Cinema

“நீங்க எங்கயோ போய்ட்டீங்க..” : பிரபல குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மறைவு.. அதிர்ச்சியில் திரையுலகம்!

தமிழில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தில் தயரிக்கப்பட்ட பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய் இவர், அதன்பிறகு 1981-ல் வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தின் மூலம் திரையில் தோன்றினார்.

தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டிய இவர் அதன்பிறகு குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். பெரும்பாலும் கமல்ஹாசனுடன் கைகோர்த்த இவர், அவருடன் விக்ரம், சத்யா, மைக்கேல் மதன காம் ராஜன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற “தெய்வமே நீங்க எங்கையோ போயிட்டீங்க..” என்ற வசனம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். கமலை தாண்டி ரஜினியுடன் ‘மாப்பிள்ளை’ படத்திலும் நடித்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கூட தாராள பிரபு, கோலமாவு கோகிலா, சூரரைப்போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சாய் பல்லவி நடிப்பில் அண்மையில் வெளியான 'கார்கி' படத்திலும் சாய் பல்லவிக்கு அப்பாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதோடு யோகி பாபு நடிப்பில் நேற்று வெளியான 'லக்கி மேன்' படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.சிவாஜியின் இறுதிச் சடங்குகள் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேற்று மாலை சென்னை தேவி கருமாரி தியேட்டரில் நடந்த உலக சினிமா விழா துவக்க விழாவில் நடிகர் ராஜேஷ், நடிகை ஷீலா ராஜ்குமார், இயக்குநர் ராசி அழகப்பன் உள்ளிட்டோருடன் நடிகர் ஆர் எஸ் சிவாஜியும் கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்ட கடைசி நிகழ்வு அதுவாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் நடிகை.. மலையாள திரையுலகில் மேலும் ஒரு அதிர்ச்சி !