Cinema
“இதுதான் நடந்தது.. என் அப்பா இறப்பு பத்தி பொய் செய்திய பரப்பாதீங்க..” - நடிகர் மயில்சாமியின் மகன் பேட்டி!
தமிழில் பிரபலமான காமெடி நடிகரான மயில்சாமி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். அதோடு இவரது உடலுக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் அந்த பகுதி மக்களும் திரளானோர் பங்கேற்றனர்.
இவரது மறைவு தமிழ் திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மயில்சாமியின் இறப்பு குறித்து ஆன்லைன் ஊடகங்கள் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு அவர் கோயிலில் இருக்கும்போதே உயிரிழந்து விட்டதாகவும், மகனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக நேர்ந்ததாகவும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மயில்சாமியின் மகன்கள் அன்பு மற்றும் யுவன் ஆகியோர் இன்று சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது, "என் அப்பா மறைவின்போது எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும், குறிப்பாக ஊடகத்தினருக்கும், காவல்துறையினருக்கும் நன்றி. என் அப்பா இறப்பு குறித்து ஒவ்வொரு ஊடகத்திலும் ஒவ்வொரு விதமாக செய்தி வந்தது. எனவே உடனிருந்த நான் விளக்கமளிக்கிறேன்.
அன்று கேளம்பாக்கம் அருகிலுள்ள மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு நான் அப்பா உள்ளிட்டவர்கள் 7.30 மணியளவில் சாப்பிட்டு விட்டு சென்றோம். இரவு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நள்ளிரவு 2.30 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் வீட்டிற்கு வரும் வழியில் பேசிக்கொண்டே வந்தோம். வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சியில் செய்தி பார்த்தோம்.
நான் உறங்கச்சென்ற பின் 10 நிமிடத்தில் அம்மா என்னை அழைத்தார், மூச்சு விட அப்பாவிற்கு சிரமமாக இருப்பதாக சொன்னார். உடனே எனது காரில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றேன். நான் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே திடீரென என் மேல் அவர் சாய்ந்து விட்டார்.
இதனால் என்னால் தொடர்ந்து கார் ஓட்ட இயலவில்லை, என்பதால் ஒரு ஆட்டோவை அழைத்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இருந்தபோதும் அப்பா ஒருவேளை கோமாவில் இருப்பாரோ, அவரை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று நினைத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்து சென்றேன். அங்கு பரிசோதித்த மருத்துவர்களும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் வீட்டிற்கு அவரது உடலை எடுத்து வந்தோம்.
இதுதான் உண்மையில் நடந்தது. அவர் இறப்பு குறித்து ஊடகங்கள் தவறான செய்தியை பரப்ப வேண்டாம். என் அப்பா சொல்வார் 'காசு சம்பதிக்கிறது முக்கியமில்ல; ஆட்கள் சம்பாதிப்பதுதான் முக்கியம்' என்று. அது அவரது இறப்பின்மூலம்தான் தெரிந்தது. வந்த அனைவருக்கும் நன்றி" என்று விளக்கம் அளித்தார்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!