Cinema

“பொண்ணுங்களுக்கு தீட்டா.. எந்த கடவுள் சொன்னது ?” - சபரிமலை அனுமதி குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளாசல் !

தமிழில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.2011ம் ஆண்டு வெளியான 'அவர்களும் இவர்களும்' என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர், தனியார் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியாளராக வந்தார்.

அதன்பிறகு அட்டத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என சில படங்களில் நடித்திருந்தாலும், 2015-ல் வெளியான 'காக்கா முட்டை' படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த படத்திற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வரும் இவர், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படங்கள்தான் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' மற்றும் 'ரன் பேபி ரன்'. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

மலையாள மொழியில் மாபெரும் வரவேற்பு பெற்ற 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தை தமிழில் ஆர்.கண்ணன் இயக்குக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், தி கிரேட் இந்தியன் கிச்சன் படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகிவுள்ளது. எல்லாரும் பார்க்க வேண்டிய படம் இது" என்றார்.

மேலும் ஆணாதிக்கம் குறித்து கேள்விக்கு, "இப்பொழுது கூட ஆணாதிக்கம் இருக்கிறது. ஆணாதிக்கம் என்பது கிராமத்து பக்கம் நிறைய இருக்கிறது என்பது எனது கருத்து. பெண்கள் வாழ்க்கை கிச்சனில் மட்டும் முடியாமல் வெளியில் வரவேண்டும். இந்த கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும். கிச்சனில் எனது வருங்கால கணவர் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பொண்ணுங்களுக்குனா தீட்டா..எந்த கடவுள் சொல்லுச்சு. கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்தக்கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? இருந்தால் சொல்லுங்கள்.

எந்த கடவுளும் இது பண்ணக்கூடாது. இது சாப்பிடக்கூடாது என சட்டம் வைக்கவில்லை. எல்லாமே மனிதர்கள் உருவாக்கியது. தீட்டு என்பது மனிதர்கள் உருவாக்கியதுதான். எந்த கடவுளும் எனது கோயிலுக்கு வரக்கூடாது, இதை சாப்பிடக்கூடாது என்று சொன்னதில்லை. நான் இது போன்ற நம்பிக்கைகளை எப்போதும் நம்பியதே இல்லை." என்றார்.