Cinema

பாரதிராஜாவை இயக்குநராக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மரணம்.. தமிழ் சினிமா உலகம் இரங்கல்!

1977ம் ஆண்டு 16 வயதினிலே என்ற படத்தைத் தயாரித்து பாரதிராஜாவை தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகப் படுத்தியவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. அதேபோல் 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் நடிகர் சுதாகர். நடிகை ராதிகா ஆகியோரையும் அறிமுகப்படுத்தியவர்.

மேலும் "கன்னிப்பருவத்திலே' திரைப்படத்தில் கே. பாக்யராஜை வில்லனாக வேறு ஒரு அவதாரத்தில் நடிக்க வைத்தவர்.பி.வி.பாலகுருவை இயக்குநராகவும், வடிவுக்கரசியைக் கதாநாயகியாகவும் அறிமுகப்படுத்தியவர்.

அதேபோல் உலகநாயகன் கமலஹாசனுக்கு திருப்புமுனையாக அமைந்த 'மகாநதி' திரைப்படத்தினை தயாரித்தவரும் இவர்தான். மேலும் 'வாலிபமே வா', 'பொண்ணு புடிச்சிருக்கு', 'எங்க சின்ன ராசா' போன்ற வெற்றி திரைப்படங்களைத் தயாரித்து தனது நிறுவனத்திற்குத் தனிமுத்திரை பதித்தவர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு உயிரிழந்துள்ளார். இதையடுத்து இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் பாரதிராஜா தனது இரங்கலில் "16 வயதினிலே திரைப்படத்தின் வாயிலாக என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு,பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும்" என தெரிவித்துள்ளார்.

சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.ஏ.ராஜ்கண்ணு உடல் வைக்கப்பட்டுள்ளது.

Also Read: மாவீரன் முதல் Mission Impossible 7 வரை.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன ?