Cinema

‘சந்திரயான் 3’ : பிரகாஷ் ராஜின் பதிவால் தொடரும் சர்ச்சை.. உண்மையில் கிண்டல் செய்தாரா? - விளக்கம் என்ன?

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. குறைத்த செலவில் செய்யப்பட்ட இஸ்ரோவின் இந்த சாதனையை பல்வேறு உலகநாடுகளும் பாராட்டின. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டு நிலவுக்கு ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரயான் - 3 விண்கலத்தில் இருக்கும் விக்ரம் என்ற லேண்டர் வரும் 23ம் தேதி மாலை 5.30 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என கூறப்பட்டிருந்தது. தற்போது 6.03 மணியளியில் விக்ரம் நிலவில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இந்த விண்கலம் எடுத்த நிலவின் முதல் படம் கடந்த ஆக., 20-ம் தேதி வெளியானது. இதற்கு பலரும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்து வந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நபர் ஒருவர் டீ ஆத்துவது போல் இருந்தது. மேலும் "BREAKING NEWS:- நிலவில் இருந்து விக்ரம் லண்டரின் முதல் படம்.. வாவ்.." என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவின் இந்த முயற்சியை கிண்டல் செய்வதாகவும் பாஜக ஆதரவு கும்பல் பதிவிட்டிருந்தது. இதற்கு கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தனது அந்த பதிவுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "வெறுப்பைப் பார்ப்பவர்களுக்கு வெறுப்புதான் தெரியும். நான் ஆம்ஸ்ட்ராங் காலத்து நகைச்சுவை ஒன்றைக் குறிப்பிட்டு கேரளா சாய்வாலாவைக் கொண்டாடும் விதமாகத்தான் இதைப் பதிவிட்டேன். நகைச்சுவையை நகைச்சுவையாகப் பாருங்கள், இல்லையெனில் உங்களிடம்தான் ஏதோ பிரச்னையிருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்தே இது ஒரு நகைச்சுவை பதிவு என்பது உணரப்பட்டது. மேலும் அந்த காலத்தில் கேரளாவை விட்டு வெளியேறி பல மாநிலங்களில் டீ கடைகள் வைத்திருக்கும் கேரள மலையாளிகள் (சாய் வாலாக்கள்), நிலவிற்கும் சென்று டீ கடை நடத்துவதுபோன்ற நகைச்சுவை வீடியோ ஒன்றைத்தான் குறிப்பிட்டதாகவும், அவர் 'சந்திரயான் 3' ஆராய்ச்சியையோ அல்லது தனிப்பட்ட யாரையும் கேலி செய்யவில்லை என்றும் இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வந்ததால், இந்த சர்ச்சை விவகாரம் குறைய தொடங்கியது.

மேலும் சில ஊடகங்கள் இதனை திரித்து, பிரகாஷ் ராஜ், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி கன்னியாகுமரியை சேர்ந்த கே.சிவனை கிண்டல் கிண்டல் செய்ததாகவும் செய்திகள் வெளியிட்டது. இதற்கு உண்மை கண்டறியும் 'ஆல்ட்' செய்தி நிறுவனர் முகமது சுபைர் கண்டனம் தெரிவித்துள்ளார். உண்மையில் 60-களில் டீ கடை நடத்தும் மலையாளிகள், இது போல் நிலவில் ஏக்கர் இடம் வாங்கினாலும் அங்கே டீ கடை நடத்துவர் என்று கேரளாவில் நகைச்சுவை கதை இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: உலகின் 4-வது நாடு.. இந்தியாவுக்குப் பெருமை தேடி தரும் 'சந்திரயான் 3' .. நிலவை அடைய 40 நாட்கள் ஏன் ?