Cinema

வித்தியாசமான Climax... ஷார்ப்பான Screenplay... - எப்படி இருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் ’கலகத் தலைவன்’ ?

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் த்ரில்லர் ஜானரில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கும் திரைப்படம் 'கலகத் தலைவன்'. சாமானியன் செய்யும் கலகத்தால் ஆடிப்போகும் கார்ப்பரேட் நிறுவனத்தின் கதையே ஒன்லைன். சரி, படம் எப்படி இருக்கிறது ?

படத்தின் கதை இதுதான். ஃபரிதாபாத்தில் இருக்கும் வஜ்ரா எனும் கார்ப்பரேட் நிறுவனமானது மைலேஜ் அதிகம் தரும் கனரக வாகனத்தை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தயாராகிவரும் நிலையில், அந்த வாகனத்திலிருந்து வெளியேறும் புகையால், அதிக காற்று மாசு ஏற்படும் எனும் ரகசியம் வெளியே கசிந்துவிடும். அதனால், நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போவதுடன் ஷேர் மார்க்கெட்டிலும் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும்.

நிறுவனத்துக்குள் பணியாற்றும் யாரோ ஒருவர் தான், கார்ப்பரேட் ரகசியங்களை திருடி வெளியே விற்கிறார் என்று சந்தேகிப்பார் வஜ்ரா நிறுவனர். நிறுவனத்துக்குள்ளே இருந்துகொண்டு கலகம் செய்யும் நபர் யாரென்பதைக் கண்டுபிடிக்க வரும் கில்லர் டிடெக்டிவ் ஆரவ். கார்ப்பரேட் நிறுவனத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கும் சாமானியன் யார் என்பதை ஆரவ் கண்டுபிடித்தாரா? அல்லது உதயநிதி தான் காரணமா ? இந்த கலகத்துக்கு பின்னணியில் யார் என்பதையெல்லாம் த்ரில்லருடன் சொல்லியிருக்கும் படமே ‘கலகத் தலைவன்’.

உதயநிதிஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதோடு, படத்தில் இடம்பெறும் அனைவருமே கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி நடித்திருந்தனர். மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’, ‘ஆர்ட்டிகிள் 15’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’ என ஒவ்வொரு படத்திலும் வெரைட்டி காட்டிவரும் உதயநிதி, இந்த முறை கூடுதலாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

உதயநிதியின் நடிப்பு நீட்டாக இருந்தது. எந்த பதட்டமும் இல்லாத நடிப்பு. சாதுவான முகத்துக்குள் இருக்கும் மற்றொரு ரூபம் என நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கிறார். அடையாளங்களை மறைத்து வாழும் நாயகனுக்கு இருக்கும் கோபம், வலி, காதல், இழப்பு என ஒவ்வொரு தருணத்தையும் அழகாய் நடிப்பில் கொண்டுவந்திருக்கிறார். குறை ஏதும் இல்லாத கச்சிதமான நடிப்பு.

‘தடையறத்தாக்க’, ‘மீகாமன்’ மற்றும் ‘தடம்’ என த்ரில்லர் படங்களை எடுப்பதில் நிபுணரான மகிழ்திருமேனியின் மற்றுமொரு பெஸ்ட் மைலேஜ் திரைப்படமிது. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் தவறுகளால் ஏற்படும் பின்விளைவுகள் சாமானியர்களையும் எப்படி பாதிக்கும் என்று சொல்ல இடத்திலாகட்டும், கார்ப்பரேட் அடியாட்களின் வன்முறை கலந்த முகத்தை கிளித்து எறிந்ததாகட்டும் என த்ரில்லருக்குள் எக்கச்சக்க புது விஷயங்களை இணைத்து சொன்னதற்காகவே மகிழ்திருமேனிக்கு பாராட்டுகள்.

