Cinema
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் சேர்ந்து கொண்டாடும் 'அயலி' வெப் சீரிஸ்.. காரணம் என்ன?
பொதுவாக தமிழ்ச்சூழலில் ஓடிடி தள படைப்புகள் பெரிய அளவில் மக்களை ஈர்த்திருக்கவில்லை. அதற்கு முக்கியமான காரணமாக தமிழ்ச்சூழல் புரியாத அல்லது பேசாத படைப்புகள்தாம் தமிழ் ஓடிடி தளங்களில் வெளியாகின. அந்த வரிசையிலிருந்து விலகிய படைப்பாக ‘அயலி’ தொடர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
தமிழ்ச்சூழலுக்கான முழுமையுடனும் அதன் முற்போக்குத்தன்மை கொண்டிருக்கும் பிரத்யேக பார்வையுடன் ‘அயலி’ வெளிவந்திருக்கிறது.
ஒரு கிராமத்தில் ‘அயலி’ என ஒரு தெய்வம் இருக்கிறது. அந்த தெய்வத்தை வணங்கும் ஊர் மக்களிடம் ஒரு பழக்கம். பெண் குழந்தைகள் பூப்பெய்தி விட்டால் படிக்கக்கூடாது. திருமணம் செய்து விட வேண்டும். எனவே தலைமுறை தலைமுறையாக பதின்வயதுகளிலேயே பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு ஆண்கள் மட்டுமே படிக்கும் சூழல். நிலைமை மாறுகிறது.
முதன்முதலாக அந்த ஊரைச் சேர்ந்த தமிழ் என்கிற மாணவி பத்தாம் வகுப்புக்குள் அடியெடுத்து வைக்கிறாள். ஊர், தெய்வம், குடும்பம் என எல்லா பக்கங்களிலிருந்தும் எதிர்ப்பு கிளம்புகிறது. மாணவி தமிழின் கல்விக் கனவு நிறைவேறுகிறதா, இல்லையா என்பதே மிச்சக் கதை!
கடந்த ஜனவரி 26ம் தேதி வெளியான இத்தொடர் பெரும் வரவேற்பை இணையதளங்களிலும் சமூகதளங்களிலும் பெற்றுக் கொண்டிருக்கிறது.
கல்விக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பு வரலாற்றுப்பூர்வமானது. அரசியல்ரீதியிலானது. பாலி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகள் அரசவையிலும் அறிஞர் மொழியாகவும் சுருங்கியிருந்த இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் 2300 வருடங்களுக்கு முன் மாடுபிடிக்கும் சண்டையில் உயிரிழந்தவனின் நினைவுக்கல்லில் அந்துவன் என பொறிக்கப்பட்டிருப்பதை கொண்டு, தமிழ் வெகுஜன மொழியாக இருந்தமையை உணர்ந்து கொள்ள முடியும். இந்தியத் துணைக்கண்டத்தில் அகழாய்வுகளில் அதிகமாக கண்டெடுக்குப்படும் எழுத்துகள், தமிழி எழுத்துகளாகவே இருக்கின்றன.
கற்றறிந்த சமூகமாக ஈராயிரம் வருடங்களாக தமிழ்ச்சமூகம் இருந்து வருவது இயல்பானது கிடையாது. மாறிய ஆட்சிகள், அரசுகள் என எல்லா காலங்களிலும் தொடர்ந்து கல்வியை முக்கியமாக கருதியதன் விளைவாகவே கற்றல் தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது. இதன் அர்த்தம் கல்வி மறுக்கப்படும் சமூகநிலைகள் ஏற்பட்டபோது கூட தமிழ்ச்சமூகம் கல்வியை விட்டுவிடாமல் போராடியேனும் பெற்றுவிடும் சமூகமாக இருந்திருக்கிறது என்பதே.
