Cinema

அன்று கலைஞர்... இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற பாடகி பி.சுசீலா !

தன்னுடைய இனிய குரலால் பெரும் புகழ்பெற்றவர் பி.சுசீலா. தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். 1953-ல் ‘பெற்றதாய்’ படத்தில் பாடகியாக அறிமுகமாகி, "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?", "தமிழுக்கு அமுதென்று பேர்", "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து", "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல", "ஆயிரம் நிலவே வா" , "பார்த்த ஞாபகம் இல்லையோ", "நான் பேச நினைப்பதெல்லாம்" உள்ளிட்ட ஆயிரக்கணக்கான காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடியுள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ள இவர், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். அதோடு 2008-ம் ஆண்டு தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதையும் வென்றுள்ளார். அதோடு 5 தேசிய விருதுகளையும் வென்றுள்ள இவர், எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார்.

தொடர்ந்து சினிமாவில் சாதனை படைத்து வரும் இவருக்கு தற்போது தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலை புறத்தில் அமைந்துள்ள ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு பட்டங்கள் வழங்கினார். அப்போது பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, இசைக் கலைஞர்கள் பி.எம்.சுந்தரம், டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் (கௌரவ டாக்டர்) பெற்றனர்.

தொடர்ந்து முனைவர் பட்டம் பெற்ற பி.சுசீலா பேசிய, "தமிழில் பாடிய பாடலுக்கு முதல் தேசிய விருது பெற்றபோது முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். தற்போது அவருடைய மகன் கையால் நான் டாக்டர் பட்டம் பெறுகிறேன். முனைவர் பட்டம் முதல்வரிடம் பெற்றது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது .

அவர் நிகழ்ச்சியில் பேசுவது கேட்டிருக்கிறோம். தற்போது அவர் பாடியது நன்றாக இருந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் தாய் வாழ்த்து பாட எனக்கு வாய்ப்பு தந்தார். அதுவே தமிழ் மூலம் எனக்கு கிடைத்த முதல் பாராட்டு." என்றார்.

Also Read: அவரை படத்தில் இருந்து நான் நீக்கவில்லை, அவரே விலகிக்கொண்டார் - பிரபல கேரள இயக்குநர் பேட்டி !