்ட தலித் மாணவர்!