Cinema
"திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்க வாய்ப்பு.." - ஆசைகாட்டி மும்பை இளம்பெண்ணை ஏமாற்றிய கும்பல்..
அந்த காலத்தில் இருந்து தற்போது வரை திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வேண்டி பெண்கள், இளைஞர்கள் என பலரும் முயற்சித்து வருகின்றனர். அதில் சிலர் மட்டுமே நினைத்து துறைக்கு போக முடிகிறது; பலர் தங்கள் குறிக்கோளை மாற்றி வேறு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள்.
பாலிவுட்டின் சினிமா சிட்டி என்று அழைக்கப்படும் மும்பைக்கு பலரும், நடிக்க வேண்டி செல்வார்கள். அந்த வகையில், மும்பையை சேர்ந்த நிலேஷா (வயது 21) என்ற இளம்பெண் நடிக்க வாய்ப்பு வேண்டி அழைத்துள்ளார். இதனை நோட்டமிட்ட பியூஸ் ஜெயின், மந்தன் ருபேரல் என்ற இரண்டு பேர் கொண்ட கும்பல் அவரை அணுகியுள்ளனர்.
அவரிடம் தாங்கள் ஐதராபாத்தை சேர்ந்த வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தில் உரிமையாளர்கள் என்றும், தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படங்கள் தயாரிக்கவுள்ளோம். அதில் உங்களுக்கு நடிக்க வாய்ப்பு தருகிறோம். அந்த படத்தில் ரஜினிக்கு மகளாக அல்லது சைபர் ஹேக்கர் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அந்த பெண் யோசிக்க இவர்கள் உடனே அந்த பெண் நடிக்க தேர்வாகியுள்ளதாக அந்த பெண்ணிடம் போலி ஆவணங்களையும் கொடுத்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணிடம் தொலைபேசி மூலம் பேசி வந்த இவர்கள், பாஸ்போர்ட் சரிபார்ப்பு, அரசு அனுமதி போன்ற சட்டரீதியான காரணங்களுக்காக சிறிது பணம் கொடுக்கவேண்டும் என்று கூறி அப்பெண்ணிடம் ரூ.10 லட்சத்தை வாங்கியுள்ளனர்.
பின்னர் அவர்களை மீண்டும் அந்த பெண் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவர்கள் எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் இது குறித்து மும்பை காவல்துறையில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது 'வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ்' என்ற படத்தயாரிப்பு நிறுவனம் பல தெலுங்குப் படங்களை தயாரித்து வருகிறது என்றும், அந்த பெயரை இந்த கும்பல் பயன்படுத்தி இளம்பெண்ணை ஏமாற்றியது தெரியவந்தது. பின்னர் அந்த மோசடி கும்பல் பற்றி அதிகாரிகள் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
படத்தில் நடிக்க ஆசைகாட்டி பலரும் ஏமாற்றி வரும் நிலையில், தற்போது ரஜினிகாந்தின் பெயரை வைத்து இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.10 லட்சம் பறித்துள்ள இரண்டு பேரின் செயல் சினி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!