Cinema
“பன்றிகள், பெரியார், அம்பேத்கர்”: படம் நெடுகிலும் அழுத்தமான குறியீடுகள்.. மாமன்னனுக்கு காங். புகழாரம்!
தமிழில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவர்தான் மாரி செல்வராஜ். கடந்த 2018-ல் வெளியான 'பரியேறும் பெருமாள்' படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர், தனது முதல் படத்தையே மிகப்பெரிய வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.
தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கடந்த 2021-ல் கர்ணன் படத்தை இயக்கினார். "கண்டா வரச்சொல்லுங்க.." "வுட்றாதீங்க எம்மோ.." ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க, இந்த படமும் மாபெரும் ஹிட் கொடுத்தது. இந்த இரண்டு படங்களும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரிய ஹிட் கொடுத்துள்ள நிலையில், 3-வதாக உதயநிதியை வைத்து 'மாமன்னன்' என்ற படத்தை இயக்கினார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருமாவான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். கடந்த 29-ம் தேதி வெளியானது. தமிழ்நாடு முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. சமூக நீதி பேசியிருப்பதாக படத்தை பார்த்த மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த படம் வெளியாகி 2 நாட்களே ஆகும் நிலையில், சுமார் 25 கோடிக்கு மேலாக வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் பல பாசிட்டிவ் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் ஆதிதிராவிடர் துறை மாநில தலைவர் எம்.பி. ரஞ்சன்குமார், மாமன்னன் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "
முக்கிய அம்சங்கள் :
(1) வடிவேலு மற்றும் பகத் பாசில் என்ற இரு நடிப்பு மலைகளின் நடுவே, வடிவேலுவின் மகன் அதிவீரனாக வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்புச் சூரியனாக எழும்பி பிரகாசிக்கிறார். பாத்திரத்தின் தன்மை விலகாமல் உணர்ச்சிகளை உள்ளடக்கி, உணர்வுகளை முகத்தில் தேக்கி, முறுக்கேறிய உடல்மொழியால் நடிப்பின் புதிய பரிமாணத்தை தொட்டிருக்கிறார்.
(2) ஒடுக்குமுறைக்கு உள்ளாவோரும் சில நேரம் பதில் தாக்குதலில் இறங்க வேண்டியிருப்பதைப் பதிவு செய்திருந்தாலும் மாமன்னர் திரைப்படத்தில் வன்முறை பெருமைப்படுத்தப்படாதது சிறப்பு.
(3) ஜனநாயக வழியில் அர்ப்பணிப்புடன் போரிட்டால் சமூக ஏற்றத்தாழ்வுகளிலிருந்து விடுபட்டு மேம்பட முடியும் என்னும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது மாமன்னன் திரைப்படம்.
(4) தலித் அரசியலை அழுத்தமாக பேச இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாய்ப்பு, அளித்த உதயநிதி ஸ்டாலினை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஜாதிவெறிக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். பன்றிகள், பெரியார் சிலை, அம்பேத்கர் என படம் நெடுகிலும் அழுத்தமான ஆழமான குறியீடுகள் இருப்பது அருமை.
(5) தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் சமூக நீதிக்கான உரிமைக் குரலை எவ்வித சர்ச்சைகளுக்கும் இடமின்றி திரைப்படமாக தயாரித்து, நடித்து, வெளியிட்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்ச் சமுதாயமே பாராட்ட கடமைப்பட்டிருக்கிறது.
'மாமன்னன்' என்று பெற்றோர் பெயர் வைத்தாலும் மற்றவர்கள் மண்ணு என்றே அழைப்பார்கள், அந்த அளவுக்கு பெயரில் கூட ஒருவன் மேலோங்கிடக்கூடாது என்று கருதும் சமூகத்தில் - மக்கள் ஓட்டு போட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனாலும் ஆதிக்க சாதியினர் தங்கள் முன் உட்காரக்கூடாது, நின்றே பேசவேண்டும் என்று பழக்கப்படுத்தி வைத்திருக்கும் செயலை எதிர்கொள்ளும் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த மனிதனின் கதைதான் மாமன்னன்.
இந்த பாத்திரத்தை வடிவேலு மாறுபட்ட நடிப்பின் மூலம் திறம்படவே செய்திருக்கிறார். அதற்கு எதிர் கதாபாத்திரத்தில் பகத் பாசில் தம் தேர்ந்த உடல்மொழியால் மிரட்டியெடுத்துள்ளார். இந்த இரண்டு நடிப்பு மலைகளின் நடுவே வடிவேலுவின் மகன் அதிவீரனாக வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்புச் சூரியனாக எழும்பி பிரகாசிக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி காட்சிவரை பாத்திரத்தின் தன்மை விலகாமல் உணர்ச்சிகளை உள்ளடக்கி, உணர்வுகளை முகத்தில் தேக்கி, முறுக்கேறிய உடல்மொழியால் நடிப்பின் புதிய பரிமாணத்தை தொட்டிருக்கிறார்.
ஒடுக்குமுறைக்கு உள்ளாவோரும் சில நேரம் பதில் தாக்குதலில் இறங்க வேண்டியிருப்பதைப் பதிவு செய்திருந்தாலும் மாமன்னர் திரைப்படத்தில் வன்முறை பெருமைப்படுத்தப்படாதது சிறப்பு. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி நிதானமான அணுகுமுறையுடன் ஜனநாயக வழியில் பயணிப்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வழிவகுக்கும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
முதல் பாதியில், கோயில் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் சிறுவர்கள் கற்களால் அடித்துக் கொல்லப்படும் காட்சி பதைபதைப்பைத் தருகிறது. அதை எதிர்த்து மாமன்னன் வெகுண்டெழுவதும் அரசியல் கணக்குகளைக் காரணம் காட்டி, சொந்தக் கட்சிக்காரர்களால் அடக்கிவைக்கப்படுவதும் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன.
ஆதிக்கவாதியாக வலம் வரும் சில அரசியல்வாதிகள் சுயநலத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் பிறர்காலில் விழக் கூட தயங்காதவர் என்பதைச் சொல்லும் காட்சியும் முக்கியமானது. அதிவீரன் பேசும்பல அரசியல் வசனங்கள் முக்கியமானவை. திருப்பி அடிக்கத் துடிக்கும் அதிவீரனும் பொறுமையைக் கடைபிடிக்கும் மாமன்னனும் நடிக்கவில்லை, வாழ்ந்தே காட்டி இருக்கிறார்கள்.
அப்பாவின் உரிமைக்காக ஆவேசம் கொள்ளும் மகனாக யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். படத்தின் தலைப்புக்குரிய நாயகனான வடிவேலு நடிப்பில் முற்றிலும் வேறோரு பரிமாணத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். பஹத் பாசில் வழக்கம்போல் கதாபாத்திரமாகவே உருமாறியிருக்கிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்துக்கு மெருகேற்றி இருக்கிறது.
ஜனநாயக வழியில் அர்ப்பணிப்புடன் போரிட்டால் சமூக ஏற்றத்தாழ்வுகளிலிருந்து விடுபட்டு மேம்பட முடியும் என்னும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது மாமன்னன் திரைப்படம். தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போதைக்கு தாம் நடிக்கும் கடைசி படம் என்ற அறிவிப்புடன் வெளியாகி இருக்கிறது மாமன்னன். தலித் அரசியலை அழுத்தமாக பேச இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாய்ப்பு அளித்த உதயநிதி ஸ்டாலினை எவ்வளவு பாராட்டினாலும் தகும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !