Cinema
சென்சார் போர்டு விவகாரம் : “இங்கலாம் போவேன்னு நா நினச்சு கூட பாக்கல..” - நடிகர் விஷால் உருக்கம் !
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம்தான் 'மார்க் ஆண்டனி'. டைம் ட்ராவலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
இந்த சூழலில் சென்சார் போர்டு என்று சொல்லப்படும் தணிக்கைக் குழு மீது நடிகர் விஷால் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட சென்சார் போர்டுற்கு ரூ.6.5 லட்சம் வரை லஞ்சமாக தணிக்கைக்குழு அதிகாரிகள் தன்னிடம் இருந்து பெற்றதாக வீடியோ மூலம் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட மும்பையில் உள்ள சென்சார் போர்டை அணுகியபோது, அங்கிருக்கும் அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கேட்டதாகவும், வேறு வழியின்றி தானும் அதனை 2 தவணைகளில் திரையிட ரூ.3 லட்சமும், சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சமும் அனுப்பியதாகவும் தெரிவித்தார்.
மேலும் தான் படத்தின் ஊழல் குறித்து படங்களில் காட்டுவது போல் நிஜ வாழ்க்கையிலும் நடப்பதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், தான் லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்த அவர், தான் இன்னாருக்கு தான் லஞ்சம் கொடுத்ததாக, அந்த சென்சார் போர்டு அதிகாரிகளின் பெயர்கள், வங்கி எண், IFSC எண் உள்ளிட்டவையையும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து இது பூதாகரமான நிலையில், விஷாலின் இந்த புகாருக்கு ஒன்றிய அரசு தரப்பில் இருந்து நடவடிக்கை எடுப்பதாக பதில் அளித்திருந்தது. அதன்படி இந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியது. இந்த விவகாரத்தில் 2 பெண்கள் உட்பட 3 தரகர்கள், சென்சார் போர்டு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று சிபிஐ விசாரணைக்காக நடிகர் விஷால் மும்பை சென்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “நான் இப்போது CBFC வழக்கு தொடர்பான விசாரணைக்காக மும்பையில் உள்ள CBI அலுவலகத்திற்கு செல்கிறேன். என் வாழ்நாளில் நான் இந்த அலுவலகத்திற்கு செல்வேன் என்று நினைத்ததில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கார்த்தியின் 'ஜப்பான்' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது, விஷாலும் சென்ற நிலையில், மேடையில் அனைவரும் தங்கள் நட்பு ரீதியான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது நடிகர் கார்த்தி, விஷாலை நோக்கி, "இவனுக்கு இருக்குற பிரச்னையில எப்படி சிரிச்சுட்டு இருக்கான்னு தெரியல.." என்று கலகலப்பாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!