Cinema
காந்தாரா ஏன் தமிழ்நாட்டில் எடுபடவில்லை ? - காரணமும் அதன் பின்னால் உள்ள அரசியலும் !
அண்மையில் வெளியான 'காந்தாரா' திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே நடித்து வெளியான திரைப்படம் தான் காந்தாரா. கன்னட திரைப்படமான இப்படம் பொதுமக்கள் திரை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக கர்நாடகாவில் பெரும் வெற்றியை ஈட்டியது. கர்நாடக வெற்றியைத் தொடர்ந்து இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்கில் வெளியிடப்பட்டது.
வெளியான அனைத்து இடங்களிலும் அது பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த வார நிலவரப்படி காந்தார படம் கர்நாடகாவில் 168.50 கோடி ஆந்திரா, தெலுங்கானாவில் 60 கோடி, இந்திப் பதிப்பில் 96 கோடி, தமிழ்நாட்டில் 12.70 கோடி, கேரளாவில் 19.20 கோடி என மொத்தம் 400.90 கோடி வசூலித்துள்ளது.
இந்த படத்துக்கு இந்தியா முழுக்க எந்த விமர்சனமும் இன்றி பாராட்டுக்கள் மட்டுமே வந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் சில எழுத்தாளர்களும், பொதுமக்களும் இந்த படத்தில் இருக்கும் குறைகளை விமர்சித்து பதிவிட்டிருந்தனர். மேலும், மற்ற மாநிலங்களில் ஒப்பிடும்போது தமிழ்நாட்டு ரசிகர்களை இந்த படம் பெரிதாக கவரவில்லை. இதைத்தான் கேரளாவை ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் வசூலும் பிரதிபலிக்கிறது.
இதனைத் தொடர்ந்து இந்த படம் ஏன் தமிழ் ரசிகர்களை கவரவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மொழி வேறுபாடு இன்றி நல்ல கதையம்சத்தை கொண்ட படத்தை தமிழ்நாடு எப்போதும் கொண்டாடி வரும் நிலையில், நிச்சயம் மொழி பாகுபாடு காரணமாக தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை புறக்கணிக்கவில்லை என்பது தெளிவு. இதனால் படத்தின் கருவே தமிழக ரசிகர்களை கவரவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.
காந்தாரா படத்தின் கதையே நாட்டார் தெய்வ வழிபாட்டை முன்னிலையில் வைத்து பழங்குடி மக்கள் தங்கள் நிலத்துக்காக போராடுவதை மையப்படுத்தியதே. இதுபோன்ற மண்ணை காக்கும் கதைகளும் அது தொடர்பாகவும் நிறைய தமிழ் படங்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக காலா படத்தில் நிலத்தையும், அதனை காக்கும் போராட்டத்தையும் ரஞ்சித் மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். பொதுவாக நிலத்தை ஒருவர் அபகரிக்கும்போது அரசும், காவல்துறையும் அதற்கு துணை நிற்கும் விதமாகதான் தமிழ் படங்களின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். வரலாற்றை எடுத்துப்பார்த்தாலும் அது அனைத்தும் இதே பின்புலத்தை பின்பற்றித்தான் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் காந்தாரா படத்தில் நிலத்தை அபகரிக்கப்பார்க்கும் பண்ணையாருக்கு எதிராக வனத்துறை செயல்பட்டிருப்பது பெரும் முரணாகவே தமிழ்மண்ணில் பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் பழங்குடி மக்கள் அரசுக்கு தங்களின் பூர்வீக வசிப்பிடமான காடுகளை விட்டுத் தர வேண்டு என்ற நிலைப்பாடும் தமிழ்மண்ணுக்கு புதியதே.
இது தவிர தமிழ்மக்கள் எப்போதும் பெரியாரின் அரசியல் தெளிவு பெற்ற பின்னிலையில் இருந்து வந்தவர்கள்தான். பெரியாரை விமர்சிக்கும் சிலருக்கு கூட நாட்டார் வழிபாடு குறித்த பின்புலம் நன்கு தெரிந்திருக்கும்.
தமிழில் தொன்மக் கதைகள் பல வந்திருக்கின்றன. ‘கர்ணன்’ படத்தில் சகோதரியை தெய்வமாக்குவது போன்ற காட்சிகள் வந்திருக்கின்றன. சின்னத்தாயி என்கிற படம் சிறு தெய்வ நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கிறது. சமீபத்திய கடைசி விவசாயி படமும் கூட அத்தகைய தன்மையை தன் களத்தில் கொண்டிருந்த கதையாக இருக்கிறது.
ஆனால் இவை எல்லாவற்றிலும் இருந்து முக்கியமான இடத்தில் இப்படம் மாறியிருக்கிறது. இப்படத்தின் அரசியல்! தமிழ்ச்சூழலில் வெளியானப் படங்கள் யாவும் கொண்டிருந்த தெய்வ வழிபாடு என்பது பார்ப்பனியத்துக்கு மாற்றானதாகவும் இந்து மதத்துக்கும் முந்தையதாகவும் தமிழர் வழிபாடென தனியாக இருந்ததை நிறுவதாகவும் அமைந்திருந்தன. ஆனால் கந்தாரா படம், பழங்குடி வழிபாட்டை பார்ப்பனியத்துடன் இணைக்கும் வேலையைச் செய்கிறது.
படத்தில் வரும் பழங்குடி மக்களின் தொன்மக்கதைப்படி, அரசன் காணும் தெய்வம் ஒரு கல்தான். அக்கல்லை காட்டு தெய்வமாக பாவித்து பழங்குடியினர் வழிபட்டதாக தொன்மக் கதை விரிகிறது. சமகாலத்தை கதை அடைகிறபோது அந்த தெய்வம் விஷ்ணு அவதாரமான வராகமூர்த்தி என வடிவம் மாறுகிறது. பழங்குடி நாயகனின் பெயர் ஷிவாவாக இருக்கிறது.
எருமை மாடு வளர்ப்பு, பன்றிக்கறி உண்ணுதல், சாமியாடுதல் முதலிய பார்ப்பனிய இந்து மதத்துக்கு எதிரான திராவிட வழிபாடு படம் முழுக்க காண்பிக்கப்படுகிறது. இறுதியில் அவற்றை சூலாயுதம் கொண்டும் விஷ்ணு அவதாரம் எனச் சுட்டியும் வெற்றிகரமாக பார்ப்பனியத்துடன் இணைக்கும் முயற்சி வெளிப்படுகிறது.
இதுபோன்ற பல முரண்கள் படத்தின் இருப்பதால்தான் காந்தார படம் தமிழ்ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாமல் போயுள்ளது என்றுகூட புரிந்துகொள்ளலாம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!