Cinema

சிறந்த வசனகர்த்தா.. ‘நெஞ்சுக்கு நீதி’ படத்துக்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்துவுக்கு விருது !

ஆண்டுதோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. இந்த விருதுகள் வழங்கும் விழா 2008-ம் ஆண்டு முதலிருந்தே நடைபெற்று வருகிறது. முந்தைய ஆண்டு வெளியான தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், காமெடியில், வில்லன் என தேர்ந்தெடுத்து அடுத்த ஆண்டுகள் விருதுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 2020 இந்த விழா நடைபெறவில்லை என்று 2020 - 21 ஆகிய 2 ஆண்டுகளில் வெளியான சிறந்தவைகளுக்கு கடந்த 2022-ம் ஆண்டு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 2022-ம் ஆண்டு வெளியான படங்களின் சிறந்தவைகளை தேர்ந்தெடுத்து இந்தாண்டு விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இதில் பல்வேறு படங்கள் போட்டியிட்டு சில படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அந்த பட்டியலை இன்று ஆனந்த விகடன் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த நடிகர், படக்குழு, பொழுதுபோக்கு உள்ளிட்ட பிரிவுகளில் 'விக்ரம்' படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்து.

அதேபோல் சிறந்த நடிகையாக கார்கி படத்துக்காக சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் லவ் டுடே படமும் இரண்டு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வரிசையில் சிறந்த வசனத்துக்காக 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் வசனகர்த்தா தமிழரசன் பச்சமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு அனுபவ் சின்கா இயக்கத்தில், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் இந்தியில் வெளியான திரைப்படம்தான் 'ஆர்டிகள் 15'. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவானதுதான் 'நெஞ்சுக்கு நீதி'. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை போனி கபூரின் பே வியூ புரோஜெக்ட்ஸ் - Zee Studios- ROMEOPICTURES ராகுல் இணைந்து தயாரித்தது.

தமிழரசன் பச்சமுத்துவின் வசனத்தில், சாதி அடக்குமுறை குறித்து பேசும் இந்த படம் கடந்த ஆண்டு மே மாதம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்துக்காக திரை பிரபலங்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்துக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022 - சிறந்த வசனம் விருதை தமிழரசன் பச்சமுத்து வென்றுள்ளதாக விகடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான பதிவில், "ரீமேக் படங்கள் என்பவை அப்படியே அதை மொழிபெயர்ப்பதல்ல, அழுத்தமான வசனங்களின் மூலமாக அதை அடுத்தகட்டத்திற்கு உயர்த்திப்போக முடியும் என நிரூபித்துக்காட்டினார் தமிழரசன் பச்சமுத்து." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இவருக்கு ரசிகர்களும், திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இந்த படத்தின் நடித்த நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தில் வசனம் எழுதியதற்காக ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2022ல், சிறந்த வசனகர்த்தா விருதைப் பெறவுள்ள சகோதரர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு வாழ்த்துகள். சாதிய அடுக்கின் கோர முகத்தை வெளிச்சமிட்டுக்காட்டிய வசனத்தை அங்கீகரிக்கும் விகடனுக்கு நன்றி." என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Also Read: நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட LEO படக்குழு.. நடிகர்களின் Reaction என்ன? உடனிருந்து வீடியோ வெளியிட்ட Irfan