Cinema

காலையில் நடைபயிற்சி... சுருண்டு விழுந்த ‘தூம்’ பட இயக்குநருக்கு நேர்ந்த சோகம் - திரையுலகம் அதிர்ச்சி !

பாலிவுட்டில் பிரபல நடிகராக அறியப்படுபவர் தான் சஞ்சய் காத்வி. 2001-ல் வெளியான 'Tere Liye' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், 2004-ல் வெளியான 'தூம்' படத்தின் மூலம் பிரபலமானார். பாலிவுட்டின் குறிப்பிட்ட சில படங்களில் மைல் கல்லாக அமைந்த இந்த திரைப்படம், சஞ்சய்க்கும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அபிஷேக் பச்சான், ஈஷா தியோல், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படம் 110 மில்லியன் செலவில் உருவான நிலையில், சுமார் 724.7 மில்லியன் வசூலித்து பெரும் சாதனை படைத்தது.

நேர்த்தியான திருட்டை பற்றிய படமான இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, 2006 ஆம் ஆண்டு 'தூம் 2' வெளியானது. இதில் அபிஷேக் பச்சான், ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சுமார் 350 மில்லியன் செலவில் உருவான இந்த படம், 1.5 பில்லியன் வசூலித்து பெரும் சாதனை படைத்தது.

இந்த 2 சாதனை படங்களை தொடர்ந்து சில ஆண்டுகள் இடைவெளி விட்டு விட்டு, படங்கள் இயக்கினார் சஞ்சய் காத்வி. இவரது இயக்கத்தில் இறுதியாக 2020-ல் 'Operation Parindey' என்ற படம் வெளியானது. இந்த சூழலில் இவர் அண்மைக்காலமாக திரையுலகை விட்டு விலகியே இருந்தார். இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனினும் தனது மற்ற வேலைகளை கவனித்து குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வந்துள்ளார். இந்த சூழலில் மும்பையில் வசிக்கும் இவர் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதாக வழக்கமாக இருந்துள்ளது. அந்த வகையில் இன்று காலை மும்பை லோகந்த்வாலா வளாகத்தின் பின்புற சாலையில் வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது இவருக்கு திடீரென இலேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் சட்டென்று அவர் சரிந்து விழ, இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கே இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவரது மறைவு தற்போது பாலிவுட் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இவரது இறப்புக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

'தூம் 2' படத்திற்கு பிறகு தூம் 3 படம் வெளியானது. இந்த படத்தை தூம் படத்திற்கு கதை எழுதிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கினார். ஆனால் இந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்த சூழலில் சுமார் 10 ஆண்டுகள் கழித்து 'தூம் 4' திரைப்படம் வெளியாகும் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பது கூடுதல் தகவல்.

Also Read: திரிஷா முதல் லோகேஷ் கனகராஜ் வரை... மன்சூர் அலிகான் பேச்சுக்கு குவியும் கண்டனம்.. முழு விவரம் !