Cinema

தோல்வி அடைந்த 'பாபா' படம்.. 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஏன் வெளியிடுகிறார் ரஜினி?

2002ம் ஆண்டில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கதை, திரைக்கதை எழுதி ரஜினிகாந்த் நடித்து தயாரித்த பாபா திரைப்படம் சில மாற்றங்களுடன் இன்று மீண்டும் வெளியாகி இருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் பல நல்ல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. முள்ளும் மலரும், தளபதி, பாட்ஷா என அவரின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திய முக்கியமான திரைப்படங்கள் பல. அவை இன்று தொலைக்காட்சியில் போட்டாலும் அலுக்காமல் பார்க்கும் மக்கள் பலர் இருக்கின்றனர். அத்தகைய படங்களையெல்லாம் விடுத்து ‘பாபா’ படத்தை ரஜினிகாந்த் மறுவெளியீட்டுக்கு தேர்ந்தெடுத்ததற்கு என்னக் காரணம்?

2002ம் ஆண்டு படம் வெளியானபோதே ரஜினிகாந்துக்கு பாபா படம் மிக நெருக்கமான படமாக இருந்தது. பலபல கதைகளை புறக்கணித்து இருந்த சூழலில் எதோ ஒரு வழியாக அறிமுகமாக பாபா என்கிற சாமியாரை முற்றாக பின்பற்ற தொடங்கி இருந்தார் ரஜினி. அதே சமயம் அதை திரைப்படமாக செய்யலாம் என்கிற எண்ணமும் அவருக்கு எழுந்தது. அதனால் அவர் இப்படத்தில் கதை எழுதியிருந்தார். முக்கியமான அப்படத்தை அவரே தயாரித்தும் இருந்தார். அச்சமயத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் பேச்சும் வழக்கம் போல உச்சத்தில் இருந்து கொண்டிருந்தது. இப்படம் வெளியாகி வெற்றி பெற்று தனக்கு வேறு ஒரு அடையாளத்தைப் பெற்றுத்தரும் என்பதையும் அவர் மிகவும் நம்பி இருந்தார். அநேகமாக அரசியலுக்கு வரும் நோக்கம் அந்த அறிவிப்புக்கு பின்னால் இருக்கலாம் என்று கூட ஊகிக்கப்பட்டது. ஆனால் படம் ஓடவில்லை. ரஜினி நடித்த படங்களிலேயே மிகப் பெரும் தோல்வியை அப்படம் சந்தித்தது. பாபா படத்தை வாங்கியிருந்த விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திரும்ப ரஜினி கொடுக்குமளவுக்கு இருந்தது அப்படத்தின் தோல்வி.

இருந்தும் ஏன் பாபா படத்தை ரஜினி மீண்டும் வெளியிடுகிறார்?

இவை எல்லாம் கெட்ட கனவாக நினைத்து ரஜினியே மறந்திருந்த நேரத்தில்தான், பா.ஜ.க தனது நாடகத்தை நடத்த ரஜினியை நாடியது. பலகட்ட யோசனைக்குப் பிறகு ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். பாஜக தலைவர்கள் வடக்கில் இருந்தும் உள்ளூரில் இருந்தும் பலர் தூபம் போட்டனர். திரைக்குப் பின் பல வாதப் பிரதிவாதங்களும் லாப நட்டக் கணக்குகளும் போடப்பட்டு ரஜினிகாந்துக்கு, அரசியல் பிரவேசம் எந்தப் பாதிப்பையும் அளிக்காது என்ற உத்திரவாதத்தின்படி அவரின் அரசியல் அரங்கேற்றப்பட்டது. பாஜகவை நம்பி கப்பல் கவிழ்ந்த கதைகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருந்தபோதும் ரஜினி காலை விட்டார்.

