Cinema
விரட்டியடிக்கப்பட்ட கேரளாவின் முதல் நடிகை.. கூகுளின் Doodle கொண்டாடும் PK ரோஸி யார்? -மறைக்கப்பட்ட வரலாறு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான சினிமா, ஆண்களை மையப்படுத்தியே காணப்பட்டது. மேலும் ஒரு பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் காண்பித்தது. நாளடைவில் பகுத்தறிவு வளர வளர பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டது.
தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்கள் இன்றி ஒரு படமும் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. மேலும் பெண்களுக்கு என்று முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்திலே நயன்தாரா, சமந்தா, த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என கோலிவுட் முதல் தீபிகா உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள் வரை நடித்து வருகின்றனர்.
ஆனால் சினிமா தொடங்கிய ஆரம்ப காலத்தில் கேரள திரையுலகில் நடிகையாக அறிமுகமான ஒரு பெண், தனது சொந்த ஊர்காரர்களாலே ஊரை விட்டு விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான், 'சாதி'. தற்போது சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் கேரளாவில் அப்போது சாதிய கட்டமைப்புகள் ஓங்கி இருந்தது.
அந்த சமயத்தில் நாயர், நம்பூதிரி உள்ளிட்டோர் உயர்ந்த சாதியினராக கருத்திக்கொண்டனர். அவர்கள் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களை மட்டம் தட்டியும், கீழேயும் வைத்து வந்தனர். அந்த சமயத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குநர் ஒருவர் கேரளாவில் சென்று திரைப்படம் இயக்கியபோது, அதில் கதாநாயகியாக நடித்தது ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த பெண். அதற்காக குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை கொலை செய்யவும் தயங்கவில்லை. அந்த பெண்தான் ரோஸி.
யார் இந்த பி.கே.ரோஸி :
கேரளா மாநிலம் திருவனந்தரபுரத்தில் உள்ள நந்தன்கோடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள். ஏழ்மைப்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த இவர், தனது சிறு வயதிலேயே புல் வெட்டும் தொழிலாளியாக இருந்து வந்தார். தொடர்ந்து அப்போது கிறுஸ்துவர்கள் வந்து இவர்களிடம் பேச, இவர்கள் அனைவரும் கிறிஸ்துவர்களாக மாறினர். அப்போது இவரது பெயர் ரோஸியம்மாள் என்று மாற்றப்பட்டது. சில காலங்கள் கழித்து ரோஸியம்மாள் மேடை நாடகங்களை பார்த்து நடிப்பதில் ஆர்வம் மிக்கவராக காணப்பட்டார். தொடர்ந்து தனது உறவினர் ஒருவரது உதவியால் 'காக்காசி' என்னும் நாடகத்தில் சேர்ந்தார்.
திரைத்துறையில் ஏதேனும் சாதிக்க எண்ணி, தற்பட்டது சென்னை வரும் பலரும், ஆரம்பத்தில் மும்பைதான் சென்றனர். அங்கே தங்களுக்கு தேவையானவையை கற்றுத்தேர்ந்து அதனை இங்கே பிரதிபலிப்பார்கள். அப்படி பட்ட ஒருவர்தான் ஜே.சி. டேனியல். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரத்தில் பிறந்த இவர், அவர் ஆரம்பத்தில் கேரளாவில் தனது படத்தை இயக்கவிரும்பினார். அதற்கு கதாநாயகி தேர்ந்தெடுக்க முயன்றார். ஆனால் கேரளாவில் உள்ள பெண்கள் யாரும் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.
அப்போதுதான் டேனியல், ரோஸியை பற்றி கேள்விப்பட்டார். உடனே அவரை அணுகினார். அவரும் படத்தில் சம்மதம் தெரிவிக்கவே, படத்தின் ஷூட்டிங் நடைபெற்று படமும் நிறைவடைந்து திரையரங்கில் வெளியானது. இந்த படத்தை இயக்கி, தயாரித்து, நடித்தும் உள்ளார் டேனியல். அந்த காலத்தில் அனைத்தும் 'டென்ட் கொட்டா' என்பதால் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மேலேயும், சிலர் மண் தரையிலும் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த படத்தின் பெயர்தான் 'விகதக் குமாரன்'. 1930 இல் வெளியான இந்த படமே கேரளாவில் வெளியான முதல் மலையாள படமாகும். இந்த படம் மட்டும் அல்ல, இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், நடிகை என எல்லாத்திலுமே இது தான் கேரள திரையுலகில் முதன் திரைப்படம் ஆகும். ஆனால் இந்த படமே ரோஸிக்கு கடைசி படமாக அமைந்துவிட்டது.