சுதந்திரத்துக்கு பிறகான இந்தியா எத்தகைய அரசியல் மற்றும் ஆட்சிமுறைக்கு நகர்வது என்கிற விவாதத்தில் இருந்தபோது தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட பிரச்சினையே வேறு. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டை கேட்டுக் கொண்டிருந்தது தமிழ்நாடு. அது இல்லையென்றதும் அரசியல் சாசனத்தை கொளுத்தவும் இறங்கியது தமிழ்நாடு. பெரும் போராட்டத்துக்கு பிறகு இந்திய அரசியல் சாசனத்தில் முதல் சட்டத்திருத்தத்தை முன்னெடுக்க வைத்து தன் கல்வியுரிமையை பெற்றது தமிழ்நாடு.
தமிழ்ச்சூழலில் இத்தகைய நீண்ட நெடிய அறிவுரிமை வரலாறு மற்றும் போராட்டம் ஆகியவற்றில் வெளிச்சம் பாய்ச்சி நமக்கு நினைவுறுத்தும் வேலையை ‘அயலி’ தொடர் செய்திருக்கிறது. குறிப்பாக பெண்ணுக்கு கல்வி மறுக்கும் சூழலை சாடியிருக்கிறது இத்தொடர்.
தொடரைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தன் தாய், தங்கை, அக்கா, அப்பா, பாட்டி, அண்ணன் என குடும்பத்தில் பார்த்த ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தொடரில் காணுகின்றனர். கல்விக்கு ஒவ்வொரு தலைமுறையிலும் பெண் போராடி அடைந்த பண்பாட்டு படிமத்தை இத்தொடர் தெளிவுற காட்சியாக்கி இருக்கிறது.
‘அயலி’ தொடரின் சிறப்பே அது சொல்லப்பட்ட விதம்தான். கொஞ்சம் அசந்தாலும் பிரசாரமாகவும் கனமாகவும் மாறிவிடக் கூடிய களத்தை எச்சரிக்கையாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறது படக்குழு!
கல்வியுரிமை, பெண் விடுதலை போன்றவற்றை நகரத்தன்மையில் இருந்து கொண்டு மேட்டுக்குடி தளத்தில் நின்று பேசுதல் பெரும் அடையாளத்தையும் வாய்ப்புகளயும் ஏற்படுத்திக் கொடுக்கும். தொடரின் இயக்குநர் அங்குதான் வித்தியாசப்படுகிறார். மேம்போக்கான மாற்றத்தை பேச விரும்பாமல், நேரடியாக பெண் ஒடுக்குமுறை, அதை விதைக்கும் சாதி, இரண்டையும் பாதுகாக்கும் வழிபாடு ஆகியவை ஊறிப் போயிருக்கும் கிராமத்தின் களத்தில் கதை அமைத்து உரையாடி வெற்றியடைந்திருக்கிறார் இயக்குநர் முத்துக்குமார்.
இயக்குநரின் சிந்தனைக்கும் முயற்சிக்கும் தோள் கொடுத்து வசனங்கள் கொடுத்திருக்கிறார் சச்சின். இந்திய துணைக்கண்டதில் புகுந்து சீழ் பிடித்தாட்டும் ‘அயலர்’ பண்பாட்டை எந்த பூச்சுமற்ற எளிய மக்களின் வார்த்தைகளை கொண்டே ‘அயலி’யில் உடைத்து எறிந்திருப்பது சச்சினுடைய திறமைக்கு சான்று.
தொடரில் மாணவி தமிழாக நடித்திருக்கும் சிறுமி தொடங்கி, தாயாக தந்தையாக தோழியாக ஆசிரியராக என எல்லா பாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். கதையை கருத்தியல்பூர்வமாக செலுத்தும் பாத்திரங்களாக பிரகதீஸ்வரனும் ஜென்சன் திவாகரும் வெகு சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
Zee5 ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் ‘அயலி’ தொடரை அனைவரும் பாருங்கள். குழந்தைகளுடனும் வீட்டிலுள்ள பெண்களுடனும் சேர்ந்து பாருங்கள்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?