Cinema

ஓர் ஆண்டை நிறைவு செய்த ‘ஜெய் பீம்’ : சூர்யாவின் கதாபாத்திரம் மூலம் இயக்குநர் சாதித்தது என்ன ?

ஜெய் பீம் படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. 2021ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்துவக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. Courtroom Drama என வகை செய்யப்பட்டிருந்த படம். ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வாங்கிக் கொடுக்கும் ஒரு வழக்கமான படமாக இருக்குமெனதான் அனைவருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது.

படத்தின் ட்ரெயிலர் வெளியானபோது இடதுசாரிகள் மத்தியில் சந்தோஷம். சமீபகால முன்னணி நட்சத்திரங்களில் எவரும் செய்திராத அளவுக்கு மார்க்சிஸ்ட் கட்சிக் கொடி, போஸ்டர் ஆகியவற்றுடன் சூர்யா காண்பிக்கப்பட்டிருந்தார். எனினும் இடதுசாரியக் கருத்துகளை பிரசாரம் செய்யும் படங்களைப் போல இப்படமும் வறட்சியாக இருக்குமோ என சந்தேகம் இருந்தது.

படம் வெளியானது. ஆஹா ஓஹோவென்ற ஆக்கம் இல்லை. PAN India என லேபிள் ஒட்டப்படவும் இல்லை. பரபரப்பான திரைக்கதை இல்லை. வணிக சினிமாவுக்கான எந்த அலங்காரங்களும் இல்லை. உயர்தர விமர்சகர்கள் ‘அழுகாச்சி’ படம் என்றார்கள். சினிமா ஆர்வலர்கள் சினிமாவுக்கான சூத்திரங்களை பின்பற்றாத சினிமா என்றார்கள்.

‘ஒடுக்கப்பட்டோரை காப்பாற்ற ஒரு கம்யூனிஸ்ட்தான் வர வேண்டுமா’ என்றனர் சிவப்புப் பிடிக்காத பலர். ஓடிடியில் வெளியானதால்தான் படம் ஹிட் என நாடி ஜோசியம் கூறினர் பலர். எல்லாவற்றையும் தாண்டி படம் மக்களால் கொண்டாடப்பட்டது. பள்ளிகளிலும் பழங்குடியினர் வசிப்பிடங்களிலும் திரையிடப்பட்டது.

வெவ்வேறு மொழியினர் படம் பார்த்து பாராட்டினர். முதல்வர் பாராட்டினார். ஆஸ்கர் பட்டியல் வரை சென்றது. ஜெய் பீம் படத்தின் வெற்றி யாருமே எதிர்பார்த்திராத வெற்றி. அந்த வெற்றியும் சாதாரண ப்ளாக்பஸ்டர் பாணி வெற்றியெல்லாம் இல்லை. பெருவெற்றி!

படம் வெளியாகி ஒரு வருடம் முடிந்தபிறகும் பலருக்கு அப்படத்தின் வெற்றிக்கான காரணம் புரியவில்லை. அல்லது புரிந்துகொள்ள விரும்பவில்லை. படத்தின் வெற்றி முதல் காட்சியிலிருந்து தொடங்குகிறது. அதிகாரம் குற்றவாளிகளை சாதிகளாக பிரித்துப் பார்க்கிறது என்கிற பார்வை மொத்த இந்தியக் கட்டமைப்பையும் உலுக்கும் உரிக்கும் காட்சி. அங்கிருந்தே படம் வழக்கத்திலிருந்து வேறு பாதையில் நடக்கத் தொடங்கி விடுகிறது.

இருளர் சமூக நாயகனின் வாழ்க்கை, பார்வையாளர்களுக்கு புதிது. வயல்வெளிகளில் பயிர் தின்னும் எலிகளை பிடிக்க பணிக்கமர்த்தப்படும் இருளர்களின் வாழ்க்கைக் காட்சிகள் புதிது. பணி தேடி புலம்பெயரும் வாழ்க்கைகள் திரையில் நமக்கு புதிது. இவை எதிலும் திரைக்கதைக்கான விறுவிறுப்பு கிடையாது.

சொல்லப் போனால் திரைமொழியில் ‘lag' என சொல்லப்படும் காட்சிகளாக அவை இருக்கும். ஆனால் பார்வையாளர்களுக்கு பண்டிதத்தனமை கிடையாது என்பதால், அவர்கள் அக்காட்சிகளை ரசித்தார்கள். முக்கியமாக ‘புதிய தகவல் எந்த நிபந்தனையுமின்றி எவரையும் ஈர்க்கும்’ என்கிற பாணியில் மக்களை அந்த வாழ்க்கை ஈர்த்தது.

இருளர் வாழ்வியலில் இருந்த குற்றமற்ற தன்மையில் மக்கள் ஈர்க்கப்பட்டு அடுத்தடுத்த காட்சிகள் அவர்களுக்கு பிரச்சினைகளாக இருக்கவில்லை. அடுத்து மணிகண்டன் பாத்திரம் வீழ்த்தப்படவிருக்கிறது என தெரிந்துமே அப்பாவித்தனம் நிறைந்த அந்த வாழ்க்கை அழிக்கப்படவிருப்பதைக் குறித்து பதைபதைப்பு கொண்டனர்.

மணிகண்டனை வீழ்த்தும் அமைப்பின் அங்கமாக உணர்ந்து குற்றவுணர்வு கொண்டனர். அவர்கள் கையறுநிலையில் உணருகையில் செங்கேணி பாத்திரத்தின் வழியாக நம்பிக்கை விதைக்கிறார் இயக்குநர்.

