Cinema

“இஸ்லாமிய மக்களுடன் சேர்ந்து பார்க்கலாம்..” - ‘ஃபர்ஹானா’ படத்தின் எதிர்ப்புகள் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் !

தமிழில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 2011-ம் ஆண்டு வெளியான 'அவர்களும் இவர்களும்' என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர், ஒரு தொகுப்பாளருமாவார்.

தொடர்ந்து அட்டத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என சில படங்களில் நடித்திருந்தாலும், 2015-ல் வெளியான 'காக்கா முட்டை' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த படத்திற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றார். அண்மைக்காலமாக பெண்களை மையமாக வைத்துள்ள கதையம்சத்தில் நடித்து வரும் இவரது படங்கள் பெரிதாக பேசப்படுவதில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானாலும், வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு டிரைவர் ஜமுனா படமும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து தற்போது 'ஃபர்ஹானா' (Farhana) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர், ட்ரைலர் அண்மையில் வெளியானது. அதில் ஒரு பெண் தனது குழந்தைகளுக்காக மத ரீதியான கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வருகிறார். அவ்வாறு வரும்போது அவர் மேற்கொள்ளும் சிக்கல்கள் என்ற கோணத்தில் இருந்தது.

இந்த படம் இஸ்லாமிய மதத்தின் நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதாக கூறி, அதனை தடை விதிக்க வேண்டும் என சில இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களும், கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது. மேலும் இந்த விவகாரம் பெரிதாக பேசப்படுமெனில், இந்த படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சையில் சிக்குவார் என நெட்டிசன்கள் கருத்தும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படம் குறித்து தற்போது பேசியுள்ளார். வரும் மே 12-ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது. நேற்று சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படம் தன்னுடைய திரை வாழ்க்கையில் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "வாரம் வாரம் என்னுடைய படங்கள் வெளியாகிறது என்று சொல்கிறார்கள். படம் வெளியாவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது என் கையில் இல்லை. கடந்த வருடத்தில் நான் நடித்த இரண்டு படங்கள் மட்டும் தான் வெளியானது. அதனால் இந்த ஆண்டு என்னுடைய படத்திற்கு எந்தவித விருதும் கிடைக்கவில்லை. வருடம் வருடம் எந்தவித விருதுகள் நான் வாங்கி இருக்கிறேன். இந்த வருடம் விருது விழாக்களின் அழைப்பு கூட வரவில்லை.

குறிப்பாக க/பெ ரணசிங்கம் படத்திற்கு அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. இது எனக்கு ரொம்ப வருத்தத்தை அளிக்கிறது. இந்த 'ஃபர்ஹானா' படம் என்னுடைய திரை வாழ்க்கையில் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அதற்காக நான் நடித்த மற்ற படங்களை குறை சொல்கிறேன் என்று அர்த்தம் இல்லை. சில படங்கள் மனதிற்கு ரொம்ப நெருக்கமாக இருக்கும். அப்படித்தான் இந்த படம் எனக்கு இருக்கிறது.

இந்த படத்திற்கு எங்களுடைய எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கு. அதை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம். இந்தப் படத்தில் சர்ச்சைக்குரியவகையில் எதுவும் இல்லை. படம் பார்க்காம இப்படி பேசுறாங்க. படம் பார்த்தால் தான் புரியும். டீசரை வைத்து மட்டும் முடிவு பண்ணக்கூடாது'' என்றார்.

Also Read: ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் எதிரொலி.. ஷாருக் முதல் SK வரை.. ஒத்திவைக்கப்பட்ட முக்கிய புள்ளிகள் படங்கள் !