Cinema

நெக்லஸ் அணிந்து மாஸாக போஸ் கொடுத்த டாப்ஸி.. ஆத்திரத்தில் புகார் கொடுத்த பாஜக MLA மகன்.. நடந்தது என்ன ?

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி பன்னு. தெலுங்கில் அறிமுகமாகிய இவரது, இரண்டாவது படமே தமிழில் தனுஷுடன் ஆடுகளம் படத்தில் நடித்தார். 2011-ல் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்த படமானது தாப்ஸிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து.

இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு என நடித்து வந்த இவர் இந்தி திரையுலகில் 2012-ல் அறிமுகமானார். இதையடுத்து தொடர்ந்து தற்போது இந்தி திரையுலகிலேயே கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவ்வப்போது விளம்பர படங்களில் நடித்து வரும் இவர், இறுதியாக விஜய் சேதுபதியுடன் 'அனபெல் சேதுபதி' படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் இவர், தமிழில் கைவசம் ஜெயம்ரவியுடன் 'ஜன கன மன' படமும், 'ஏலியன்' படமும் வைத்துள்ளார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அரசியல் ரீதியாகவும் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருவார். குறிப்பாக கங்கனா ரணாவத் கருத்துக்கு முரண்பாடாக இவர் ஏதாவது கருத்து தெரிவிப்பார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது மாடல் புகைப்படத்தை பதிவிட்டு வருவார். அந்த வகையில் நடிகை டாப்ஸி அண்மையில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது அவர் கவர்ச்சிகரமான ஆடை அணிந்து ராம்ப் வாக் சென்றார். மேலும் முழு அலங்காரத்தில் இருந்த அவரது கழுத்தில் லட்சுமி உருவம் போன்ற ஒன்று பதிந்துள்ள நகையையும் அணிந்திருந்தார்.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் ஹார்ட்டு விட்ட நிலையில் ஒரு கும்பல் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது அந்த கவர்ச்சி ஆடையில் லட்சுமி உருவம் பொறித்த நெக்லஸை அவர் எப்படி அணியலாம் என்று கொந்தளித்து பாஜக நிர்வாகிகள், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதன் எதிரொலியாக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த, இந்து ரக்‌ஷக் சங்கதன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் பாஜக எம்.எல்.ஏ மாலினி கவுரின் மகனுமான ஏகலைவா சிங் கவுர் என்பவர் நடிகை டாப்ஸி மீது புகார் அளித்துள்ளார். மேலும் அவர் அப்படி ஒரு உடையில் இப்படி ஒரு நெக்லஸை அணிந்து மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் சினிமா வட்டாரத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக இதே போல் இந்து அமைப்பினர் பலரும் பெண்கள் ஆடைகள் குறித்து மோசமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அண்மையில் கூட பதான் படத்தில் தீபிகா உடைக்கு கடும் கண்டங்கள் வலுத்தது. பின்னர் அது அப்படியே புஷ்வாணம் போல் புஸ் என்று போய் படம் மாபெரும் ஹிட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பிரியங்கா சோப்ராவை இங்கிருந்து விரட்டியடித்தது இவர்தான்..” - கங்கனாவின் பதிவால் பாலிவுட்டில் அதிர்வலை !