செங்கேணி எப்படி சென்னைக்கு வந்தாள், அறிவொளி இயக்கம் என்பது என்ன, ஒரு வழக்கறிஞர் போராடுவாரா, ஒரு வழக்கறிஞர் பாதிப்படைந்தோருக்கு உதவுவாரா என்றெல்லாம் எள்ளல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் வேறு யாருமல்ல, ‘அனிதா எப்படி உச்சநீதிமன்றத்துக்கு போக முடிந்தது’ எனக் கேட்டவர்கள்தான்.

பார்வையாளர்களுக்கு செங்கேணி ஜெயித்து விட வேண்டுமென்ற மனத்தாங்கல் உருவானது. சூர்யாவின் பாத்திரம் இடது சித்தாந்தம் கொண்டவரென்பதாலும் அறிவொளி இயக்கம் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய இயக்கம் என்பதாலும் செங்கேணியால் சூர்யாவை அடைய முடிகிறது. சூர்யாவின் பாத்திரம் சந்துருவின் பாத்திரம். சந்துருவை போன்றே பல இடதுசாரிய வழக்கறிஞர்கள் இன்றும் இலவசமாக விளிம்புநிலை மக்களின் வழக்குகளை வாதாடுகின்றனர்.

சட்டரீதியாக சூர்யாவின் பாத்திரம் வாதாடுவது மட்டுமின்றி, செங்கேணியின் கணவருக்கான தேடலிலும் பங்கெடுக்கிறார். ஊர் ஊராக சென்று துப்பறிகிறார். இறுதியில் கணவர் கொல்லப்பட்டது தெரிந்ததும் இன்னும் சீற்றம் கொள்கிறார். வழக்காடி செங்கேணிக்கு நீதி பெற்றுக் கொடுக்கிறார்.

படத்தின் இறுதியில் வழங்கப்படும் அந்த நீதியை கொண்டாடும் நிலையில் கூட செங்கேணி இல்லை. ஓடிச் சென்று மழையில் மழையில் நனைந்து ஆசுவாசமடைகிறாள். அமைப்பின் சக்கரங்களுக்குள் சிக்கி அலைபாய்ந்து மூச்சுத்திணறியவளின் ஆசுவாசம் அது.

ஜெய் பீம் படத்தின் கதை உண்மையாக நடந்ததில் பங்குபெற்றது வழக்கறிஞர் சந்துருவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவிந்தனும் இன்றைய செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் பேராசிரியர் கல்யாணியும் ஆவார்கள். 1990களில் நடந்த சம்பவத்தில் வழக்கிலிருந்து விலக 25 லட்ச ரூபாய் கொடுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்தன் விலகவில்லை. குடும்பத்தையும் மிரட்டக் கூடும் என்பதற்காகவே வழக்கு முடியும் வரை பல ஆண்டுகளுக்கு திருமணம் செய்யாமல் இருந்தவர் தோழர் கோவிந்தன். நிஜ சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் பெயர் ராஜாக்கண்ணு மற்றும் பார்வதி.

பட வெற்றிக்கு பின் இயக்குநர் ஞானவேல் பல இடங்களில் பாராட்டப்பட்டார். விமர்சகர்களுக்கு பல பதில்களை அளித்தார். ‘ஏன் கம்யூனிஸ்ட்தான் உதவ வேண்டுமா’ என்கிற கேள்விக்கு பதிலளிக்கும்போது, “கம்யூனிஸ்டுகளப் பத்தி படம் எடுக்கணும்னு இந்தப் படத்தை எடுக்கல. இவங்கள பத்தி படம் எடுக்கணும்னு கதைய தேடி களத்துக்கு போனேன். அங்க களத்துல இவங்களுக்காக கம்யூனிஸ்டுங்கதான் நின்னுக்கிட்டு இருந்தாங்க.. அதனால கதைல அவங்க வராங்க” என்கிறார்.

கூடுதலாக “பொதுவா ஒரு சமூகத்தோட ஓட்டு வேணும்னாதான் எந்தக் கட்சியும் அவங்க பிரச்சினைக்கு வருவாங்க. அப்போதான் அவங்க ஓட்டு அவங்களுக்குக் கிடைக்கும். ஆனா கம்யூனிஸ்ட்டுங்க போராடுனபோது அந்த சமூகத்துக்கு ஓட்டுரிமை இல்லை. ஓட்டு என்கிற ஆதாயத்தை கூட எதிர்பார்க்காம, மக்கள் நலனுக்காக போராடனாங்க,” என்றார்.

சிவப்பு உவப்பில்லாதோருக்கு இயக்குநரின் பதில் புரியப் போவதில்லை. ஜெய் பீம் படம், அதன் ஆக்கத்தில் புதிதாக எந்தவித விஷயத்தையும் செய்யவில்லை. புதிதாக இருந்தது ஒன்றே ஒன்றுதான்:

இந்த அமைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் திரையிலிருந்தும் திரைக்கு வெளியே இருந்தும் கைகோர்க்கும் தருணத்தை படம் உருவாக்கியிருந்தது. அந்தத் தருணத்தை உயர்தர விமர்சகர்களும் தனிமனிதவாத எழுத்தாளர்களும் சினிமாப் பண்டிதர்களும் களத்துக்கு வராத கோட்பாட்டாளர்களும் புரிந்து கொள்ளவே முடியாது. ‘ஜெய் பீம்’ வெற்றி, மானுட நேயத்துக்கான வெற்றி!

Also Read: 'மீட்டாத வீணை.. காயங்கள் ஆற்றும்' : காதலை அசைபோட வைக்கும் 'கண்ணம்மா' பாடல் - ரஞ்சித் மேஜிக்!