Cinema
“காக்கை குருவி எங்கள் சாதி..” - மயில்சாமி எப்படி பட்டவர் ? - வைரலாகும் மறைந்த நடிகர் விவேக் பேச்சு !
தமிழில் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் மயில்சாமி. 1984-ம் ஆண்டு தாவனிக் கனவுகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சத்தியமங்கலத்தை சேர்ந்த இவர், நடிப்பில் மட்டுமல்லாமல் பலகுரல் மன்னனாக திரைப்பட தொகுப்பாளராக பணியாற்றினார்.
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இவர், தொடர்ந்து படங்களில் நடிக்கவே, தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து உச்சம் தொட்டார். மெயின் காமெடி நடிகராக இவர் நடித்த படங்கள் சில என்றாலும், விவேக், வடிவேலு உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இவர் தனது தனித்திறமையை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து குணச்சித்திர கதாபத்திரங்கள் என பல நடித்து வந்தார். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும் அரசியிலிலும் ஈடுபாடு மிக்கவராக காணப்பட்டார். இதனாலே 2021 தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால் அதில் தோற்றார்.
இருப்பினும் தனது பகுதி மக்களுக்காக உதவிகளையும், சமூக சேவைகளையும் தொடர்ந்து செய்து வந்தார் இந்த நிலையில், மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மயில்சாமி வரும் வழியிலேயே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தற்போது மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு நடிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மறைந்த நடிகர் சின்னக்கலைவானர் விவேக் மயில்சாமியை குறித்து பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு மயில்சாமி நடிப்பில் வெளியான திரைப்படம்தான் 'காசு மேல காசு'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, நடிகர் விவேக் நடிகர் மயில்சாமியை குறித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விவேக் கூறியதாவது, "மயில்சாமி என்னை விட வயதில் மூத்தவன்தான்; இருப்பினும் நான் அவனை வாடா போடா என்றுதான் அழைப்பேன். இவன பத்தின விஷயங்களை கதையை சொன்னால் பாரதிராஜாவே படம் எடுக்கிறேன் என்பார்.
இவன் இளிச்சவாயானா நல்லவனா என்றால் இளிச்சவாயன் / நல்லவன்னு தான் சொல்லணும். இப்படியொரு மனுஷன் நம்முடன் வாழ்வது, அதிலும் இந்த காலத்தில் வாழ்வது என்பது பெரிய விஷயம். யார் கேட்டாலும் தன்னிடம் உள்ளதை கொடுத்துவிடுவார்.
அப்போது சுனாமி பாதிப்பு ஏற்பட்டு கடலூர் பகுதியில் ஒரு கிராமத்திற்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் சென்று உதவி செய்து வந்தார். இது தெரிந்ததும் மயில்சாமி நாமும் எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். இவருக்கு பெரிதாக எழுத்தறிவு இல்லை என்றாலும், நல்ல மனசு இருக்கு. இவருக்கு எம்.ஜி.ஆர் தான் எல்லாமே. அடுத்த நாள் கையில் செலவு செய்ய காசு இல்லை; பட வாய்ப்புகளும் இல்லை.
ஆனால் எதாவது செய்யணும்னு உடனே விவேக் ஓபராய் வீட்டிற்கு சென்று 'You service super' என்று கூறிவிட்டு, தனது கழுத்தில் இருந்த எம்ஜிஆர் பதக்கம் போட்டு அணிந்திருந்த தங்க செயினை கழற்றி அவரது கழுத்தில் போட்டுவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் போய்ட்டான். கொஞ்சம் நின்னு இருந்தா அவர் இந்தியில் பேசுவது புரியாமல் எப்படி சமாளிக்கிறதுன்னு யோசித்திருப்பான்
இவன் எப்படினா.. ஒரு நாள் பணக்காரனா இருப்பான், ஒரு நாள் பிச்சைக்காரனா இருப்பான்.. வீட்டுல பாரதியாரின் மனைவி ஏதாவது சம்பாதித்து விட்டு அரிசி வாங்கிட்டு வாங்கன்னு சொல்வாங்க, அவரும் அரிசி வாங்கிட்டு வரும் போது, காக்கா, குருவிகள் பசித்து கிடப்பதை பார்த்துட்டு "காக்கை குருவி எங்கள் சாதி" என அந்த அரிசியை அதுங்களுக்கு போட்டுட்டு வீட்டுல வந்து வாங்கிக் கட்டிப்பாரு, அப்படித்தான் மயில்சாமியும்..
மயில்சாமியும் எங்கெல்லாமோ கேட்டு காசு புரட்டி விடுவான். ஆனா.. போற வழியில ஒரு பாட்டி ரோட்டு ஓரமா படுத்திருந்துச்சுனா, தான் போட்டு வந்த சட்டையை கழட்டி கொடுத்து விடுவான்; தான் கையில் வைத்திருந்த பணத்தையும் வள்ளல் போல் கொடுத்து விடுவான்.. இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷன்" என்று கூறியிருப்பார் நடிகர் விவேக். தற்போது இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.
நடிகர் விவேக்கும் மயிலசாமியும் குறிப்பிட்ட சில படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அதில் முக்கியமாக அமைந்தது விக்ரம் நடிப்பில் வெளியான 'தூள்'. இந்த படத்தில் "திருப்பதியில் லட்டுக்கு பதில் ஜாங்கிரி கொடுப்பதாக " மயிலசாமி விவேக்கிடம் கூறும் டயலாக் பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் 'பாளையத்து அம்மன்' படத்திலும் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் நெருங்கிய நல்ல நண்பர்கள் ஆவர். விவேக் கடந்த 2021-ம் ஆண்டு உயிரிழந்தார். இந்த சூழலில் இவர்கள் வீடியோ அனைவர் மனதையும் உருக செய்கிறது .
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!