Cinema
காதலில் மனமுறிவு எப்படி இருக்கும்? தேவர்மகனின் ஒற்றை காட்சி சொல்லும் ஓராயிரம் அர்த்தங்கள் !
காதலில் மனமுறிவு எப்படி இருக்கும்?
தேவர்மகன் படத்தில் அற்புதமான ஒரு காட்சி!
சில நாட்களுக்கு பின் அவனை காண ஊருக்கு வருகிறாள் அவள். வேஷ்டி, சட்டை, மீசை என நிறைய மாறி இருக்கிறான் அவன். ஆச்சரியப்படுகிறாள். எதிர்படும் அவனது அண்ணி, அண்ணன் என அனைவரையும் நலம் விசாரித்துக் கொண்டே அவனுடன் மாடிக்கு வருகிறாள். 'இது தான் நீ தங்குவதற்கான அறை' என ஓர் அறைக்குள் சென்று அவன் சொல்கையில், வேகமாக வந்து அவனை கட்டி அணைக்கிறாள். அவன் அவளை விலக்குகிறான். 'தான் ஊருக்கு வர தாமதமான கோபத்தில் அவன் இருக்கிறான்' என நினைத்துக்கொண்டு கொஞ்சலாக அவனை தள்ளி ஒரு நாற்காலியில் அமர வைத்து பேசிக்கொண்டே நிமிர்கிறாள்.
அங்கே அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு எடுத்த போட்டோ இருக்கிறது.
அவள் வைத்த கண் வாங்காமல் அந்த போட்டோவை நோக்கி நடந்து சென்று அதிர்ச்சியில் பார்த்து நிற்கிறாள். அவளை ஆறுதல்படுத்த அவன் எழுந்து வந்து அவள் தோளை தொட முற்பட, "Don't" என தடுக்கிறாள். அவனும் விலகி நாற்காலியில் அமர்கிறான். அவள் நகர்ந்து அந்த புகைப்படத்தை தொடுகிறாள். மனம் உடைந்து பெருமூச்செறிகிறது. அவனை பார்த்து 'ஏன்' என கேட்டு, அங்கிருக்கும் பொருட்களை தள்ளிவிடுகிறாள். அந்த புகைப்படத்தை கையில் எடுத்து, உடைந்து, கீழே விழுந்து, அரற்றுகிறாள். 'ஒரு நியாயமான காரணத்தை சொல்' என அவனை கேட்கிறாள். அதற்கு பின் அந்த காட்சியில் நடப்பதெல்லாம் காவியம்.
அவன் மனதை தேற்றிக்கொண்டு 'சூழ்நிலை' என பதில் சொல்லுகிறான். அவள் கோபத்துடன் எழுந்து, 'Bullshit...' என அவனிடம் வந்து நின்று
அவள்: I love you.. உனக்கது தெரியுமில்ல?
அவன் அமைதியாக இருக்கிறான்.
அவள்: நீ என்ன லவ் பண்றது நெஜமா?
என்றதும் அவன் கையறுநிலையுடன் கண்கலங்க அவளை பார்த்துவிட்டு, ஆமென தலையசைத்து தலைகுனிகிறான்.
அவள்: அப்போ, நீ அந்த பொண்ணை ஏற்கனவே காதலிச்சியா?
அவன்: இல்ல
அவள்: அப்புறம் ஏன்.. என்னை காதலிக்கிறே.. அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறே.. நீ யாரைத்தான் நெஜமா காதலிக்கிறே.. உன்னையேவா? Whom do you really love?
அவன்: இந்த சின்ன தூவலூர!
அவள்: அதுக்கு என் வாழ்க்கை பலி.. என் காதல் பலி.. இல்ல?
அடக்க மாட்டாமல்
அவன்: இதுல என் காதலும்தான் பலி பானு.
அவள்: Then why did you do it, you bloody fu....
அவன்: திட்டிடு பானு, திட்டிடு. சாபம் ஏதாவது கொடுக்கணும்னாலும் கொடுத்துடு.
கீழே கிடக்கும் திருமண புகைப்படத்தை காட்டி
அவன்: இதுவும் நெஜம்.. நான் உன்னை காதலிக்கிறதும் நெஜம்.. (அழுகையை மென்றபடி) இந்த ரெண்டு நெஜத்துல ஒரு நெஜம் பொய்யாகணும் பானு.
அவள் உடைந்து விழுந்து அவன் மடியில் சாய்கிறாள். அழுதபடியே
அவள்: இந்த கொஞ்ச நாள்ல எங்கே போய்ட்டாரு என் சக்தி?
