Cinema
U/A சான்றிதழ் என்றால் என்ன? குழந்தைகளுக்கு அனுமதி உண்டா? - ரோகினி தியேட்டரின் மழுப்பலால் வெடித்த சர்ச்சை!
'இரத்தத்தில் கலந்தது சினிமா' என்பது போல், நம்மால் சினிமா பார்க்காமல் இருக்க முடியாது. பொழுதுபோக்குக்காக மட்டுமே உருவாக்கபட்ட சினிமா, பிற்காலத்தில் பொது கருத்துக்களை, விழிப்புணர்வுகளை எடுத்து கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
தற்போதுள்ள காலகட்டத்தில் பல்வேறு மொழிப்படங்களும் மக்கள் ரசிக்கிறார்கள். உலகம் முழுக்க நாள்தோறும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும் குறைந்தது ஒரு படமாவது வெளியாகும். அந்த வகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு திரைப்படம் வெளியானால், கூடவே இன்னும் ஒரு படமாவது வெளியாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரைப்படத்தை காண்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. ஆனால் எல்லாரும் எல்லாவித படமும் பார்க்க முடியுமா என்று கேட்டால் அது இல்லை. பொதுவாக திரைப்படங்களை பல தரத்தில் பிரிக்கலாம். இதற்கு என்று பல ஜானர்கள் உள்ளது. எ.கா., காமெடி, த்ரில்லர், ரோமன்ஸ், ஹாரர் என பல உண்டு.
இதற்கு எல்லாம் வயது வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விஷயங்களை ஒவ்வொரு நாட்டிலும் அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பில் விடப்பட்டுள்ளது. அந்த குழுதான் படத்தை பார்த்து, அந்த படத்தை யார் யார் பார்க்க வேண்டும் என்று சான்றிதழ் வழங்கும். அதாவது வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் படத்தை சென்சார் போர்டு பார்த்து ஒப்புதல் அளித்தபின்னர், அதற்கு எந்த சான்றிதழ் வழங்க வேண்டும் என்று ஒரு குழு தீர்மானிக்கும்
இது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒவ்வொரு நாட்டிலும் ஒரு ஒரு வயதுக்கு ஏற்ப சான்றிதழின் பெயர்கள் மாறும். தற்போது இந்தியாவில் இதனை CBFC என்று சொல்லப்படும் Central Board of Film Certification (மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம்) வழங்கும். அதாவது இந்தியாவில் திரைப்படத்திற்கு 4 வகையான சான்றிதழ்கள் வழங்கப்டுகிறது.
அவை யு (U), யு/ஏ (U/A), ஏ (A), எஸ் (S) ஆகிய நான்காகும். இந்த சான்றிழ்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வயது வரம்பு உள்ளவர்கள்தான் காணவேண்டும் என்று விதி உள்ளது.
=> யு (U) - அனைவரும் கட்டுப்பாடு இல்லாமல் பொதுவில் திரைப்படத்தை பார்க்கலாம்
=> யு/ஏ (U/A) - 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெற்றொர்களின் வழிக்காட்டுதலுடன் திரைப்படத்தை பார்க்கலாம்
=> ஏ (A) - வயது வந்தோர்கள் பார்க்கலாம். அதாவது 18+ மக்கள் இந்த சான்றிதழ் பெற்ற படத்தை காணலாம்.
=> எஸ் (S) - சில சிறப்புக் குழுவினர் மட்டும் பார்க்கும் திரைப்படங்கள். அதாவது மருத்துவம் சார்ந்த படங்கள்.
மேற்கண்ட பிரிவுகளில் எஸ் (S) சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் பெரும்பாலும் திரையரங்குகளில் வெளியாகாது. அது ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே உரியது என்பதால், அவர்கள் மட்டுமே பார்க்க முடியும். இந்த சான்றிதழ்கள் பெற்ற திரைப்படங்களை அந்தந்த வயதினர் கண்டு கழிக்கின்றனர்.
