Cinema

“என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர்தான்” -ராகுல் காந்தி குறித்து நடிகை ரம்யா உருக்கம்!

தமிழில் 2004-ம் ஆண்டு சிம்பு, விஜயகுமார், கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'குத்து' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. முன்னதாக கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் குத்துவை தொடர்ந்து கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மொழிகளில் கவனம் செலுத்தி திவ்யா, காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியில் தன்னை இணைத்து கொண்டார். பின்னர் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி-யாகவும் பதவி வகித்தார். தனது நடிப்பை விடாத திவ்யா, தற்போது கன்னட திரைப்படங்களில் பிசியாக இருக்கிறார். இருந்த போதிலும், தனது கட்சி பணிகளையும் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.

அதுமட்டுமின்றி அவ்வப்போது சமூக கருத்தையும் பதிவிட்டு வருவார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வரும் இவர், அண்மையில் நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது சினிமா ஒருபுறம், அரசியல் ஒருபுறம் என்று செயலாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர், ராகுல் காந்தி குறித்து உருக்கமாக அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "என் அப்பா ஆர்.டி. நாராயண் இறந்த 2 வாரம் கழித்து நான் நாடாளுமன்றத்தில் இருந்தேன். எனக்கு அங்கு யாரையும் தெரியாது. அவை நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாது. மெதுவாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு பணியாற்றினேன்.

மாண்டியா தொகுதி மக்கள் எனக்கு நம்பிக்கை அளித்தார்கள். என் தந்தை இறந்தபோது எனக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்திதான் எனக்கு ஆதரவாக இருந்தார். என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர் என் அம்மா. அதற்கடுத்து என் அப்பா. மூன்றாவது ராகுல் காந்தி.

எந்த பற்றும் இல்லாமல் இருந்தேன். தேர்தலிலும் தோல்வி அடைந்தேன். அது மோசமான நேரம். கவலை மட்டும் தான் இருந்தது. அந்த நேரத்தில் தான் ராகுல் காந்தி எனக்கு உதவி செய்தார். எமோஷனலாகவும் ஆதரவாக இருந்தார்" என்றார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.