Cinema

மறக்குமா நெஞ்சம் : ECR-ல் கலைஞர் பன்னாட்டு அரங்கம்.. கோரிக்கை வைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் பதில் !

இந்தியாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் ஏ.ஆர்.ரகுமான் அவ்வப்போது, தனது இசை கச்சேரியை ரசிகர்களுக்காக நடத்தி வருவார். அந்த வகையில் நேற்று சென்னை, நந்தனத்தில் இவரது இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை முன்னிட்டு 'மறக்குமா நெஞ்சம்' என்ற ஹேஷ்டாகும் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. ஏ.ஆர்.ரகுமானின் இசை மழையில் நினைய ரசிகர்கள் தயாராக இருந்த நிலையில், நேற்று சென்னையில் சில இடங்களில் தொடர்ந்து விடமால் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்காக மாநிலம் முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் ஆவலுடன் வந்தனர். ஆனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். மேலும் இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது அன்பான நண்பர்களே... பாதகமான வானிலை மற்றும் தொடர் மழையின் காரணமாக, எனது அன்புக்குரிய ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக, சட்டப்பூர்வ அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன், இசை நிகழ்ச்சியை வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் அதுகுறித்த தகவல் வெளியாகும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து "நமது அரசாங்கத்தின் உதவியுடன் .. கலை நிகழ்ச்சிகள், மெகா ஷோக்கள் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சிறப்பான கட்ட உள்கட்டமைப்பை நாம் அரசு மூலம் உருவாக்குவோம் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இவரது பதிவு வைரலான நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவரது கோரிக்கைக்கு பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) உலகத்தரத்திலான கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். சென்னையின் நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறும். மாபெரும் இசை விழாக்கள், கண்காட்சிகள், மிகப்பெரிய நிகழ்வுகள், மாநாடுகள் நடத்த கூடிய வகையில் வசதியுடன் கூடிய பன்னாட்டு மையம் அமைக்கப்படும்.

மேலும் இயற்கையை ரசிக்கும்படியான உணவு விடுதிகள் உள்ளிட்டவையும் அமைக்கப்படும். இது இந்த நகரத்தின் கலாச்சார சின்னமாக அமையும்." என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் ECR-ல் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமையவுள்ள செய்தி கேட்டு ரசிகர்கள் பலரும் பூரிப்பில் உள்ளனர்.

Also Read: அஜித்தின் வேதாளத்தை மிஞ்சிய சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ ? : முதல் நாளிலே ரூ. 33 கோடி வசூல் சாதனை !