Cinema

“எல்லாத்துக்கும் குறை சொல்லுறது நிறுத்துங்க.. குழந்தைகளை தொடாதீங்க..” - மணிரத்னம் பட நடிகை ஆவேசம்!

பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் ப்ரீத்தி ஜிந்தா (Preity Zinta). இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இவர், மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான 'தில் சே' என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் இந்த படம் 'உயிரே' என்ற பெயரில் வெளியானது. ஷாருக் கான், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த படத்தில் இடம்பெற்ற "நெஞ்சினிலே.. நெஞ்சினிலே.." பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பிறகு தொடர்ச்சியாக இந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து இந்தியில் அமிதாப் பச்சான், அனில் கபூர், ஷாருக், சல்மான் கான், ஆமீர் கான் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

2016-ல் திருமணமான இவர், 2018-க்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்துள்ளார். தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கும் இவர், விளம்பர படங்களிலும், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது புகைப்படத்தை போடுவது வழக்கம். இவர் நடிப்பதை தவிர்த்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இந்த நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பொதுமக்களால் தான் தொந்தரவுக்கு உள்ளானதாக வீடியோவுடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த வாரத்தில் நடந்த 2 நிகழ்வுகள் என்னை சற்று உலுக்கியது.1 என் மகள் ஜியாவைப் பற்றி - ஒரு பெண் எனது மகளை புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது அவரிடம் எடுக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டோம்.

ஆனால் அவரோ உடனே எனது மகளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, "என்ன அழகான குழந்தை" என்று ஓடிவிட்டார். என் குழந்தைகள் விளையாடும் பூங்கா அருகே இருக்கும் ஒரு உயரடுக்கு மாடி குடியிருப்பில் அந்த பெண் வசிக்கிறார். நான் ஒரு பிரபலமாக இல்லாவிட்டால், நான் மோசமாக நடந்துகொண்டிருப்பேன். ஆனால் நான் அந்த இடத்தில ஒரு சண்டையை உருவாக்க விரும்பாததால் அமைதியாக இருந்தேன்.

2-வதாக சம்பவத்தை நீங்கள் இங்கே பார்க்கலாம்.. நான் விமானத்தை பிடிக்க விமான நிலையம் சென்றுகொண்டிருந்தேன். ஆனால் இந்த மாற்றுத்திறனாளி நபரோ என்னை தடுக்க முயன்றார். அவர் என்னை பல வருடங்களாக பணத்திற்காக துன்புறுத்தினார். எனவே என்னால் முடிந்தவரை பணம் கொடுத்து வந்தேன்.

ஆனால் இந்த முறை என்னிடம் பணமில்லை, கிரெடிட் கார்டு மட்டுமே உள்ளது; மன்னிக்கவும் என்றேன். ஆனால் அவர் விடவில்லை. இதனால் என்னுடன் இருந்த பெண் ஒருவர், அவரது பர்ஸில் இருந்து கொஞ்சம் பணத்தை கொடுத்தார். ஆனால் அந்த மாற்றுத்திறனாளி நபரோ அது போதாதென்று அந்த பணத்தை அவர் மீது தூக்கி எறிந்தார். மேலும் ஆக்ரோஷமாக மாறினார். நீங்கள் பார்க்கிறபடி அவர் எங்களைப் பின்தொடர்ந்து சிறிது நேரம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.

இந்த சம்பவத்தை புகைப்படக்காரர்கள் வேடிக்கை பார்த்தனர். எங்களுக்கு உதவுவதற்கு பதிலாக அவர்கள் படம்பிடித்து சிரித்தனர். யாரும் அவரிடம் காரைப் பின்தொடரவோ அல்லது எங்களைத் துன்புறுத்தவோ வேண்டாம் என்று கூறியிருக்கலாம். இதனால் யாரவது காயப்பட்டிருப்பார்கள் அல்லது விபத்து நடந்திருக்கலாம். இதனால் நான் குற்றம் சாட்டப்பட்டிருப்பேன். நான் ஒரு பிரபலமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கும். பாலிவுட் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் & நிறைய எதிர்மறைகள் பரவியிருக்கும்.

நான் முதலில் மனிதன், பிறகு அம்மா, பிறகு பிரபலம் என்பதை மக்கள் உணர வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். எனது வெற்றிக்காக நான் தொடர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நான் இருக்கும் இடத்தை அடைய மிகவும் கடினமாக உழைத்தேன். நான் விரும்பும் வழியில் வாழ இந்த நாட்டில் உள்ள மற்றவர்களைப் போல எனக்கும் சம உரிமை உள்ளது. எனவே நீங்கள் முடிவெடுப்பதற்கு முன் சிந்தியுங்கள்; தயவு செய்து எல்லாவற்றிற்கும் பிரபலங்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். ஒரு கதைக்கு எப்போதும் 2 பக்கங்கள் உள்ளன.

மிக முக்கியமாக எனது பிள்ளைகள் பேக்கேஜ் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை & இரையாக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, எனவே தயவு செய்து எனது குழந்தைகளை தனியாக விட்டுவிடுங்கள்; புகைப்படங்களுக்காக அவர்களிடம் வராதீர்கள்; அவர்களைத் தொட்டுப் பிடிக்காதீர்கள். அவர்கள் கைக்குழந்தைகள்.. கைக்குழந்தைகளைப் போலவே நடத்தப்பட வேண்டும்; பிரபலங்கள் அல்ல." என்று குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இவருக்கு பாலிவுட் பிரபல நட்சத்திரங்களான ஹிருத்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, மலைகா அரோரா உள்ளிட்ட சில பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இதே போல் நடிகை ஆலியா பட், வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை எதிரில் இருந்து ஜன்னல் வழியாக போட்டோ எடுத்த இளைஞர்களை குறித்து பதிவிட்டிருந்தார். இவருக்கும் பல ஆதரவுகள் எழுந்தது.

அண்மையில் நடிகை நயன்தாரா தோள் மீது போட்டோ எடுக்கும்போது மாணவி ஒருவர் கை வைத்ததால், நயன் கையை எடுங்கள் என்று கூறியது இணையத்தில் வைரலானது. இதற்கு ஒரு கும்பல் ஆதரவும், மற்றொரு கும்பல் எதிர்ப்பும் தெரிவித்தது. இந்த சூழலில் ப்ரீத்தி ஜிந்தா இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ஆண்களுக்கு இணையாக சம்பளம் வேண்டும்”-பிரியங்கா சோப்ராவை தொடர்ந்து ராதிகா ஆப்தே பேச்சால் பாலிவுட்டில் பரபர