Cinema

சுதீப் ஸ்டைலில் மாணவர்களுக்கு முடி வெட்ட வேண்டாம்.. சலூன் கடைக்கு கடிதம் எழுதிய அரசு பள்ளி HM ! - காரணம்?

அந்த காலத்தில் இருந்து இப்போது வரை சினிமா நடிகர்கள் பாணியில் தங்களை சிகை அலங்காரம் செய்ய மக்கள் விரும்புகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள், சினிமா நடிகர்களை போல் ஹேர் ஸ்டைல், ட்ரெஸ் உள்ளிட்டவையை மாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் செய்வது அவர்களது படிப்பை ஒரு புறம் பாதிப்பதாக ஆசிரியர்கள் கருத்துகின்றனர்.

அந்த வகையில் கர்நாடகாவில் அரசு பள்ளி மாணவர்கள், கன்னட ஸ்டார் சுதீப்பின் ஹேர் ஸ்டைல் போல் வைத்து பள்ளிக்கு வருவதால், அங்கிருக்கும் தலைமை ஆசிரியர் சலூன் கடை உரிமையாளருக்கு இது போல் மாணவர்களுக்கு முடி வெட்ட வேண்டாம் என்று கடிதம் எழுதியுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட் என்ற பகுதியில் அமைந்துள்ளது குளஹள்ளி (Kulhalli). இங்கு செயல்படும் அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் பலரும் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக சிவாஜி நாயக் என்பவர் இருந்து வருகிறார். இந்த சூழலில் இங்கு படிக்கும் மாணவர்கள் சிலர் தங்கள் தலைமுடியை பிரபல ஸ்டார் கிச்சா சுதீப் மாடலில் வெட்டி விட்டு பள்ளிக்கு வருகின்றனர்.

இதனால் மாணவர்களை ஆசிரியர் கண்டித்துள்ளார். ஆனால் மாணவர்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி, மாணவர்களுக்கு முடி வெட்டும் பார்பர் கடைக்கு தலைமை ஆசிரியர் ஒரு கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த கடிதத்தில் “எங்கள் பள்ளியில் படிக்கும் பல மாணவர்கள் 'ஹெபுலி' படம் போல முடி வெட்டுகிறார்கள். ஃபேஷன் காரணமாக படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. எங்கள் மாணவர்களின் தலைமுடியை ஒழுக்கமான முறையில் வெட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு மாணவரும் திரைப்பட பாணியில் முடி வெட்ட வேண்டுமெனக் கோரினால், அத்தகைய மாணவர்களின் பெற்றோர் அல்லது பள்ளிக்குத் தெரிவிக்கவும்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தலைமை ஆசிரியரின் இந்த கடிதத்தின் மூலமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அந்த பகுதி சலூன் கடை உரிமையாளர் சன்னப்பா சித்தராமப்பா, தான் இனி பள்ளி மாணவர்களுக்கு சினிமா நடிகர்கள் பாணியில் ஹேர் ஸ்டைல் வைக்க மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளார. தலைமை ஆசிரியர் வேண்டுகோளுக்கு இணங்க சலூன் கடை உரிமையாளர் ஒத்துழைப்பு கொடுத்தது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

கன்னட ஸ்டார் சுதீப், 'ஹெப்புலி' (Hebbuli) என்ற படத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்திருந்தார். எஸ்.கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2017-ல் வெளியான இந்த படத்தில் அமலாபால், உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தார். இந்த படத்தில் சுதீப் வைத்திருந்த ஹேர் ஸ்டைல், சென்னையில் 'புள்ளிங்கோ' ஹேர் ஸ்டைல் போன்று இருக்கும்.

இது அப்போது மிகவும் பிரபலமானதால் பலரும் இந்த ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டனர். இருப்பினு இந்த படம் வெளியாகி 7 ஆண்டுகளை கடந்த பின்னும் தற்போதுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலரும் இந்த ஹேர் ஸ்டைலை பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “மரண பயம்” : ‘சந்திரமுகி 2’ இப்படி தான் இருக்கு - படம் பார்த்தவரின் முதல் விமர்சனம்.. குஷியில் ரசிகர்கள்!