Cinema
சூப்பர் ஹீரோக்களும், அமெரிக்க அரசியலும்.. உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் The Boys Web series!
சினிமாவில் சாமானியர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அந்தக் காலத்திலெல்லாம் யார் உதவுவார்?
ஹீரோ!
அந்தக் காலத்து எம்.ஜி.ஆர் தொடங்கி இப்படித்தான் அந்தக் காலத்தைய சினிமாக்கள் இருந்திருக்கின்றன.
சமீபமாக ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோக்கள் என ஒரு புது ரகம் அறிமுகமாகி இருக்கிறது.
அந்தக் காலத்தில் சாமானியனுக்கு பாதிப்பு வரும்போது காப்பாற்றும் ஹீரோ, நாளடைவில் மெல்ல வடிவம் மாறிக் கொண்டே வந்தான்.
ஒரு வில்லனை எதிர்ப்பவன் ஹீரோவாக இருந்தான். அந்த ஹீரோ கிட்டத்தட்ட சாமானியன் நிலையில்தான் இருந்தான். அவனுடைய ஹீரோதன்மை, தவறை தட்டிக் கேட்க எடுக்கப்படும் முடிவாக மட்டும்தான் இருந்தது. அத்தகைய ஹீரோதன்மை எந்த சாமானியனும் எட்டி விடக் கூடிய உயரம்தான். சாமானியர் எவரும் ஹீரோவாகி விடும் ஆபத்தை அது சமூகத்தில் உருவாக்கியது. யாரும் அல்லது அனைவரும் ஹீரோவாகி விட்டால் ஆளுபவர்கள் என்ன ஆவது? எனவே ஹீரோவை இன்னும் அதிகப்படியாக்க வேண்டியிருந்தது.
காலப்போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட வில்லன்களை ஹாலிவுட் படைக்கத் தொடங்கியது. குறிப்பாக பிற நாடுகளை வில்லன்களாக்கிக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் சாமானிய நிலையில் இருந்த ஹீரோ சற்று திறன் கொண்டவனாக மாற்றத்துக்கு உள்ளானான். பல திறன்களை பெற்ற அசகாய சூரன் என்கிற தன்மைக்கு அவன் மாற்றப்பட்டான். ராம்போ, ஜேம்ஸ்பாண்ட் போன்ற நாயகர்கள் உருவானார்கள்.
இந்தக் காலக்கட்டத்தில் சினிமாவின் கற்பனைகளிலிருந்து அரசுகளும் அரசமைப்புகளும் உதவியையும் யோசனையையும் பெற்றுக் கொண்டன. ராம்போ போன்ற பாத்திரங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சமூகங்களில் Mercenary எனச் சொல்லப்படும் சர்வதேசக் கூலிப்படை உருவாக்கவும் உந்துசக்தியாக இருந்தன. இத்தகைய அசகாய சூரப் பாத்திரங்கள் பெரும்பாலும் அரசு சம்பந்தப்பட்ட ஆட்களாகவே இருப்பார்கள். முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற சிஐஏ அதிகாரிகள், உளவாளிகள், காவற்படையினர் போன்றோராக இருந்தனர்.
நாடுகளை வில்லன்களாக்கிக் கிடைத்த லாபத்தை தாண்டி இன்னுமதிக லாபம் பெற ஹாலிவுட் விரும்பியது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை தாண்டிய சந்தைகளுக்கு ஹாலிவுட் நகர விரும்பியது. அச்சமயத்தில் உலகமயமாக்கல் பொருளாதாரமும் உருவாகி, எல்லா நாடுகளின் உழைப்பும் மூலதனமும் சுரண்டலும் நாட்டு எல்லைகளை தாண்டி பாயத் தொடங்கியிருந்தன. உலகளாவிய நாயகர்களை ஹாலிவுட் உருவாக்கத் தொடங்கியது. உலகத்துக்கே ஆபத்து வருவதாக கதைகள் வரத் தொடங்கின. உலகையே அழிக்க விரும்பும் அசகாய வில்லர்கள் உருவாக்கப்பட்டனர். அவர்கள், அளவுகடந்த திறன்களை தொழில்நுட்பம் அல்லது ஓர் அற்புதம் போன்வற்றால் வில்லன்கள் பெற்றதைப் போல் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டன.
உலகையே அழிக்கவல்ல வில்லன்களை உருவாக்கியபின் வேறு வழியில்லை. உலகையே காப்பதற்கான ஹீரோக்கள்தான் வழி. எனவே உருவாக்கப்பட்டனர். இவர்கள், வில்லன்கள் கொண்டிருக்கும் திறன்களைத் தாண்டிய திறன்களைக் கொண்டிருப்பவர்களாக உருவாக்கப்பட்டனர். உலகம் சூப்பர் ஹீரோக்களுக்கு அறிமுகமானது.
சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன் போன்ற சூப்பர் ஹீரோ கதைகள் தூசு தட்டி எடுக்கப்பட்டன. புதுப்புது வில்லன்கள் வந்தனர்.
உச்சபட்சமாக அயன்மேன் போன்ற படங்களின் கதைகள் நேரடியாகவே, ராணுவத்துக்கு செலவு செய்வதை அமெரிக்கா குறைத்துவிட்டு சூப்பர் ஹீரோக்களை உருவாக்கும் தொழில்நுட்பத்துக்கு அதிக செலவு செய்யலாம் என யோசனை சொல்லத் தொடங்கின. அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத குற்றவாளிகளை, ஒரு தொழிலதிபர் தான் உருவாக்கும் சூப்பர் ஹீரோ தொழில்நுட்பங்களால் கட்டுப்படுத்துவதாக பேட் மேன் படங்கள் வெளியாயின.
சூப்பர் ஹீரோ படங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து ராணுவத் தளவாடங்களுக்கு விளம்பரம் அளிக்கும் வேலையையும் செய்கின்றன. மறுபக்கத்தில் சிஐஏ மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து ரகசியமாக சூப்பர் ஹீரோ தொழில்நுட்பம் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாகவும் ஒரு கருத்து பரவலாக இருக்கிறது.
சாமானியனைத் தாண்டி, அரசமைப்புகளை தாண்டி, அரசையும் தாண்டிய திறன்களைக் கொண்டு, ஏதோவொரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ராணுவத் தொழில்நுட்பங்கள் ஒரு நாட்டையும் அதன் மக்களையும் காக்கும் நிலையை அடைந்தால் என்னவாகும்?
நாம் பார்த்த சூப்பர் வில்லன்களையும் தாண்டிய விபரீதம் ஏற்படும்.
யாரால் தெரியுமா?
சூப்பர் ஹீரோக்களால்!
நம்ப முடியவில்லையா?
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இருக்கும் Boys என்கிற இணையத் தொடரைப் பாருங்கள்!
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!