Cinema
“வில்லனாக நடிச்சதால தான் எனக்கு இந்த நிலைமையோனு தோணுது” -உடல் நலம் குறித்து நடிகர் வேணு அரவிந்த் குமுறல்!
பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் உடல் நல கோளாறு பிரச்னை தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரவி வந்த நிலையில், தற்போது அது குறித்து பேட்டியொன்று அளித்துள்ளார்.
90-களில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் வேணு அரவிந்த். முன்னதாக வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், அதன்பிறகு சின்னத்திரையில் அறிமுகனை பிறகே பெரிய அளவில் பிரபலமானார்.
வாழ்க்கை, ஆடுகிறான் கண்ணன், அலைகள், குறிப்பாக ராதிகா சீரியல்களான செல்வி, அரசி, வாணி ராணி உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அதோடு அவ்வப்போது திரைப்படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர் கடைசியாக கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான 'ஓ மணப்பெண்ணே' படத்தில் ஹரிஷ் கல்யாணிற்கு அப்பாவாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அது குணமானவுடனே, தொடர்ந்து நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளானார். இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவரது தலையில் சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இந்த தகவல் கடந்த ஆண்டு வெளியாகி திரைவட்டாரத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. மேலும் இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது, அவர் கோமாவிற்கு சென்று விட்டதாவும் வெளியில் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், சிகிச்சையில் இருந்து முழுவதுமாக மீண்டு வந்த நடிகர் வேணு அரவிந்த், தனது உடல் நலம் குறித்த தகவல்களுக்கு பதிலளித்துள்ளார். இது குறித்து தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர் பேசியதாவது, “கடந்து போனவை எல்லாம் கடந்து போனதாகவே இருக்கட்டும். நான் இப்போது உயிரோடு நலமாக இருக்கிறேன். அடுத்த என்ன நடக்க போகிறது என்பதை மட்டும் பார்க்கலாம்.
எனது உடல் நலம் குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்கள் போல் பெரியதாக ஒன்றும் எனக்கு நடக்கவில்லை. தலையில் இருந்த சிறிய கட்டி நீக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் எனக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளித்து வருகிறார்கள்.
நடிகனாக வில்லனத்தனமான கதாபாத்திரங்களில் அதிகம் நடித்ததாலோ என்னவோ, பலரது வாயில் விழுந்த பாவத்தால்தான் எனக்கு இதெல்லாம் நடந்திருக்கிறது என்று கூட சில நேரம் தோன்றுகிறது. பொது இடங்களில் என்னை முகத்துக்கு நேராகவே பலரும் திட்டியுள்ளார்கள்.
அப்போது அதை எனது நடிப்புக்கு கிடைத்த வெகுமதி என்று நினைத்தேன். தற்போது பலரும் எனக்கு விட்ட சாபம்தான் இப்படி எனக்கு ஆகிவிட காரணம் என பலமுறை நொந்து இருக்கிறேன்” என்றார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!