அவனின் கண்ணீர் சொட்டு அவள் கன்னத்தில் விழுகிறது. அவள் நிமிர்ந்து அவனை பார்க்கிறாள். அந்த மிகப்பெரிய சோகத்தை மென்று கஷ்டப்பட்டு விழுங்கிவிட்டு, கண்ணீரில் கண்கள் சிவந்து
அவன்: எனக்கு மன்னிப்பே கிடையாது பானு. அதனால நான் மன்னிப்பு கேட்க போறதில்ல.
அவனை பார்த்து அழுது துடிக்கும் அவள் உதட்டை தன்னிச்சையாக அவன் கை தொட வந்து, பின் தன்னிலை அறிந்து விலகுகிறது.
அவன்: உன் வாழ்க்கையை கெடுத்துட்டேன்.. இப்போ அந்த பொண்ண கட்டிக்கிட்டு... அந்த பொண்ண மட்டுமில்ல, இந்த தூவலூரையும் சேர்த்துதேன் கட்டிக்கிட்டேன். ரெண்டு பேரையும் கவுரவம் குறையாம நான் தான் காப்பாத்தணும்
என்றதும் வழியும் அவன் கண்ணீரை துடைக்க அவள் கையெடுக்கிறாள். கண்ணீர் துடைத்த பின் அவள் கையை அவன் பிடித்துக் கொள்கிறான். சாய்தோள் கிடைக்காமல் அலைந்திருந்த அவனின் முடமனதுக்கு அவள் கை ஊன்றுகோலாகிறது. அவள் கையை தன் கண்ணில் வைத்து தன் கண்ணீரை அவள் அங்கீகரிக்க வேண்டுமென்பது போல் ஏங்கி மூச்செறிகிறான். பின் மீண்டும் தன்னிலை புரிந்து கையை விடுவிக்கிறான்.
அவன் மனைவி காபி எடுத்து மேலே வந்து கொண்டிருக்கிறாள்.
அவன்: எனக்கு என் காதல உன்கிட்டயே சொல்லி புரிய வைக்க முடியல.. அந்த பொண்ணுக்கிட்ட எப்படி சொல்லி புரிய வைக்கப் போறேன்னு தெரியல...
என்றதும் மனைவி கதவில் சாயும் சத்தம் கேட்கிறது. அவனிடம் இருந்து அவள் விலகி நிற்கிறாள். மனைவி வந்து காபி கொடுத்துவிட்டு, கீழே கிடக்கும் திருமண புகைப்படத்தை எடுத்து செல்கிறாள்.
எழுந்து நின்று
அவள்: Well, இந்த ஊரு.. அந்த பொண்ணு.. இது போக மூணாவது இடத்துல என்னால இருக்க முடியாது... (கெஞ்சும் குழந்தையை போல்) இந்த நிலையில இருந்து உன்னாலயும் மீள முடியாதில்ல?
அமைதியாக தலை குனிகிறான் அவன்.
அவள்: I love you.. அதையும் யாராலயும் மாத்த முடியாது.
என சென்று பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து
அவள்: நான் போறேன்
அவன்: எங்கே?
அவள்: எங்கேயோ போறேன்.. எங்கப்பாகிட்ட போறேன்..
பெட்டியை வாங்க முயன்றபடி
அவன்: இப்போ ட்ரெயின் ஒண்ணும் இல்ல
அடம்பிடிக்கும் தொனியில்
அவள்: நடந்து போறேன்.. செத்து போறேன்...
என கத்துபவள், சட்டென நிறுத்தி அவனை பார்த்து
அவள்: சாக மாட்டேன். உயிரோட இருந்து, வாழ்க்கை முழுக்க உன்னை காதலிச்சிக்கிட்டே இருப்பேன். இதான் உன் தண்டனை.
என மீண்டும் சென்று நாற்காலியில் அமர்கிறாள். அவன் அவளை நோக்கி திரும்புகிறான்.
அவள்: Leave me alone. நான் தனியா அழணும். தடையில்லாம அழணும்.. யாரும் பார்க்காம அழணும்..
அவளை தேற்ற கண்கலங்கி அவளை அவன் தொட முற்படுகையில்
அவள்: நீ ஏன் அழறே.. உனக்கு சம்பந்தம் இல்லை.. Please go.. Go man....!
அவன் விலகி நடக்கிறான். அவள் உடைந்து அழத் தொடங்கியதும் அவன் ஆறுதல்படுத்த நின்று, வேறு வழியின்றி விலகி நடக்கிறான்.
அந்த அறை, அந்த நாற்காலி, அந்த அழுகை என அந்த அனைத்தையும் நாமும் வாழ்ந்தோம். வாழ்கிறோம். வாழ்ந்துகொண்டே இருக்கிறோம்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!