ஆனால், அந்த நேரத்தில் தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றங்களால் கட்சி அறிவிப்புக்குப் பிறகு பாஜக பக்கம் ஒத்துழைப்பு ஏதும் அதிகமாக இருக்கவில்லை. அதிமுகவின் இடத்தில் ரஜினி கட்சி நிறுவப்படும் என்கிற உறுதிக்கு மாறாக, அதிமுகவுடன் பாஜக குலாவுவதை பார்த்ததும் ரஜினிக்கு அதிருப்தி ஏற்பட்டு மீண்டும் ஒரு கூட்டம் போட்டார். ‘அரசியலில் வருவதற்கான அலையை உருவாக்குங்கள்’ என்றெல்லாம் மன்றாடி பார்த்தார். ஆனால் பலனில்லை. தேரை இழுத்து தெருவுக்கு விட்டு கழன்று கொள்வதை மரபாக வைத்திருக்கும் கூட்டம் ரஜினியை பொருட்படுத்தவில்லை.

நேர்மையான அதிகாரியென அண்ணாமலையை ஆட்டுக்குட்டியுடன் அறிமுகப்படுத்தி, ‘எனக்குப் பிடித்த முதல்வர் candidate அண்ணாமலைதான்’ என ரஜினி அறிவிக்க வேண்டுமென்கிற ஸ்க்ரிப்ட், அண்ணாமலை தமிழ்நாட்டில் அறிமுகமானபோதே தமிழ் மக்களால் சமூகதளங்களில் தவிடுபொடியாக்கப்பட்டது. அரசியல் பிரவேசம் பிரமாதமாக நேரும் என நம்பியிருந்த ரஜினி, கடைசியில் நகைப்புக்கான ஆளாக பாஜகவின் புண்ணியத்தில் மாறிக் கொண்டிருந்தார். இறுதியில் ரஜினிக்கே சொல்லப்படாமல் ஒரு படுபயங்கரமான ட்விஸ்ட்டை பாஜக திட்டமிட்டிருந்தது தெரிய வந்ததும் ரஜினி மீண்டும் முருங்கை மரத்துக்கு ஏறினார். உடல்நிலை சிக்கலைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரப் போவதில்லை என அறிவித்தார். ஆனால் பாஜக விடுமா?

இந்த நிலையில்தான் பாபா படத்தின் மறுவெளியீட்டை ரஜினி அறிவித்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். பாபா படத்தின் இயக்குநர் மறுவெளியீடு குறித்து கொடுத்த பேட்டி ஒன்றில், சமீபத்தில் வெளியான ‘காந்தாரா’ படம்தான் ரஜினிக்கு மறுவெளியீடு யோசனை கொடுத்ததாக சொல்லி இருக்கிறார். காந்தாரா படம் பேசும் அரசியல் நிச்சயமாக ரஜினிக்கு பிடித்தமான அரசியலாகவே இருக்கும். காரணம் என்னவெனில், நாட்டார் தெய்வத்தை பார்ப்பனமயப்படுத்தி இஸ்லாமியரை தீவிரவாதியாக்கி, மக்களின் வசிப்பிடத்தை அரசு அழிக்க தூக்கிக் கொடுக்கும் கதை நிச்சயம் அவருக்கு உவப்பாகவே இருக்க முடியும். ஆனால் அந்த படத்தின் வழியாக பாபா மறுவெளியீட்டுக்கு ரஜினி எப்படி சென்றடைந்திருப்பார்?

ரஜினியைப் பொறுத்தவரை பாபா அவருக்கு நெருக்கமான படம். பிடித்த படங்கள் என எப்போதும் அவர் சொல்வது இரண்டைத்தான். ராகவேந்திரா மற்றும் பாபா. முள்ளும் மலரும், பாட்ஷா, அண்ணாமலை, எந்திரன் படங்கள் போன்றவை அவ்வப்போது சூழலைப் பொறுத்து பட்டியலில் இடம்பெறும். ஆனால் இவ்விரு படங்களும் எப்போதுமே அவருக்கு நெருக்கம். குறிப்பாக பாபா அவரது சிந்தனையிலிருந்து உதித்த கதை. பாபாவின் கதைப்படி, கடவுள் நம்பிக்கை அற்ற ஒருவன், பிறகு பாபாவின் அருளால் ஆன்மிகமடைந்து, அரசியலுக்குள் புகுகிறான் என்பதே கதை.