ஆடுபுலி ஆட்டம் ஸ்டைலில் படு சீரியஸான த்ரில்லருடன் கதை சொன்ன இடத்தில் கவர்கிறார் இயக்குநர். சீரியஸாகவே முழு படமும் நகர்ந்துவிடக் கூடாதென நான் லீனியராக கதை சொன்னது படத்துக்கு கூடுதல் ப்ளஸ்.

நடிப்பாக, உதயநிதிக்குப் பிறகு படத்தில் பாராட்டுக்குரியவர் பிக்பாஸ் புகழ் ஆரவ். டெட்லியான வில்லன். வன்முறையில் உச்சம் காட்டும் அரக்கன் கதாபாத்திரம். தனக்கு வேண்டியதை தெரிந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் இவர் கொடுக்கும் ட்ரீட்மெண்ட் ஆடியன்சை மிரளவைக்கிறது.

நாயகியென்றவுடன் பாடலுக்கு வந்துபோவதாக மட்டும் இல்லாமல், நிதி அகர்வாலுக்கு படத்தில் நல்ல கேரக்டர் ரோல். இண்டிபெண்டெண்டான பெண்ணாகவும், தைரியமாக முடிவெடுக்கும் ஒருவராக கேரக்டர் டிசைன் செய்ததும், க்ளைமேக்ஸில் அவருக்கான சீனில் நிறைவாய் வந்துபோனதுமென அசத்தியிருக்கிறார்.

நல்ல ரோலில் சிறப்பாய் நடித்திருக்கிறார் கலையரசன் என்றாலும், முன்னமே இவரின் கதாபாத்திரத்தின் விளைவுகளை கணித்துவிடமுடிகிறது. அதற்கு, முந்தைய படங்களில் இவர் ஏற்று நடித்த ரோல்களின் தாக்கம் கூட காரணமாக இருக்கலாம்.

எதார்த்தத்துக்கு மீறிய காட்சிகளை திணிக்காமல் சண்டைக் காட்சிகளில் ரியாலிட்டியை கொண்டுவந்தது நன்றாக இருந்தது. அதற்காக சொல்லப்படும் பின் கதை க்ளைமேக்ஸ் காட்சிகளை நியாயப்படுத்துகிறது.

பரபரக்கும் முதல் பாதியானது ரோலர் கோஸ்டர் ரைடாகவே இருக்கும். எந்த இடத்திலும் மெதுவாக நகரும் உணர்வு இருக்காது. அதற்காக, ஆடியன்ஸை குழப்பாத திரைக்கதை என ஷார்ப் எடிட்டிங்கை வழங்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.

த்ரில்லர் கதைக்கு ஏற்ற கச்சிதமான பின்னணி இசையில் ஸ்ரீகாந்த் தேவாவும், படத்தோடு ஓடும் ஃபீல் குட் பாடல்களில் அரோல்கரோலியும் அசத்தல். ஏஸ்தெடிக் கோணங்களில் கச்சிதமான ஒளிப்பதிவை தில்ராஜூம் வழங்கியிருக்கிறார்கள்.

ரயில்வே ஸ்டேஷன் சேசிங் சீன் நிஜமாகவே சீட் நுணிக்கு நம்மை கொண்டு செல்லும். அதுபோல, வித்தியாசமான பரபரக்கும் க்ளைமேக்ஸ் புது அனுபவத்தை தரும். ஐடியாவாகவும், அதை சரியாக காட்சிப்படுத்தியதற்காவும் செம்ம.. சொல்ல வைக்கிறது கலகத்தலைவன். மொத்தத்தில் ஷார்ப்பான ஸ்க்ரீன்ப்ளே, புத்திசாலித்தனான டைட்டிங் என படம் தலைநிமிர்கிறது.

Also Read: கலகத் தலைவன் : “நேர்த்தியான படம்.. ஒவ்வொரு சீனாக முதல்வர் பாராட்டினார்” - இயக்குநர் மகிழ் நெகிழ்ச்சி!