Cinema

சினிமா முதல்.. சமஸ்கிருதம், தெலுங்கு இல்லாத தமிழ் வசனங்கள்.. என்றும் அழியாத கலைஞரின் திரைப்பயணம்!

தமிழ்நாட்டில் சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதையும் தாண்டி மக்களின் வாழ்வாதாரத்தில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. பழகிப்போன கதைகளையே படமாக திரும்ப திரும்ப எடுத்து வந்த காலகட்டத்தில் சமூகம் சார்ந்த கருத்துகளை சினிமா மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் தலைவர் கலைஞர்.

சினிமாவின் சக்தியை முழுமையாக ஆக்ரமித்தவர் அவர் மட்டுமே என்பதை மறுக்கமுடியாத ஓர் உண்மை. தனது பள்ளி பருவத்தில் மாணவர் மன்றம் மூலமாக தனது முதல் சமூக நாடங்களை அங்கேற்றினார். இவரின் முதல் நாடகமான 'பழனியப்பன்' திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944-ல் அரங்கேற்றப்பட்டது. அந்த நாடகத்தின் வாயிலாக அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு நீதிக்கட்சி மூலமாகவும் மாணவர் சங்கம் மூலமாகவும் தனது எழுத்து பயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து திரைத்துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர், வசனகர்த்தாவாக திரைப்படத்தின் முதல் வாய்ப்பு 1947–ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’ படத்தில் அடியெடுத்து வைத்தார். தமிழ் சினிமாவில் 1940-50களில் அதிக அளவில் சமஸ்கிருதம், தெலுங்கு கலந்த வசனங்கள் இடம்பெற்றிருந்த காலகட்டத்தில் அவற்றை எல்லாம் மாற்றி ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் தமிழில் வசனம் எழுதியவர் தலைவர் கலைஞர்.

அதன் பிறகு ‘மந்திரிகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’ என பல படங்களுக்கு வசனம் எழுதிய அவர், ‘பூம்புகார்', ‘மனோகரா', `மணமகள்', `திரும்பிப்பார்', `தேவகி', `அபிமன்யூ', `பணம்', `நாம்', `மலைக்கள்ளன்', `ரங்கோன்ராதா', `புதையல்', `புதுமைப்பித்தன்', `குறவஞ்சி', `எல்லோரும் இந்நாட்டு மன்னர்', `அரசிளங்குமரி' என 65 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றியிருக்கிறார். என்.எஸ்.கிருஷ்ணன், எம்ஜிஆர், சிவாஜிகணேசன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து பணியாற்றிய படங்கள் ஏராளம் அதில் ‘பராசக்தி’ ‘மனோகரா’ இரண்டும் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட படைப்புகள்.

‘பராசக்தி’யில் சிவாஜிகணேசன்தான் கதாநாயகன் என முடிவானதும், வசனம் எழுத ‘ரத்தக் கண்ணீர்’ புகழ் திருவாரூர் தங்கராசுவையும், இயக்குனராக ஏ.எஸ்.ஏ.சாமியையும் தயாரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ‘பராசக்தி’யில் அறிமுகமாகயிருந்த புதுமுகம் சிவாஜிகணேசனை நேரில் பார்க்க ஆசைப்பட்ட இயக்குனர், திருச்சியில் இருந்து அவரை சென்னைக்கு அழைத்து வரச்செய்தார். அவர் திருச்சியில் இருந்து சென்னை வந்து சேர்வதற்குள் இங்கு அனைத்தும் மாறிவிட்டது.

வசனகர்த்தாவாக கலைஞரும், இயக்குனராக கிருஷ்ணன் - பஞ்சுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்கள். அதிலிருந்தே சிவாஜி கணேசனுக்கும் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. வசனகர்த்தாவாக பராசக்தி திரைப்படத்திற்கு கலைஞருக்கு ரூபாய் 500 சம்பளமும் அப்படத்தின் கதாநாயகன் சிவாஜிகணேசனுக்கு ரூபாய் 250 சம்பளமும் வழங்கப்பட்டது. தமிழ் திரைத்துறை வரலாற்றில் படத்தின் பாட்டு புத்தகம் போல பராசக்தி வசனபுத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. தனது 92 வயதிலும் தொலைக்காட்சி தொடரில் மதத்தில் புரட்சி செய்த ராமானுஜர் பற்றி வெளிவந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆட்சி காலத்திலும் திரைத்துறையிலும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் இவர் ஆற்றிய தொண்டு காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்பது தான் அழிக்க முடியாத உண்மை.

- வினித்

Also Read: “எனது வாழ்வையே மாற்றியவர் கலைஞர்தான்” : முதல் தலைமுறை பட்டதாரியின் நன்றி நவிலும் பதிவு !