Cinema
“படுத்தப் படுக்கையாக இருக்கும் நிலையிலும் பாலியல் உறவு” : சமூகப் பிரச்சினையை பேசுகிறதா ‘அப்பன்’ படம்?
ஒரு முதியவர். கால் விளங்காமல் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். அவருக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. இதைக் கதைக்களம் எனக் கொண்டால் எப்படி இருக்கும்?
சற்றே நெகிழ்ச்சியுடன் நிறைய கண்ணீர் காட்சிகளுடம் படு ட்ராமாவாக ஒரு படம் கிடைக்கும். இல்லையா? இதே களத்தை மலையாளத்தில் படமாக்கினால் என்னவாகும்? எக்கச்சக்க ட்ராமா இருக்காது. கதை நகர்ந்து கொண்டே இருக்கும். எத்தனை பெரிய சோகமென்றாலும் நகைச்சுவை இழையோடும். வழக்கமான பாணி ‘க்ளிஷே’ பாத்திரங்கள் இருக்காது.
உதாரணமாக, கால் விளங்காமல் படுத்தப் படுக்கையாகக் கிடக்கும் அப்பா பாத்திரம், இளமை காலத்தில் ஊரையே அச்சுறுத்தும் ஒரு சண்டியராக இருந்திருந்தால் கதை எப்படி இருக்கும்? அந்த நிலையிலும் ஒரு பாலியல் தொழிலாளியுடன் உறவு வைத்துக் கொள்ள திட்டம் தீட்டும் பாத்திரம் கதைக்களம் எப்படி இருக்கும்?
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி இருக்கும் ‘அப்பன்’ படத்தின் கதைக்களம் இதுதான். நூனுதான் நாயகன். அவனது அப்பா இட்டி கால் விளங்காமல் படுத்தப் படுக்கையாகக் கிடக்கிறார். யாரும் அவரை நெருங்குவதில்லை. குழந்தை என்று கூட பாராமல் எவர் வந்தாலும் எரிந்து விழுந்து அருவருப்பாக பேசும் தன்மை கொண்டவன் இட்டி. அவனது மனைவி குட்டியம்மா. ரோசி நூனுவின் மனைவி.
நூனு ரப்பர் மரங்களில் இருந்து ரப்பர் எடுத்து விற்கும் வேலை செய்கிறான். மொத்த ரப்பர் தோட்டமும் அப்பாவான இட்டியைச் சேர்ந்தது. குடும்பம் மட்டுமின்றி ஊரில் இருக்கும் பலர் இட்டியின் மரணத்துக்காக காத்திருக்கின்றனர். இத்தகைய சூழலில் இட்டி போடும் கொட்டம்தான் கதை. இட்டி இறந்தானா இல்லையா என்பதே படத்தின் இறுதி.
அப்பன் படத்தின் சுவாரஸ்யமே, அது முக்கியமான சமூகப் பிரச்சினையை உள்ளீடாகக் கொண்டிருப்பதுதான். பிற மொழித் திரைப்படங்களிலிருந்து மலையாள சினிமா வேறுபடுவது இந்தப் புள்ளியில்தான். ஒரு பிரச்சினையைச் சார்ந்து பேச படம் எடுப்பது என முடிவெடுக்கையில், அப்பிரச்சினையை பிற மொழிகள் நேரடியாக கையாளக் கூடியக் கதைகளை தேர்ந்தெடுக்கும்.
ஆனால் மலையாளப் படங்களில் அப்பிரச்சினை சாமானியனின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறது எனக் காட்டி அப்பிரச்சினையை நமக்கு உணர்த்தும். இப்படத்தின் தலைப்பான அப்பன் படத்தில் வரும் இட்டியை குறிக்கவில்லை. இட்டியின் மகனான நூனுவையே சுட்டுகிறது.
இப்படிப்பட்ட ஓர் அப்பனுக்கு பிறந்த தான், தன்னுடைய மகனுக்கு எத்தகைய அப்பனாக இருக்கப் போகிறேன் என்கிற பயம் நூனுவின் பாத்திரம் முழுக்க ஊடாடுகிறது. அப்பன்களின் வழியாக கடத்தப்படும் ஆணாதிக்கம், மூர்க்கம், கோபம் மற்றும் நிலவுடமை ஆகியவற்றைதான் படத்தின் கதைக்களம் அதிகமாக கையாளுகிறது. ஆனால் எங்குமே அந்த வார்த்தைகளோ அந்தப் பிரச்சினைகளோ நேரடியாக குறிப்பிடப்படவில்லை. அதுவே இப்படத்தின் சிறப்பு.
Also Read
-
🔴Live|மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?