Cinema

“மில்லினியல் யுக தலைமுறையின் காதல் அப்டேட்..” : ‘Love today’ எப்படி இருக்கு - திரை விமர்சனம்!

ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரதிப். இவரின் அடுத்தப் படம் ‘லவ் டுடே’. இந்த முறை இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் களமிறங்கியிருக்கிறார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படம் 80-களின் காலக்கட்ட காதலர்களின் காதலைப் பேசியிருக்கும்.

அதுபோல, மில்லினியல் யுக தலைமுறையின், காதலின் அப்டேட் வெர்ஷனைப் பேசியிருக்கிறது ப்ரதீப் இயக்கி, நடித்திருக்கும் ‘லவ் டுடே’. படத்தின் கதை என்னவென்றால்... பிரதீப் , இவானா இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு காதலிக்கும் ஜோடிகள். இருவருக்குள்ளும் எந்த ஒழிவு மறைவும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருநாள் இவானாவின் தந்தை சத்தியராஜிடம் இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். வழக்கமான தந்தை போல இல்லாமல், திருமணத்துக்கு ஒரு கண்டிஷனுடன் வருகிறார் சத்தியராஜ். அது என்னவென்றால், ‘இருவரும் தங்களின் மொபைல் போன்களை ஒரு நாள் மட்டும் பரிமாறிக் கொண்டு பயன்படுத்த வேண்டும். அடுத்த நாளும், இந்தக் காதல் நிலைத்திருந்தால் எனக்கு சம்மதம்’ என்று ஒரு வினோதமான கண்டிஷனைப் போடுகிறார்.

இருவரும் செல்போனை மாற்றிக் கொள்கிறார்கள். செல்போனிலிருந்து பெரிய பூதமே கிளம்பிவருகிறது, அதன்பிறகும் இருவரும் காதலுடன் இருந்தார்களா என்பதே மீதிக் கதை. கோமாளி படத்தின் மூலம் நவயுக காலத்தில் ‘மனிதம்’ குறித்துப் பேசிய இயக்குநர் பிரதீப், இந்த முறை ரிலேஷன்ஷிப்பில் ‘நம்பிக்கை’ எந்த அளவுக்கு முக்கியமென்பதை பேசியிருக்கிறார்.

இயக்குநராக முழு படத்தையும் எந்த வித சிக்கலுமின்றி முழுக்க முழுக்க எண்டர்டெயின்மெண்டாக கொண்டு சென்றதுக்காகவே பாராட்டுகள். அதுபோல, நடிகராகவும் அசத்தியிருக்கிறார். முதல் படம் எனும் தயக்கமோ, நடிப்பில் குறைவோ வைக்கவில்லை. எதார்த்தமாக நடிக்கிறார், நிறைய இடங்களில் சிரிக்க வைக்கிறார், எமோஷன் சீன்களிலும் அசத்துகிறார்.

நாயகியாக இவானாவும் அழகாய் வருகிறார், சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். இவர்கள் மட்டுமின்றி, சில காட்சிகளென்றாலும் சத்யராஜ் கவனம் ஈர்க்கிறார். வீனை வாசித்துக் கொண்டே பேசுவது, எதிலும் ஃபர்பெக்‌ஷன் பார்ப்பது என சத்யராஜ் ஆவ்ஸம். அதுபோல, ப்ரதீப்பின் அம்மாவாக ராதிகாவும் கச்சிதம். எமோஷனல் காட்சிகளிலும், ப்ரதீப்பை திட்டும் இடத்திலும் என அசால்டு காட்டியிருக்கிறார் ராதிகா.

ப்ரதீப் - இவானா காதல் கதைக்கு நடுவே கிளைக்கதையாக ரவீனா ரவி - யோகிபாபு.... இவர்களின் கதை படத்துக்கு வலு சேர்க்கிறது. குறிப்பாக, யோகிபாபுவின் நடிப்பும், காமெடியும் எதார்த்தமாக வந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக, குறைவான கதாபாத்திரங்களே படத்தில் என்றாலும், கதாபாத்திரத் தேர்வு சரியாக அமைந்திருக்கிறது.

டெல்லிகனேஷ் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அப்பா -லாக்’ எனும் குறும்படத்தை மையமாக் கொண்டு , முழு நீளத் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். காதலர்கள் இருவரும் மொபைலை மாற்றிக் கொண்டப்பிறகு என்ன செய்யப் போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பை, திரையில் பூர்த்தி செய்திருக்கிறார்.

மில்லினியல் யுகத்தில் ஸ்மார்ட் போன் வளர்ச்சியானது ரிலேஷன்ஷிப்பில் என்ன சிக்கலையெல்லாம் உருவாக்கும், டெக்னாலஜியின் வளர்ச்சியினால் ஏற்படும் சிக்கல்கள் என்னவென்று பேசியவிதத்தில் சிறப்பு. அதுபோல, இந்த மாதிரியான கதைகளென்றால் பொதுவாக பெண்களை மட்டுமே தக்கி படத்தை எடுப்பார்கள். அப்படியில்லாமல், ஆண் - பெண் என இருவரும் செய்யும் தவறுகளென்ன என்று பேசியிருக்கிறது படம்.

படத்தின் மிகப்பெரிய பலம் யுவன் ஷங்கர் ராஜா. பாடல்களாகவும், பின்னணி இசையாகவும் துள்ளலிசையை வழங்கியிருக்கிறார். 90’S கிட்ஸூக்கு மட்டுமல்ல 2k கிட்ஸூக்குமான இசையமைப்பாளராகிவிட்டார் யுவன்.

குறைவான பட்ஜெட், லொக்கேஷன் மற்றும் நடிகர்களைக் கொண்டு நேர்த்தியான ஒரு எண்டர்டெயின்மெண்ட் சினிமாவாக கவனம் ஈர்க்கிறது. ரிலேஷன்ஷிப்பில் நம்பிக்கை எந்த அளவுக்கு முக்கியம் என்று மேசேஜை நல்ல திரையோட்டத்துடன் சொன்ன விதத்தில் ‘லவ் டுடே’ மில்லினியல் சக்ஸஸ்.

Also Read: 100 கோடியை நெருங்கும் 'சர்தார்'.. மாபெரும் வெற்றிக்காக இயக்குநருக்கு தயாரிப்பாளர் கொடுத்த Surprise..