Cinema

விஜய் ஆண்டனி மகள் இறப்பு : விஜயின் ‘LEO’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு.. இணையத்தில் குவியும் பாராட்டுகள்!

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பன்முகத்தன்மை கொண்டவராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவருக்கு மீரா, லாரா 2 மகள்கள் உள்ள நிலையில், அதில் மூத்த மகள் மீரா (16) 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சூழலில் இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு விஜய் ஆண்டனி உணவு முடித்து விட்டு தனது அறையில் தூங்கச் சென்றுள்ளார். பிறகு அதிகாலை எழுந்து மகள் அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் மகள் தூக்கிட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து வீட்டின் பணியாளர்கள் உதவியுடன் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு சிறுமி மீராவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இது குறித்து போலிஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த அவர், மீராவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மீரா மன அழுத்தத்திலிருந்தது தெரியவந்ததுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சிறுமியின் மறைவுக்கு விஜய் ஆண்டனிக்கு ஆறுதல்களும் இரங்கல்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான Seven Screen Studio இந்த நிகழ்வுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அதிரடி முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா என திரைப்பட்டாளமே நடித்துள்ள லியோ படத்தை Seven Screen Studio நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் வெளியீடு அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், கடந்த 2-3 நாட்களாக இதன் தெலுங்கு, கன்னட போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

அந்த வகையில் இன்று லியோ படத்தின் போஸ்டர் வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு, நாளை வெளியிடவுள்ளதாக முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து Seven Screen Studios தனது ட்விட்டர் பக்கத்தில், "விஜய் ஆண்டனிக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். இது தாங்க முடியாத இழப்பு. எங்களின் பிரார்த்தனைகள் உங்களுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் இருக்கும். இன்றைய லியோ போஸ்டர் வெளிப்பாட்டை நாளை ஒத்திவைப்பது சரியானது என்று முடிவெடுத்துள்ளோம்." என்று குறிப்பிட்டுள்ளது.

லியோ படக்குழுவின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை முன்னிட்டு இணையத்தில் 'Good Decision' என்ற வாக்கியம் ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: இயக்குநர் பாரதிராஜா அறிமுகப் படுத்திய ஹீரோ காலமானார்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்!