Cinema

"நானு 13 வருஷமா பாக்குறேன்.. தமிழ்நாட்டுல படம் பண்ணவே பிடிக்கல.." - செல்வராகவன் பேச்சால் சர்ச்சை !

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநராக திகழ்பவர் இயக்குநர் செல்வராகவன். இவர் புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான 'நானே வருவேன்' திரைப்படம் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களுக்கிடையே வரவேற்பை பெற்று வருகிறது. சைக்கோ த்ரில்லராக வெளியான இந்த திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த இவர், தமிழ்நாட்டில் தனக்கு படம் பண்ண பிடிக்கவில்லை என்று இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், "வடக்கில் கூட மாற்று சினிமா எடுக்கிறார்கள். அங்கே பக்கவாட்டு சிந்தனையுடன் பேரலல் சினிமா எடுக்கிறார்கள். ஆனால் தெற்கில் மட்டும் எதுவுமே மாறல. நானும் 13 வருஷமா பார்க்கிறேன். அப்புறம் என்னத்துக்கு இங்கே படம் பண்ணனும்னு தோணுது. எனக்கு உண்மையிலேயே தமிழ்நாட்டுல படம் பண்ணவே பிடிக்கல.

உண்மையிலே இங்கேயே திறமையான கலைஞர்களுக்குப் பஞ்சமில்லை. சூர்யா சாருக்குள்ள இருக்கும் நடிகனை முழுசா வெளிய கொண்டு வரணும். கமல் சார் நினைச்சா இந்த தேசத்தையே கட்டிப்போட முடியும். அது மாதிரி சினிமா செய்யணும். இவங்க மட்டுமல்ல அஜித்,விக்ரம், தனுஷ் என்று ஒவ்வொருவருடைய் ஃபுல் கெப்பாசிட்டிக்கு ஏத்த மாதிரி கதை பண்ணா அவுங்களோடு திறமைக்கு சவாலே இருக்காது.

ஆனா இங்க இப்போ எப்படி இருக்கு தெரியுமா? பருத்தீவிரன் மாதிரி ஒரு ரஸ்டிக் படமோ அல்லது ஒரு நாகரீக கோளாறு பத்தி பேசுற படமோ அல்லது அநியாயங்களைப் பற்றி பேசுற படமோ எது பண்ணாலும் பிரச்சனையாயிடும். இங்க எல்லோருக்கும் மைண்ட்லெஸ்ஸா சிரிக்க ஒரு படம் வேணும்.

இல்ல 10 பேரு கத்த ஒரு படம் வேணும். இங்க கதைக்கே வேலை இல்லை. அப்புறம் என்ன படம் பண்றது பத்தி பேசுறது" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு தற்போது தமிழக சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "DONT CALL ME அண்ணா, UNCLE.." - இணையத்தில் வைரலாகும் Uber ஓட்டுநரின் வேண்டுகோளின் பின்னணி என்ன ?