ஏற்கனவே பெரியாரை ஒரு மேடையில் ரஜினி விமர்சித்த சம்பவம் கூட நினைவிலிருக்கலாம். அதே நேரம் பாபா படத்திலும் பெரியார், திராவிட இயக்கங்களை சீண்டி இருப்பார் ரஜினி. எனவே ரஜினியைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் என்பது கடவுள் மறுப்பு மற்றும் மதத்துக்கு எதிரான இயக்கம். அவ்வளவுதான். அதற்குப் பின் இருக்கும் சமூகநீதி மற்றும் முற்போக்கு அரசியல் எதுவும் அவருக்கு தெரியாது. போலவே கடவுள் மறுப்பு என்பது அவருக்கு உவப்பில்லாத விஷயம். எனவே இந்தச் சூழலில் பிறந்து வளர்ந்த நாயகன் எப்படி அருளடைந்து ஆன்மிகம் எட்டி அரசியலுக்கு சென்றான் என்பதே அவரது கதையாக இருந்தது. தமிழ்ச்சூழலில் தன் அரசியல் நிலைப்பாடாகவும் செய்தியாகவுமே பாபா கதையை அவர் எழுதியிருந்தார். அதன் விளைவாகத்தான் பாஜக போட்ட தூண்டிலை பற்றி அரசியலுக்கு வந்தபோது கூட தன்னுடைய அரசியல் ‘ஆன்மிக அரசியல்’ என ‘பரோட்டா வடகறி’ காம்பினேஷன் போல ஒரு நிலைப்பாட்டை அறிவித்தார்.

காந்தாரா படத்தின் நாயகனும் விட்டேத்தியாக சுற்றும் நாயகன்தான். பாபா பட நாயகனும் விட்டெத்திதான். காந்தாராவில் நாயகன் சாமியாகிறான். பாபாவிலும் நாயகன் ஆன்மிகமாகிறான். பாபா வெளியானபோது ஓடவில்லை. காந்தாரா இப்போது ஓடியிருக்கிறது. எனவே பாபா படம் வெளியானபோது இருந்த சூழல் இப்போது மாறிவிட்டது. So new Baba has born எனத் தெளிவாக சிந்தித்து படத்தை மறுவெளியீடு செய்திருக்கிறார் ரஜினிகாந்த்.

ஆனால் பாவம் ரஜினி. பாபா படத்தை மட்டுமல்ல, அதன் அரசியலையுமே அவரின் வழியாக வந்தபோது ஏற்கவில்லை தமிழ்ச்சமூகம். ஆனாலும் பாடம் கற்கவில்லை. மீண்டும் பாடம் புகட்டப்படும்.

திராவிட இயக்கம், தமிழ்நாடு, மக்கள், பாஜக எனப் பல விஷயங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் போனது கூட ரஜினியுடன் பிரச்சினை அல்ல, அவர் எழுதிய பாபா படத்தின் கதையைக் கூட அவர் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் ஆகச்சிறந்த சோகம்.

மெட்ராஸ் படத்தில் ஜானி என்கிற கதாபாத்திரத்தை பார்த்து சக நடிகர் ஒரு வசனம் சொல்லுவார். அது இப்போது ரஜினிக்க்கு பொருந்திப் போகிறது என்பதுதான் காலம் செய்த கோலம்.

அந்த வசனம்.. ‘ஹ்ம்... ஒரு காலத்துல அவர பார்த்து அலறாதவே இல்ல தெரியுமா....!’

Also Read: காலநிலை மாற்றம்.. உலகை காப்பாற்ற நமக்கு 8 வருடங்களே இருக்கு: என்ன செய்யபோகிறோம் நாம்!