இந்த சூழலில் சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வத்தின் 'ரோகினி' திரையரங்கில் திரைப்படம் பார்க்க வந்த நரிக்குறவர் குடும்பத்தாரை உள்ளே விட அனுமதி வழங்க மறுக்கப்பட்டது.
அதாவது இன்று (30.03.2023) சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள பத்து தல படத்தை காண திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு படம் பார்க்க வந்தார். அப்போது அவருக்கு டிக்கெட்டும் வழங்கப்பட்டது. பின்னர் அந்த டிக்கெட்டை காண்பித்து திரையரங்குக்குள் செல்ல முயன்றபோது அங்கிருந்த ஊழியர் அவரை உள்ளே விடவில்லை. அந்த டிக்கெட்டை காண்பித்தும் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.
இதனை அங்கிருந்த ரசிகர்களும் தட்டி கேட்டனர். இருப்பினும் அவர் அதனை செவிமடுக்கவில்லை. பின்னர் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது தரப்பு கண்டனங்களை குவித்தது. காலை 8 மணிக்கு முதல் நாள் முதல் ஷோவில் நடந்த இந்த சம்பவம் காலை முதலே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரோகினி திரையரங்கத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்துக்கு இணையவாசிகள், பொதுமக்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் வலுத்த கண்டனங்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இதுகுறித்து நேரில் சென்று போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து தியேட்டர் நிர்வாகம் இதில் தலையிட்டது. மேலும் இந்த குற்றசாட்டை மறுத்தது. அதோடு இது தொடர்பாக விளக்கம் ஒன்றையும் அறிக்கை வாயிலாக அளித்தது.
அதில் "பத்து தல திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பு இன்று காலை எங்கள் வளாகத்தில் நடந்த சூழ்நிலையை நாங்கள் கவனித்தோம். 'பத்து தல' படத்தைப் பார்க்க, செல்லுபடியாகும் டிக்கெட்டுகளுடன் சில நபர்கள் தங்கள் குழந்தைகளுடன் திரையரங்கிற்குள் நுழைய முயன்றனர். இப்படத்திற்கு அதிகாரிகள் யு/ஏ (U/A) தணிக்கை செய்தது நமக்கு தெரியும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சட்டப்படி யு/ஏ(U/A) சான்றிதழ் பெற்ற எந்தத் திரைப்படத்தையும் பார்க்க அனுமதிக்க முடியாது. 2, 6, 8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினருக்கு எங்கள் டிக்கெட் சோதனை ஊழியர்கள் இந்த அடிப்படையில் அனுமதி மறுத்துள்ளனர்.
இருப்பினும் கூடி இருந்த பார்வையாளர்கள் வெறித்தனமாக மாறி, நிலைமையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் வேறு கோணத்தில் பார்த்ததால், சட்டம்-ஒழுங்குப் பிரச்னையைத் தவிர்க்கவும், விஷயத்தை உணர்ச்சியற்றவர்களாகவும் கருதி, அதே குடும்பத்தினர் சரியான நேரத்தில் படத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், மேலே குறிப்பிட்டதுபோல் யு/ஏ (U/A) சான்றிதழ் பெற்ற திரைப்படத்தை 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெற்றொர்களின் வழிக்காட்டுதலுடன் பார்க்கலாம் என்ற விதி இருக்கும்பொழுது திரையரங்கு நிர்வாகம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக நடந்துகொண்டுள்ளது.
மேலும் தங்களுக்கு சட்டம் தெரியும் என்பதுபோல் ரோகினி திரையரங்கில் மேனேஜர் நிகிலேஷ் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தாங்கள் செய்தது சரி என்றும், 12 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கட்டாயம் அனுமதிக்கப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
தங்கள் தவற்றை முழுமையாக ஒப்புக்கொள்ளாமல் பேசி மழுப்புகிறது திரையரங்கு நிர்வாகம். பொதுவெளியில் இவ்வாறு நடந்துகொண்டு அதை கேவலமாக சமாளித்து ஞாயப்படுத்த முயன்ற திரையரங்கு நிர்வாகம் மீது மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். தற்போது ட்விட்டரில் #BoycottRohiniCinemas என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்