Cinema

பாலாவின் ‘வணங்கான்’ படப்பிடிப்பில் தாக்கப்பட்ட துணை நடிகை.. போலிசில் பரபரப்பு புகார்.. நடந்தது என்ன ?

தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் பாலா. 1999-ல் விக்ரமின் சேது படத்தில் அறிமுகமான இவர், அதன்பிறகு தொடர்ந்து படங்களை இயக்கி வந்தார். அவரது இரண்டாவது, மூன்றாவது படமே சூர்யாவை வைத்து இயக்கினார். அதன்படி நந்தா, பிதாமகன் படங்களை இயக்கினார்.

தொடர்ந்து இவர் பல படங்களை பல நடிகர்களை வைத்து இயக்கினார். இவரது இயக்கத்தில் பெரும் அவன் இவன், நான் கடவுள், பரதேசி உள்ளிட்ட படங்கள் இன்றளவும் நின்று பேசும். இவரது இயக்கத்தில் இறுதியாக வர்மா என்ற படம் உருவானது. ஆனால் அந்த படம் வெளியாகும் முன்னே விமர்சன ரீதியாக அடி வாங்கியதால் அதே படத்தை வேறு ஒரு இயக்குநர் இயக்கி 'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் வெளியானது.

கடந்த 2020-க்கு பின்னர் இவர் எந்த படமும் இயக்காமல் இருந்த நிலையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவை வைத்து 'வணங்கான்' படத்தை இயக்க திட்டமிட்டார். அதற்கான ஆயத்த பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில், கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது. அப்போதே பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்ததாகவும், இதனால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி கொள்ள போவதாக தகவல்கள் வெளியானது.

பின்னர் அவர்கள் சமாதானமாகி மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணமாக காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து 'வணங்கான்' படத்தின் கதையை, பாலா புதியதாக மாற்றுவதாகவும், அவருக்கு உதவியாக 'அருவி' படத்தை இயக்கிய அருண் புருஷோத்தமன் இணைந்திருப்பதாகவும் தகவல் வெளியானது

இதையடுத்து இந்த படத்தில் இருந்து சூர்யாவும், 2D நிறுவனமும் விலகி கொள்வதாக பரஸ்பரம் பேசி முடிவெடுத்து சூர்யா விலக போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருப்பினும், வணங்கான் படத்தை கைவிட நினைக்காத பாலா, இந்த படத்தை நடிகர் அருண்விஜய் வைத்து எடுத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்புக்காக பல பகுதியில் இருந்தும் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த படத்தில் ப்ரோடக்ஷன் மேனேஜர் ஜிதின் என்பவர், கேரளாவில் இருந்து துணை நடிகைகள் சிலரை அழைத்து வந்துள்ளார். அவர்களுக்கு 3 நாட்களுக்கு என சம்பளம் ரூ. 22 ஆயிரத்து 600 என பேசி கூட்டி வந்துள்ளார் ஜிதின்.

இந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் 3 நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து ஜிதின் அவர்களிடம் சொன்ன பணத்தை கொடுக்காமல், குறைவாக கொடுத்துள்ளார். இதனால் அந்த துணை நடிகர்கள் குழுவில் ஒருவரான லிண்டா என்பவர் இதுகுறித்து ஜிதினிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் திமிராக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, அது கைகலப்பாக மாறி, ஜிதின், லிண்டாவை அடித்து உதைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட துணை நடிகை லிண்டா, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியதே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அந்த படத்தில் நடித்த துணை நடிகைகள், தங்கள் சம்பளத்தை கேட்ட்டதற்கு ப்ரோடக்ஷன் மேனேஜர் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் அந்த 5 முக்கிய படங்கள்.. பட்டியல் இதோ !