Cinema
#FactCheck: 'Kashmir Files' சர்ச்சை.. நடாவ் மன்னிப்பு கேட்டதாக வதந்தி பரப்பி வரும் கும்பல்.. ஆனால் உண்மை?
காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து கோவா திரைப்பட விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடாவ் லாபிட், தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளதாக ஊடங்களில் பொய்யான தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் உண்மை என்ன என்பதை இதில் பார்ப்போம்.
கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் தான் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த திரைப்படத்தை, வலதுசாரி அமைப்புகள் வெகுவாக பாராட்டுத் தெரிவித்து வரவேற்றன.
அதேநேரத்தில் வரலாற்றை திருத்தி அமைக்கும் முயற்சியாக இந்த திரைப்படம் இருப்பதாகவும், இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் மற்ற சில அமைப்புகள் குரல் கொடுத்தனர்.
மேலும் மத கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் இந்த படத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதேவேளையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்களால் பாராட்டப்பட்ட இந்த படம் 330 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவாவில் 53-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், சர்வதேச போட்டிக்கான தேர்வுக் குழுவிற்கு இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாபிட் தலைமை ஏற்றார்.
அப்போது நிறைவுப் போட்டியில் பேசிய அவர், “வெறுப்புணர்வைத்தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக இது எங்களுக்குத் தோன்றியது.
விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்துக்கு அனைவர் மத்தியிலும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆதரவு அளித்துள்ளனர். இருப்பினும் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவரின் இந்தக் கருத்துக்கு அப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி, நடிகர்கள் அனுபம் கெர், பல்லவி ஜோஷி உள்ளிட்டோர்களும், பாஜக ஆதரவாளர்கள் சிலரும் எதிர்ப்பு காட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் வருத்தம் தெரிவித்திருந்தார்.
மேலும் சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென்னும், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் குறித்த நடாவ் லாபிட்டின் கருத்து, முற்றிலும் அவரது தனிப்பட்ட கருத்து என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த சர்ச்சை கருத்தை குறித்து பல்வேறு ஆங்கில ஊடங்கங்களும் நடாவிடம் பேட்டியெடுத்தது. அப்போது தனது கருத்துக்கைளை அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து தான் 'தி காஷ்மீர் பைல்ஸ்' பற்றி கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும், இது ஒரு அருமையான திரைப்படம் என்றும் அவர் தெரிவித்திருந்ததாக பாஜக கும்பல் இணையத்தில் செய்திகள் பரப்பி வருகின்றன.
மேலும் அந்த படத்தின் இயக்குநர் விவேக், தனது ட்விட்டர் பக்கத்தில்,"இவர் மன்னிப்பு கோரியதால், இவரே இந்த உலகில் நேர்மையான மனிதர்" என்று பதிவிட்டிருந்தார். மேலும் இந்த படத்தில் நடித்திருந்த அனுபம் கேர் என்ற நடிகரும் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாய்மையே வெல்லும்.. உண்மை தான் இறுதியில் வெற்றிபெறும்.. சில சமயங்களில் ஞானமும் உங்களை அந்த இடத்தில் வைக்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.
இது தற்போது வைரலாக பேசப்பட்டு வரும் நிலையில், உண்மையில் இஸ்ரேலிய இயக்குநர் நடாவ் லாபிட் மன்னிப்பு கேட்டாரா என்றும், காஷ்மீர் பைல்ஸ் படத்தை பாராட்டினாரா என்றும் இணையத்தில் பல கேள்விகள் எழுந்து வருகின்றன. ஆனால் உண்மை என்னவோ அவர் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கவே இல்லை. மாறாக தான் கூறிய கருத்து அனைத்தும் உண்மை தான் கூறினார்.
இது குறித்து அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது, "யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களையோ, அவர்களது உறவினர்களையோ அவமதிக்கும் நோக்கில் நான் அப்படி சொல்லவில்லை. அப்படி உங்களை காயப்படுத்தியதாக நினைத்திருந்தால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்.
ஆனால், நான் படம் பற்றி கூறிய கருத்து அனைத்தும் முற்றிலும் மறுக்க முடியாத உண்மை. இது நடுவர் குழுவின் உறுப்பினர்களுக்கும் தெரியும். இது போன்ற கௌரவமான திரைப்பட விழாவில் 'தி காஷ்மீர் பைல்ஸ்' போல் பிரச்சாரப் படத்தை திரையிட்டது தேவையில்லாதது. துயரத்தை அனுபவித்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அங்கு பாதிக்கப்படுபவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனது கருத்துக்கள் திரைப்படத்தைப் பற்றி மட்டுமே இருந்ததே தவிர, அவர்கள் பற்றியது அல்ல.
நான் கூறிய கருத்துக்கள் அனைத்தும் தனிப்பட்ட கருத்து அல்ல. வன்முறை மற்றும் வெறுப்புணர்வைப் பயன்படுத்தி, சமூகத்தில் விரோதம், வன்முறை மற்றும் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு செய்தியை இந்தப் படம் கடத்துவதாக இருந்ததாக நடுவர் குழு உறுப்பினர்கள் அனைவருமே கருதினோம்.
நான் திரைப்படத்தின் சாரம் பற்றிதான் பேசுகிறேன் என்பதை அவர் (இஸ்ரேல் தூதர் நவோர் கிலான்) முற்றிலும் அறிந்திருந்தாலும், காஷ்மீரில் நடந்த சோகத்தைப் பற்றி அவமரியாதையாகப் பேசியதற்காக அவர் என்னைக் குற்றம் சாட்டினார். இது முற்றிலும் முட்டாள்தனமானது. ஒரு திரைப்பட தயாரிப்பாளராக நான் திரைப்படத்தை மட்டுமே மதிப்பிடுகிறேன் என்று அவருக்குத் தெரியும்" என்றார்.
ஆனால் இவர் பேசியதை பாதியாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால், பாஜக கும்பல் அதனை "வடிவேலு படத்தின் 'மாப்பிள்ள செம்பு இருந்தா தான் தாலி கட்டுவாராம்..' என்ற காமெடி போல்" திரித்து கூறி போலியான செய்திகளை பரப்பி வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!