Cinema
அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய சட்டக்கல்லூரி மாணவர்.. அதிரடி நடவடிக்கை எடுத்த கல்லூரி நிர்வாகம் ! VIDEO
தமிழ் மற்றும் மலையாள படங்களில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் அபர்ணா பாலமுரளி. இவர் தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும், சூர்யாவுடன் 'சூரரைப்போற்று' படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். இதையடுத்து தமிழ், மலையாளம் படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
தற்போது மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர், ஷாகித் அராபத் இயக்கத்தில் நடித்துள்ள படம்தான் 'தங்கம்'. இந்த படம் வரும் 26-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில், இதன் ப்ரோமோஷன் விழா கடந்த 3 நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகை அபர்ணா பாலமுரளி, படத்தின் இயக்குநர் ஷாகீத் அராபத், நடிகர் வினித் ஸ்ரீனிவாசன் என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது, மேடைக்கு வந்த அந்த சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் நடிகை அபர்ணா பாலமுரளிக்கு பூ கொடுத்தார். பிறகு உடனே அந்த மாணவர் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்காக நடிகை தோள்மீது கைபோட முயன்றார். இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத அபர்ணா, அதிர்ச்சியடைந்து மாணவர் பிடியில் இருந்து தப்பி தனது இருக்கையில் அமர்ந்தார். மாணவரின் இந்த அத்துமீறலை கண்டு படக்குவினர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சிறிதுநேரம் கழித்து, மாணவர் மீண்டும் மேடைக்கு வந்து தான் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, 'நான் அவரது ரசிகர் என்பதால் அப்படி நடந்து கொண்டேன்' என கூறிவிட்டு மீண்டும் நடிகை அபர்ணா பாலமுரளிக்கு கைக்கொடுக்க முயன்றார். ஆனால் அவர் அந்த மாணவருக்கு கைக்கொடுக்க மறுத்துவிட்டார். பிறகு அந்த மாணவர் மேடையில் இருந்து கீழே சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும், "ஒரு பெண்ணின் உடலை அவரது அனுமதி இன்றி தொடுவது தவறு. அவருக்குத் தொல்லை கொடுத்தபிறகு மன்னிப்பு கேட்பது ஏற்கமுடியாது" என அந்த மாணவரின் நடவடிக்கைக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. மேலும் இப்படி நடக்கும்போது தடுக்க முன்வராத கல்லூரி நிர்வாகத்தின் மீதும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
அதோடு இதற்கு மஞ்சிமா மோகன் உள்ளிட்ட நடிகைகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து கல்லூரி சங்கமும் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் 18/01/2023 அன்று நடைபெற்ற யூனியன் பதவியேற்பு விழாவில், மாணவர் ஒருவர் திரைப்பட நட்சத்திரத்திற்கு எதிராக அநாகரீகமாக நடந்து கொண்டது மிகவும் வருத்தமளிக்கிறது. சம்பவத்தின் போது, தொழிற்சங்க அதிகாரி அத்தகைய நடத்தையை நிறுத்த முயன்றார் மற்றும் சங்கத்திலிருந்து வருத்தம் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக நடிகருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு கல்லூரி மனதார வருந்துகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மலையாள நடிகர் - நடிகைகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் அபர்ணா பாலமுரளியிடம் மன்னிப்பு கேட்டது. தொடர்ந்து நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய மாணவரான விஷ்ணு, தனது தவறான நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திற்கு விளக்கம் அளித்தார்.
இருப்பினும் விஷ்ணுவின் நடவடிக்கை குறித்து கண்டிக்கும் விதமாக சட்டக் கல்லூரி பணியாளர் கவுன்சில் மாணவர் விஷ்ணுவை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!