Cinema
சக்திமான்: “இந்து இயக்குநர் தான் வேண்டும்..” - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சக்திமான் முகேஷ் கண்ணா!
'சக்திமான்' திரைப்படத்தை ஒரு இந்து அல்லாத இயக்குநரிடம் கொடுக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை என்று சக்திமான் முகேஷ் கண்ணா மறுப்பு தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிடித்தமான ஷோ என்றால் முதலில் 'சக்திமான்' தான். இப்போதிருக்கும் அவெஞ்சர்ஸ், பேட்மேன், சூப்பர் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் அமெரிக்காவில் இருந்து உலகத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் இருந்து உலகத்தை காப்பாற்றியது 'சக்திமான்' தான்.
சக்திமான் தங்களை காப்பாற்றுவார் என்று கூறி, மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரை விட்ட சிறுவர்களும் உண்டு. இப்படி சக்திமான்.. சக்திமான்.. என்று மந்திரம் போல் உச்சரிக்கும் பெயராகவே இது இருந்துள்ளது. காலப்போக்கில் அனைத்தும் மாற மாற. சக்திமான் தொடரும் நிறைவடைந்தது.
அண்மையில் வந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் லாக்டவுன் நேரத்தில் கூட சக்திமான் தொடரை மறு ஒளிபரப்பு செய்யவேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அப்போது இருந்த இந்த தொடருக்கு இப்போதும் மவுசு இருக்கிறது என்பதை உணர்ந்து சக்திமான் கதாநாயகன் கூட இந்த தொடரை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் சக்திமான் கதையை திரைப்படமாக உருவாக்கப்போவதாக அண்மையில் சக்திமான் குழுவினர் தெரிவித்தனர். அந்த வகையில் இந்த படத்தை இயக்குவதாக கோலிவுட்டில் ஹிட் கொடுத்த 'மின்னல் முரளி' பட இயக்குநரான பாசில் ஜோசப்பிடம் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து 'இந்த படத்தை ஒரு இந்து அல்லாத இயக்குநருக்கு கொடுக்க எனக்கு விருப்பமில்லை' என்று சக்திமான் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி பரவியது. இதனால் பல்வேறு தரப்பினரும் இது குறித்து பேசிவந்தனர்.
இந்த நிலையில், அந்த செய்தியை முகேஷ் கண்ணா முற்றிலும் மறுத்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எந்த இயக்குநர் சக்திமான் படத்தை இயக்குவார் என்பது குறித்து நானும் எனது தயாரிப்பாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால் ஒரு இயக்குநரின் மதம் மற்றும் அவர் இந்து அல்லாதவர் என்று சில விஷயங்கள் பரப்பப்படுவது கவலை அளிக்கிறது” என்றார்.
மேலும், “இந்து அல்லாத இயக்குநரை தேர்ந்தெடுப்பதில் நான் வருத்தமாக இருப்பதாக செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் நான் அப்படி ஒரு விஷயத்தை ஒருபோதும் சொல்லவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். எனவே அது எங்கிருந்து வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை. திறமையான கலைஞருக்கு மதம் எதுவாக இருந்தாலும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு” என்றார்.
அதோடு “இதுபோன்ற பேச்சு முற்றிலும் தவறானது மற்றும் தேவையற்றது. தயாரிப்பாளரோ அல்லது நானோ அதிகாரபூர்வமாகத் தெரிவிக்காத இதுபோன்ற எந்தத் தகவலுக்கும் கவனம் செலுத்த வேண்டாம் என்று சக்திமான் ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் யாரிடமும் கையெழுத்திடவில்லை. சக்திமான் என்பது இந்தியாவின் கருத்து. ஒருவரின் சிறிய பொய்யை விட இது பெரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!