Cinema

“15 நாட்களில் திரைக்கதையையும், வசனத்தையும் எழுதி அசத்திய கலைஞர்” : காலத்தால் அழியாத கலைஞரின் வசனம் !

02.4.1950ல் கலைஞரின் கை வண்ணத்தில் கற்கண்டு சொற்கொண்டு வெளிவந்த திரைப்படம் "மருத நாட்டு இளவரசி”. அப்போது கலைஞருக்கு வயது 29. சென்னை நாடார் மேன்ஷனில் ஓர் அறையில் தங்கிப் பதினைந்து நாட்களில், திரைக்கதையையும் வசனத்தையும், வண்ண வண்ண மலர்களைக்கொண்டு மணம் வீசும் மாலை தொடுப்பதைப் போல, எழுதி முடித்தார்.

கலைஞர், முதல்நாள் இரண்டு காட்சிகளுக்கான வசனம் எழுதிக்கொடுத்தார். எடுத்த எடுப்பில் சந்தேக மனதுடன் இருந்த தயாரிப்பாளர் முத்துசாமிக்கு, கலைஞரின் கன்னித் தமிழ் நடை அழகைக் கண்டதும், மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது.

மருத நாட்டு இளவரசி, வசனத்துக்காகவே ஓடுகின்ற படம் என்று ‘பேசும்படம்’, ‘குண்டூசி” ஆகிய இதழ்கள் எழுதிப் பாராட்டின. “மறக்க முடியாத வசனங்களைக் கொண்ட மருத நாட்டு இளவரசி” என்று தலைப்பிட்டு, பேசும்படம் எழுதி இருந்ததைக் கண்டு தமிழகமே மகிழ்ந்தது.

தமிழகத்தின் நினைவில் நின்றுநிலைத்துவிட்ட கலைஞரின் வசனங்கள் ஏராளம் எனினும், எடுத்துக் காட்டுக்கு சில இதோ:

“மருத நாட்டுக் கோட்டையிலே குறிஞ்சி நாட்டுக் கொடி பறக்கிறது. அதோடு மருத நாட்டு மானமும் சேர்ந்து பறக்கிறது”

“பூக்காட்டைப் புறங் காணும் பூங்குழலாள் எங்கேயோ போய்விட்டாள். சாக்காட்டின் அடிவாரத்திலும் அவளைச் சந்திக்க முடியாத பாவியாகிவிட்டேன்”

(இந்த வசனம் எப்போதும் ரசிகர்கள் மனதில் ரீங்கார மிடும் வசனம் என்றார் இயக்குநர் ஏ.காசிலிங்கம் ).

“கண்ணீர், பெண்களின் கடைசி ஆயுதம்; ஆண்களை எதிர்க்கும் கேடயம்”

“வெளிச்சத்துக்கு விளக்குத் தேவையில்லை; இந்த வழக்குக்கு விசாரணை தேவையில்லை”

“சாட்சி இல்லாத வாக்கு மூலம், சாரீரம் இல்லாத சங்கீதம்”

“கடைசியாக என்ன சொல்வது? யாரிடம் சொல்வது ? என் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கும் இந்தக் கத்தியிடம் சொல்வதா?

அல்லது. வழிந்தோடும் ரத்தத்தை ரசிக்க வந்திருக்கும் உன்னிடத்தில் சொல்வதா?

யாரிடத்தில் சொன்னாலும் சரி; கடைசி நேரத்தில் என் ஆவித் துடிப்பு, வேகமாகத் துடித்து ஓயட்டும்; என் கண்களில் ஒருமுறை கனல் வீசி பிறகு அணைந்து போகட்டும்; என் ரத்த ஓட்டம் கொதித்து பின் ஜில்லிட்டுப் போகட்டும்”

இவை அனைத்தும் வெறும் உரையாடல்கள் இல்லை; கேட்போர் கண்களில் ஒளிரும் கிளர்ச்சி ஓவியங்கள்! நினைவில் நங்கூரம் போட்டிருக்கும் நெருப்பலைகள்!

Also Read: ‘அன்றே சொன்னார் தலைவர்’: ஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையும்..கலைஞர் போட்ட ட்விட்டர் பதிவுகளும்!