Cinema

‘படிப்பு தான் முக்கியம்’ : வாத்தி விழாவில் தனுஷ்.. இவரா இப்படி? எதனால் இந்த மாற்றம்!- ரசிகர்கள் ஆச்சர்யம்

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் தனுஷ். தனது தனித்திறமையினால் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த இவர், ஒரு நடிகர் மட்டுமல்லாது; தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகரும் ஆவார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், தமிழ் மட்டுமல்லாமல், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் வெளியான படம்தான் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். தொடர்ந்து அடுத்ததாக இவரது சகோதரன் செல்வராகவன் இயக்கத்தில் இவர் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம்தான் 'நானே வருவேன்'. பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யவில்லை என்றாலும், சைக்கோ திரில்லராக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது அவர் நடித்திருக்கும் படம்தான் வாத்தி. இயக்குநர் வெங்கி அத்லுரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

வரும் 17-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவுக்கு ரசிகர்கள் காத்திருந்த நிலையில், நேற்றைய முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்ட இயக்குநர், நடிகர்கள், நடிகைகள் உரையாற்றினர்.

தொடர்ந்து நடிகர் தனுஷ் மேடையில் ஏறி, படத்தில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து பேசிய அவர், “லாக்டவுன் காலத்தில்தான் வெங்கி இந்தக் கதையை கூறினார். நானே அப்போது வேலையில்லாமல் மனஉளைச்சலில் இருந்தேன். எனவே இந்த படத்தை எப்படியாவது மறுத்து விடலாம் என எண்ணினேன். கதையைக் கேட்டதும் எனக்குப் பிடித்துவிட்டது. இத்திரைப்படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படமானது 1990 காலகட்டத்தில் நடக்கும் ஒரு சம்பவம். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்போது நான் ஒரு மாணவன். நான் மாணவனாக இருக்கும்பொழுது ஆசிரியர் வேலை என்பது ஈஸி என்று நினைத்தேன். எப்போது வேண்டுமானலும், வரலாம் போலாம் என்றும், ஜாலியாக இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் முதல்நாள் படப்பிடிப்பின் போதுதான் டீச்சர் வேலை எவ்வளவோ கஷ்டம் என்பதை உணர்ந்தேன்.

ஒரு ஆசிரியர் கையில்தான் நம் தலை எழுத்தே இருக்கிறது. நான் பள்ளி படிக்கும்போதே டியூசன் சென்றேன். படிப்பதற்காக அல்ல; என் கேர்ள் பிரண்ட்டை பார்ப்பதற்காக. அப்போது என் வண்டியை வைத்து சத்தம் கொடுத்து என் கேர்ள் பிரண்டுக்கு சிக்னல் கொடுப்பேன். அதப் பார்த்து என் ஆசிரியர் 'இவன பாரு எங்க உருப்பட போறான்' என்றார்கள்.

அதேபோல்தான் பள்ளி படிக்கும்போது என் பெற்றோர்கள் பணம் கட்டிவிடுவார்கள் என்று நான் ஜாலியாக இருந்தேன். ஆனால் என் பிள்ளைகளை படிக்க வைக்கும் போது தான் அந்தக் கஷ்டம் தெரிகிறது. எந்தச் சூழ்நிலையிலும் படிப்பு மிகவும் அவசியமானது.

எண்ணம்போல் வாழ்க்கை, உங்களுடைய எண்ணத்தை படிப்பில் வையுங்கள். அது தான் உங்களைக் காப்பாற்றும். நான் என்ன விஷயங்களைச் சரி செய்து கொள்ள வேண்டும் என்று ஹோம் வொர்க் செய்வேன். 2010 வரை என்ன இப்படி செய்திருக்கிறோம் எனத் தோன்றும் இனி வரும் வருடங்கள் அப்படி இருக்கக் கூடாது என எண்ணுவேன்.

நான் சொல்வது உங்களுக்கு பிடிக்காது. இருந்தாலும் உரிமையுடன் சொல்கிறேன். எனது காரை பின் தொடர்ந்து வராதீர்கள். உங்களை நினைத்து பயமாக இருக்கிறது. நான் எப்போதும் இதை ஊக்குவிக்கமாட்டேன். உங்களுக்கென குடும்பம் இருக்கிறது. அதை பார்த்துக்கொள்ள நீங்கள் வேண்டும். தயவு செய்து இதை பின்பற்றுங்கள்” என்றார்.

இவரது இந்த பேச்சு தற்போது இளைஞர்களுக்கு ஊக்குவிக்குமா என்று தெரியவில்லை. ஆனால் ஆரம்பத்தில் இருந்த தனுஷ் படங்கள் இப்போது இல்லை என்று மட்டுமே புரிகிறது. ஏனெனில் இதே தனுஷ், தான் நடித்த பல்வேறு படங்களில் படிப்பு பிடிக்காதவனாகவும், படிப்பு என்றாலே வெறுப்பாக உள்ளதாகவும் வசனங்களை அள்ளி வீசியுள்ளார். இவரது இந்த வசனத்துக்கு விசில் பறந்தது.

குறிப்பாக கடந்த 2009-ல் சுராஜ் இயக்கத்தில் வெளியான 'படிக்காதவன்' படத்தில் படிப்புக்கு எதிர்மறையாக இவர் பேசிய வசனங்கள் ஏராளம். இருப்பினும் தற்போது அவரே படிப்பு முக்கியம் என்று சொல்லும் அளவிற்கு மாறியுள்ளது.

இதே போல் அசுரன் படத்திலும் “படிப்புதான் யாராலும் திருட முடியாத சொத்து.. நல்லா படிக்கணும்..” என்று இவர் பேசும் வசனம் இன்றைய தலைமுறையினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து கர்ணன் படத்திலும் படிக்கப்போகும் பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சீன் வரும்.

வாத்தி படத்தின் டீசரில் கூட “படிப்பை பிரசாதம் போல் கொடுங்க.. 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு போல் விற்காதீங்க..” என்று தனுஷ் பேசுவது போல் இடம்பெற்றிருக்கும். படிப்பு எவ்வளவு பிரச்னை என்று தனது படங்களில் பேசிய நடிகரே படிப்பின் முக்கியத்துவத்தை கூறுவது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

Also Read: குடித்துவிட்டு விமானத்தில் பயணம்.. சவுதியில் கைது செய்யப்பட்ட அனுராக் காஷ்யப்.. ரசிகர்கள் அதிர்ச்சி !