இந்த படத்தில் ரோஸி ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் 'சரோஜினி நாயர்'. இதனை கண்டதும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள், "உயர்சாதி பெண்ணின் கதாபாத்திரத்தில் கீழ்சாதி புலையர் பெண் எப்படி நடிக்கலாம்?" என்று கேட்டு வன்முறையில் ஈடுபட்டனர். அதோடு திரையரங்கிற்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து ரோஸியை கொலை செய்ய அவரது வீட்டிற்கும் வெறியர்கள் படையெடுத்து சென்றனர். ஆனால் அங்கு ரோஸி இல்லை என்பதை அறிந்த கும்பல், அவரது குடிசை வீட்டிற்கு தீவைத்து எரித்துவிட்டனர்.
வெறியர்கள் ரோஸியை தேடுவதை முன்பே அறிந்த இயக்குநர் டேனியல், ரோஸியை எச்சரிக்கவே அவரும் தனக்கு தேவையான பொருட்களை எடுத்து வீட்டை விட்டு வெளியேறினார். அங்கிருந்து அவர் ஒரு லாரி ஓட்டுநரின் உதவியுடன் தமிழ்நாட்டிற்கு வந்தார். அந்த ஓட்டுநர் பெயர் கேசவ பிள்ளை. நாளடைவில் அவரையே திருமணம் செய்து அவருடன் நாகர்கோவிலில் ராஜம்மாள் என்ற பெயரில் தங்கினார்.
சுமார் ஐம்பதாண்டுகாலம் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த அவர், 1988 இல் காலமானார். ரோஸியின் நிலைமை ஒரு புறம் இருக்க, இயக்குநர் ஜே.சி. டேனியல் தனது உயிரை பாதுகாத்து கன்னியாகுமரி பகுதிக்கு வந்து சேர்ந்தார். சில காலம் கழித்து கடனாளியாக மாறிய அவர், தன்னிடம் உள்ள கேமரா உள்ளிட்டவையை விற்றார். தொடர்ந்து தனது இறுதி காலத்தை அகஸ்தீஸ்வரத்திலும் பாளையங்கோட்டையிலும் வறுமையில் கழித்தார்.
இவர் ஒரு தமிழன் என்பதாலே இவருக்கு கேரள அரசு எந்தவித உதவியும் செய்ய மறுத்தது. வறுமை இவரை வாட்டவே, 1975-ல் காலமானார். அதன்பிறகு இவரை கெளவிக்கும் விதமாக கேரள அரசு 1992 ஆம் ஆண்டு முதல் மலையாள திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு ஜே. சி. டேனியல் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது
இதற்கு இடைப்பட்ட காலத்தில் இப்படிப்பட்ட ஒரு படம் வந்தது என்றே உலகம் அறியாமல் இருந்தது. ஆனால் பத்திரிகையாளர் ஒருவரது முயற்சியாலே இந்த படம் வெளியானது தெரியவந்தது. ஒரு படம் நடித்ததால் சொந்த ஊரை விட்டு விரட்டியடிக்கப்பட்ட ராஜம்மாள் (எ) ரோஸியின் 120-வது பிறந்த நாள் இன்று (அவர் பிறந்த தேதி - பிப்ரவரி 10, 1903)
எனவே ரோஸியை பெருமைப்படுத்தும் விதமாக கூகிளின் DOODLE அவரது உருவத்தை தம்முடைய அடையாள படமாக வைத்துள்ளது. ஒரு சிறந்த கலைஞராக போற்றப்பட வேண்டிய பெண்ணை குறிப்பிட்ட சாதிய வர்க்கம் மறைத்து விட்டது.
இவர்களது இந்த கதை 'செல்லுலாய்டு' (Celluloid) என்ற படமாக 2013-ல் வெளியானது. பிரித்திவிராஜ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படத்தை மலையாள இயக்குநர் கமல் இயக்கினார். இந்த படம் சிறந்த நடிகர், இயக்குநர், திரைப்படம், கலை இயக்குநர், இசையமைப்பாளர் உள்ளிட்ட 7 கேரள மாநில விருதுகள் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!