Cinema
திருமணம் நின்றால் அவமானமா?.. தனி ஒரு பெண்ணின் போராட்டம்: Archana 31 Not Out!
தமிழ்சினிமா கைவிடும்போது நம்பிக்கையுடன் மலையாள சினிமா பக்கம் சந்தேகமின்றி கரையொதுங்கலாம். நிச்சயமாக நாம் ரசிக்கும் வகையில் ஓர் அற்புதமான திரைப்படம் வெளியாகி இருக்கும். அப்படி சமீபத்தில் வெளியான படம்தான் Archana 31 Not Out.
எந்த திரையுலகிலும் வாய்த்திட முடியாத இன்னொரு அற்புதம், கதையின் பிரதானப் பாத்திரமாக பெண் இருப்பதும் மலையாள திரையுலகில் மட்டும்தான். நாயகியே பிரதானப் பாத்திரமாக இருந்து பல படங்கள் வெளியாகி வணிகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் வரவேற்பை பெறுவது மலையாள சினிமாவில்தான். கிரேட் இண்டியன் கிச்சன், ஜுன் போன்ற படங்களெல்லாம் சில உதாரணங்கள்.
அர்ச்சனா 31 நாட் அவுட் படம் மிக எளிய கதை!
அர்ச்சனா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. வரன் அமைவது பிரச்சினையாகவே இருக்கிறது. பல வரன்கள் வருகின்றனர். பார்க்கின்றனர். செல்கின்றனர். மொத்தமாக 30 வரன்கள் வந்து பார்த்துவிட்டனர். வெவ்வேறு காரணங்களுக்காக மணமாகும் வாய்ப்பு நேராமலே போகிறது. அர்ச்சனாவுக்கும் வயது 28 ஆகி விடுகிறது. அப்பாவுக்கு உடம்பு முடியவில்லை. அம்மாவுக்கும் வயதாகிக் கொண்டே இருக்கிறது. வீட்டில் வருமானம் ஈட்டும் ஒரே நபராக அர்ச்சனா இருக்கிறார். அப்பா தன்னுடைய வருமானத்தை எல்லாம் அர்ச்சனாவின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருக்கிறார்.
அர்ச்சனாவின் தோழிகள் பலருக்கு திருமணமாகி விட்டது. பலருக்குக் குழந்தைகள் பிறந்து விட்டன. அச்செய்திகளை அர்ச்சனாவின் செல்பேசிக்கு பகிர்கிறார்கள். ஆனால் அவளோ வாழ்த்து தெரிவிக்கும் இடத்திலேயே இருக்கிறார். அச்சமயத்தில் ஒரு இடர் நேர்கிறது.
அர்ச்சனா பணிபுரியும் தனியார் பள்ளியில் ஆட்குறைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு அர்ச்சனா பணியிழக்கிறார். ஏற்கனவே வாழ்வில் பெரியளவில் பற்று குறைந்து வரும் சூழலில் பணியும் போய்விடுவது அவரை அவநம்பிக்கையின் விளிம்புக்கு தள்ளுகிறது. அச்சமயத்தில் இன்னொரு சம்பவம் நேர்கிறது.
பிரசாத் என்பவரின் சார்பாக அவரது வீட்டிலிருந்து வந்து அர்ச்சனாவை பார்த்துச் செல்கிறார்கள். பிரசாத் வெளிநாட்டில் பணிபுரிவதால் வர முடியவில்லை. குடும்பத்துக்கு பிடித்து போகிறது. தொலைபேசி எண்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
அர்ச்சனாவும் பிரசாத்தும் செல்பேசியில் பேசிக் கொள்கின்றனர். இருவருக்கும் பிடித்து விடுகிறது. செல்பேசியில் பேசி காதல் வளர்க்கின்றனர். இருவருக்கும் நிச்சயமாகி திருமணத்துக்கு நாள் குறிக்கப்படுகிறது.
திருமணத்துக்கான வேலைகள் வேகமாக நடக்கின்றன. பத்திரிகைகள் அடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. அர்ச்சனாவை காதலித்த சதீசன் என்கிற பாத்திரம் ஊருக்கு வருகிறது. போலவே இன்னொரு பெரியவரும் புதிதாக ஊருக்கு வந்து இறங்குகிறார். தோரணங்கள் கட்டப்பட்டு திருமணத்துக்கு முந்தைய நாள் அர்ச்சனாவின் வீடு களை கட்டுகிறது. உறவினர்கள் வருகின்றனர். நண்பர்கள் வருகின்றனர். சில முதியவர்கள் மது அருந்தி ஆடிப் பாடி கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஊருக்குள் புதிதாக வந்து இறங்கிய பெரியவர் வீட்டுக்கருகே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அர்ச்சனாவும் அவரது தம்பியும் முன்னின்று எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உணவு, மண்டபம், உடை என பணத்தை தண்ணீராக இறைத்துக் கொண்டிருக்கிறார் அர்ச்சனா. சதீசனும் வந்து இறங்குகிறான். மது போதையில் ஆடும் பெரியவர்கள் ஒரு பக்கம், சதீசன் ஒரு பக்கம், யாரெனத் தெரியாமல் நின்று கொண்டிருக்கும் புதிய முதியவர் ஒரு பக்கம். விடிந்தால் திருமணம். எதுவும் பிசகாமல் நடக்க வேண்டுமென்ற பதைபதைப்போடு கதை நகர்கிறது.
கிட்டத்தட்ட இரவு விருந்து முடிந்து விட்ட நேரத்தில் அர்ச்சனாவுக்கு ஒரு அழைப்பு வருகிறது. மாப்பிள்ளையான பிரசாத் காணவில்லை என சொல்கிறார் அவரது அண்ணன். அவ்வளவுதான். இடிந்து போகிறார் அர்ச்சனா. விடிந்தால் திருமணம் நடக்காது. துயரம் என்னவெனில் அந்தச் செய்தி அர்ச்சனாவுக்கு மட்டும்தான் தெரியும். எதுவும் தெரியாமல் ஒரு பெரும் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பணமும் செலவழிந்து கொண்டிருக்கிறது. திருமணமாகாது என உள்ளூர சந்தோஷப்பட்ட சொந்தங்களும் வீட்டுக்கு வந்து விட்டனர். இந்த நிலையில் திருமணம் நின்றால் பெரும் அவமானம் நேரும். என்ன செய்வது?
படத்தின் கதைக்களம் இதுதான். பிரசாத் என்னவானார், திருமணம் நடந்ததா இல்லையா என்பவற்றை அற்புதமான படமாக ஆக்கி தந்திருக்கின்றனர். படத்தைப் பார்த்து விடுங்கள். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!