Cinema
"சிரிக்கின்ற போதிலும், அழுகின்ற போதிலும் வழி துணை யுவன்".. Happy Birthday யுவன் ஷங்கர் ராஜா!
சிரிக்கின்ற போதிலும், நீ அழுகின்ற போதிலும், வழிதுணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன் என்று வழித்துணையாகவே பயணித்துக்கொண்டிருக்கார் யுவன் ஷங்கர் ராஜா.இசை என்ற வெல்லத்தை வாயில் போட்டதும் காதுகளின் வழியே நரம்புகளை நாட்டியமாடச் செய்யும் யுவனின் பாடல்கள்
இன்றைய இளைஞர்களுக்கு தனிமை, வலி, போதை, ஏக்கம், பரவசம், ஆறுதல் என அனைத்துமே இசை தான் என சொல்லலாம் .அந்த இசைக்கு உயிர் கொடுத்தவர்தான் யுவன் ஷங்கர் ராஜா. திரைத்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1997-ம் ஆண்டு 'அரவிந்தன்' திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமான இவர், 90ஸ் கிட்ஸ்களுக்கு இசையின் அரசனாக உருவெடுக்கத் தொடங்கினர்.
தனது 16 வயதில் தமிழ் சினிமாவில் முதல் அடியை எடுத்துவைத்து திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்தார். அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான ''பூவெல்லாம் கேட்டுப்பார்'' திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். அந்த படம் ஒரு மியூசிக்கல் காதல் பாடம் என்பதால், படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெறிந்தன அதில் 'சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே' , 'இரவா பகலா வெயிலா மழையா' என அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது.
இந்த திரைப்படத்தின் மூலம் இசையில் ஓர் புதிய அத்தியாயத்தை கொடுத்த யுவன் ஷங்கர் ராஜாவை தமிழக திரையுலகம் திருப்பிப்பார்த்தது. அதன் பின்னர் அறிமுக இயக்குனராக வலம் வந்த ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்தார் யுவன். இவர்களின் கூட்டணியில் உருவான 'தீனா' படத்தின் மூலமாகதான் நடிகர் அஜித்திற்கு பட்டிதொட்டி எங்கும் 'தல' என்ற பட்டம் சூட்டப்பட்டது.
'தினக்கு தினக்கு தின தீனா' என்ற ரீரெக்கார்டிங் இசையில் திரையரங்கை அதிர வைத்திருப்பார் யுவன். 'சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்' என்ற காதலின் வலியை எடுத்துக்காட்டிய இந்த பாடல், இப்போதும் இளைஞர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது. அதன் பின்பு சற்று வித்தியாசமான கதையம்சத்தில் இயக்குனர் பாலாவுடன் கைகோர்த்து 'நந்தா' திரைப்படத்தில் பணிபுரிந்தார். அதில் வரும் 'முன்பனியா முதல் மழையா' பாடலை மறந்தவர் இருக்கக்கூடுமா என்ன?
யுவன் மற்றும் செல்வராகவன் காம்போ எப்போதும் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அவர்களின் முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது. பதின்பருவத்து பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட கதையால் ஏற்படும் சறுக்கல்கள் அனைத்தையும் தாங்கிப் பிடித்தது யுவனின் இசைதான். அதிலும் 'இது காதலா முதல் காதலா' பாடல், 'தீண்ட தீண்ட', 'வயது வா வா அழைக்கிறது',என்ற பாடல்களை ரேடியோக்களில் கேட்காமல் இருந்திருக்க முடியாது.
இதன் பின்னர், செல்வராகவன் - யுவன் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்தான். 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' என தனது இசை கோடியை ஏற்றினர் யுவன். குறிப்பாக புதுப்பேட்டை படத்தில் வரும் 'ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது' பாடல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோகும் இளைஞர்களுக்கு ஆறுதல் பாடலாக இன்றும் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.
அதேபோல தான் '7ஜி ரெயின்போ காலனி' திரைப்படத்தில் வெளிவந்த அனைத்து பாடல்களும் செல்வராகவனின் காதல் படத்திற்கு இதைவிட அருமையான பாடல்களை யாராலும் இசையமைக்க முடியாத வண்ணம் பாடல்களை அமைத்திருந்தார் யுவன். அதிலும் குறிப்பாக 'நினைத்து நினைத்து பார்த்தேன்', 'காண காணும் நேரங்கள்', 'கண் பேசும் வார்த்தைகள்' பாடல்கள் வெளியான நேரங்களில் எல்லாம் அதை பார்க்கவும் கேட்கவும் ரசிகர்கள் ஏங்கினார்கள்.
படத்தில் பாடல்களால் மட்டுமில்லாமல் பின்னணி இசையால் தனி கவனத்தையும் ஈர்த்தார் யுவன். இன்றைக்கும் இந்த படத்தின் பின்னணி இசையை தனியாக கேட்பவர்கள் உண்டு. திரையுலகில் சில படங்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்கச் செய்யும் அப்படியான சில படங்களில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை பல மாயாஜாலங்களைச் செய்திருக்கும். அதற்காக அந்தத் திரைப்படங்களில் பாடலுக்கு எந்த குறையும் இல்லாமல், அதிலும் பிரித்து மேய்ந்திருப்பார் யுவன். அதில் முக்கியமான திரைப்படம் தான் பருத்திவீரன்.
நடிகர் கார்த்தியின் முதல் படமாகவும் யுவனின் ஐம்பதாவது படமாக அமைந்த படம் தான் இது. 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒவ்வாரு வருடமும் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருந்தார் யுவன். அந்த வரிசையில் இந்த படத்தில் யுவனின் முதல் கிராமத்து படமாக இது அமைந்தது. அறியாத வயசு, அய்யய்யோ, சரகமபதநிதி, ஊரோரம் புளியமரம் பாடல்கள் என அனைத்தையும் திரையரங்கில் மக்கள் கொண்டாடினர்.
இயக்குனர் ராமின் இயக்கத்தில் வெளிவந்த 'தங்கமீன்கள்' படத்தில் உருவான "ஆனந்த யாழை மீட்டுகிறாள் " பாடல் தமிழகத்தில் பெண் குழந்தைகளைப் பெற்ற தந்தைகளின் தேசிய கீதமாக இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. நா.முத்துக்குமார் - யுவனின் காம்போவை பற்றி ஒரு படத்தில் குறிப்பிட்டு சொல்ல முடியாது. இவர்களின் கூட்டணியில், தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாது, பாடல்களைக் கேட்ட அனைவருமே சொக்கித்தான் போயிருப்பார்கள்.
தேவதையைக் கண்டேன், காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன், நினைத்து நினைத்துப் பார்த்து, காதல் வளர்த்தேன், போகாதே போகாதே, பறவையே எங்கு இருக்கிறாய், எங்கேயோ பார்த்த மயக்கம், வெண்மேகம் பெண்ணாக... இப்படியாக பட்டியல் இன்னும் பெரிதா நீண்டு கொண்டே போகும். இன்னும் தமிழ் சினிமாவில் எத்தனை பாடல்கள் வந்தாலும் எக்காலத்திற்கேற்ப இளைஞர்களுக்கும் 'ஒருநாளில் வாழ்க்கை எங்கும் ஓடி போகாது' என்ற பாடல் ஈடுகொடுத்து நிற்கும்.
இத்தனை படைப்புகளில் காதலையும் சோகத்தையும் கொண்டாட்டத்தையும் கொடுத்திருக்கும் யுவன் என்றைக்குமே நமக்கு ஸ்பெஷல் தான். தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் 68-வது படத்தில் அவருடன் களமிறங்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் யுவன். இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டில் வெளியான விஜய் நடித்த 'புதிய கீதை' திரைப்படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார்.
இருபது வருடங்களில் எண்ணற்ற இசையமைப்பாளர்களை கடந்து ரசிகர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது நடிகர் விஜயின் பாடல்கள். 'விஜய் 68' படத்தில் இணைத்திருக்கும் யுவன் - விஜய்க்கு மறக்கமுடியாத ஹிட் பாடல்களை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது தனித்திறமையாலும், மாறுபட்ட இசையமைப்பாலும், தனக்கே உரிய யுனிக்கான குரலாலும் 25 ஆண்டுகள் மேலாக கடந்து திரைத்துறையில் சாதனைப் படைத்துக்கொண்டு இருக்கும் யுவனின் 44-வது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
- ந.வினித் குமார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!